தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முதலில் புலம்பெயர்ந்த தமிழர்களின் பிடியில் இருந்து விடுபட வேண்டும்!- ரவூப் ஹக்கீம்.
13 ஆவது திருத்தச் சட்ட மூலம் தொடர்பாக எவ்வளவுதான் பேசப்பட்டாலும் அது ஒரு போதும் நடக்கப்போகும் காரியம் இல்லை - ரவூப் ஹக்கீம்
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முதலில் புலம்பெயர்ந்த தமிழர்களின் பிடியில் இருந்து விடுபட வேண்டும் எனவும், 13 ஆவது திருத்தச் சட்ட மூலம் தொடர்பாக எவ்வளவுதான் பேசப்பட்டாலும், திருத்தங்களை கொண்டு வர முற்பட்டாலும், அந்த சட்டமூலம் முதலில் பாராளுமன்றத்துக்கு வரவேண்டும், அதன்பின்னர் ஜனாதிபதி அங்கீகரிக்க வேண்டும் போன்ற நடைமுறைகள் இருக்கிறன எனவும், இது நடக்கப்போகும் காரியம் இல்லை எனவும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், கல்முனை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான எச்.எம்.எம்.ஹரிஸ் அவர்களின் ஏற்பாட்டில், "திதுலன கல்முனை" (ஒளிரும் கல்முனை) எனும் அபிவிருத்தித் திட்ட அங்குரார்ப்பண வைபவம் வெள்ளிக்கிழமை இரவு கல்முனைக்குடி ஜும்மா பள்ளிவாசல் முன்பாக நடைபெற்றபோது, அங்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றியபோதே ரவூப் ஹக்கீம் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், கிழக்கு மாகாண சபை தேர்தலின் போது மு.கா. அரசாங்கத்தை விட்டு விலகி விடும் என பலர் எதிர்பார்த்தனர். ஆனால் எதிர்காலத்தை உணர்ந்தே, இரண்டு மாகாண அமைச்சுப் பதவிகளுடன் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இருக்கின்றது. அன்று தமிழ் தலைவர்களும், தமிழ் ஊடகங்களும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசை தூற்றியது. பல இழப்புகளுடன் அரசுடன் இருக்கும் இந்த சூழலில் அமைச்சரவையிலும், அரசாங்கத்துடனும் விவாதிக்க முடிகிறது. தற்போது தமிழ் ஊடகங்களும் தலைவர்களும் அதை பாராட்டுகிறார்கள் என ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்
அத்துடன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எப்போதும் சிறுபான்மையினர் விடயத்தில் விழிப்பாகவே இருக்கும். முதலில் நாங்கள் ஒருமித்த கருத்துடன் செயற்பட வேண்டும். அரசில் உள்ள சில சிறுபான்மை தலைவர்கள் சிறுபான்மையினரின் உரிமைகளை அப்பட்டமாக பறிக்கப்பட எத்தனிக்கும் போது அதற்கும் ஆதரவாளிக்கலாம். இன்னும் சிலர் மௌனமாக இருக்கலாம். ஆனால் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதன் இயல்பான அரசியலையே செய்யும். வடக்கு கிழக்கு முஸ்லிம்களை பாதுகாக்க செயற்படும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வட கிழக்குக்கு வெளியே வாழ்கின்ற முஸ்லிம்களின் பாதுகாப்புக்காகவும் செயற்படும் என ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்
அத்துடன், கல்முனையில் ஹரீஸ் செய்கின்ற அபிவிருத்தி வேலைகள், மற்றையவர்கள் செய்கின்ற காட்டிக் கொடுப்புக்கு கிடைக்கின்ற பரிசாக அமைவது போன்றதல்ல. கிழக்கில் முஸ்லிம் பிரதேசங்களில் ஐக்கிய தேசியக் கட்சி கடுகிற்கும் கிடையாது. ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சிக்கு ஆங்காங்கே கொஞ்சப்பேர் ஏதோ கொண்டு செல்கின்றனர். முஸ்லிம்களின் அதிக பெரும்பான்மையை பெற்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தங்களுடன் இருக்கின்றது என்பதை நினைத்து ஜனாதிபதி பெருமைப்பட வேண்டுமேயன்றி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசை சிறுமைப்படுத்த எத்தனிக்கக் கூடாது. நாம் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்போம் என ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்
மேலும், 13 ஆவது திருத்த சட்டம் தொடர்பாக ஆராய்வதற்காக அரசாங்கம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசை புறக்கணித்துவிட்டு ஒரு தெரிவுக் குழுவை நியமித்துள்ளது. இது பாரதுரமான ஒரு விடயமாகும். அது இலங்கையின் 18 ஆவது திருத்தச் சட்டத்தில் மூன்றாவது தடவை போட்டியிடுவதற்கு ஜனாதிபதிக்கு நாங்கள் கொடுத்த ஆதரவுக்கு செய்த பரோபகாரமாக இப்படியானதொரு விடயத்தை ஜனாதிபதி செய்துள்ளார். பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு உள்ள நம்பகத்தன்மையை குறைந்தபட்சம் முஸ்லிம் காங்கிரசை இணைத்தாவது பெற்றிருக்கலாம். அல்லது இனியாவது இணைத்துக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் அந்த தெரிவுக் குழுவின் யோசனைகளை குப்பையில்தான் போட வேண்டிய நிலை உருவாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(பி.எம்.எம்.ஏ.காதர்)
1 comments :
Hon Minister should know that sensitive ones not needed the remote control
Post a Comment