துருக்கி, சிரியா மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பாசாங்குத்தனம். Bill Van Auken
ஈராக்கில் 2003ம் ஆண்டு புஷ் நிர்வாகம் ஆக்கிரமிப்புப் போரை தொடக்கியதில் இருந்து, ஒரு தசாப்தத்திற்குபின் ஒபாமா நிர்வாகம் சிரியாவில் ஆட்சிமாற்றத்திற்கான ஒரு போரை ஆதரிப்பது வரை, வாஷிங்டன் மத்திய கிழக்கில் அதன் கொள்ளைமுறைக் கொள்கைகளை “மனித உரிமைகள்”, “ஜனநாயகம்” என்னும் மறைப்புக்களில் தொடர்ந்து நடத்திவருகிறது.
முதலில் இக்கூற்றுக்கள், அமெரிக்க இராணுவ வாதம் இப்பிராந்தியத்தில் கொண்டுவந்துள்ள மகத்தான மனிதக் கஷ்டங்கள், அடக்குமுறை ஆகியவற்றால் முற்றிலும் நிராகரிக்கப்படுகின்றன. ஈராக்கை அமெரிக்கா “விடுதலை செய்ததற்கு” ஒரு மில்லியன் உயிர்கள் பலியாயின என மதிப்பிடப்பட்டுள்ளது. இன்னும் பல மில்லியன் மக்கள் அகதிகளாக ஆக்கப்பட்டனர். நாட்டின் உள்கட்டுமானமும் சமூக நிறுவனங்களும் அழிக்கப்பட்டுவிட்டன.
சிரியாவில் அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் நட்பு நாடுகளும் தோற்றுவித்துள்ள குறுங்குழுவாத உள்நாட்டுப் போர் 80,000 மக்களுக்கும் மேலானவர்களின் உயிர்களை காவுகொண்டு விட்டது. அதே நேரத்தில் மில்லியன் கணக்கான அகதிகளை தோற்றுவித்து ஒரு சமூகம் முழுவதையுமே சேதப்படுத்தியுள்ளது.
அதேவேளை அரபு உலகில் தன் மூலோபாய, இலாப நலன்களை தொடர்வதற்கு வாஷிங்டன் நம்பியுள்ள நட்புக் கூட்டுக்களின் விவரங்களையும் தெரிவிக்கின்றன. அவை, பெரியளவில் தங்கள் நாட்டிற்குள்ளேயே எத்தகைய எதிர்ப்பையும் ஈவிரக்கமின்றி நசுக்கும் பிற்போக்குத்தன முடியரசுகள்: சௌதி அரேபியா, கட்டார், பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்டுக்கள், ஜோர்டான். ஜனநாயகத்தை காக்க புறப்பட்ட இந்த அமெரிக்க நட்பு நாடுகள், சிரச்சேதம், சித்திரவதை, ஒருதலைப்பட்ச சிறைவாசம், மத பிற்போக்குத்தனம் மற்றும் துன்புறுத்துதல் ஆகியவற்றை தங்கள் ஒட்டுண்ணித்தன ஆளும் மரபை நிலைநிறுத்த பயன்படுத்துகின்றன.
விவாதிக்கக்கூடிய வகையில் இப்பொழுது பிராந்தியத்திலேயே வாஷிங்டனின் மிகமுக்கியமான நட்பு நாட்டில் நடக்கும் சமூக எழுச்சிகள் அப்பிராந்தியத்தில் அமெரிக்க கொள்கையின் பாசாங்குத்தனத்தையும் போலித்தனம் மிக்க ஜனநாயகக் கருத்துக்களையும் சிதைத்து அம்பலப்படுத்தியுள்ளன.
ஒபாமா நிர்வாகம், நூறாயிரக்கணக்கான இளைஞர்கள், தொழில் நேர்த்தியாளர்கள் மற்றும் பல துருக்கிய குடிமக்கள் என இஸ்தான்பூல், அங்காரா, இன்னும் துருக்கி முழுவதும் உள்ள பல நகரங்களிலும் தெருவிற்கு வந்துவிட்டவர்கள் மீது பிரதம மந்திரி ரெசப் தயிப் எர்டோகன் கட்டவிழ்த்து விட்டுள்ள மிருகத்தன அடக்குமுறைக்கு அதன் மறைமுக ஆதரவை கொடுத்துள்ளது. இத்தாக்குதல் குறைந்தபட்சம் ஐந்து பேரைக் கொன்றுவிட்டது, 5,000 பேரை மருத்துவமனைகளுக்கு அனுப்பியுள்ளது, இன்னும் ஆயிரக்கணக்கானவர்களின் கைதுக்கும் காரணமாக உள்ளது.
வெள்ளை மாளிகையும் வெளியுறவுச் செயலகமும் ஜூன் 11 அன்று தக்சிம் சதுக்கத்தில் அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட மிருகத்தன தாக்குதலுக்குப் பின் நிதானமான மௌனத்தைக் கொண்டுள்ளன. கனமாக ஆயுதம் தரித்த கலகம் அடக்கும் போலீஸ் பிரிவினர் கண்ணீர்ப்புகை குண்டு, நீர் பீய்ச்சுதல், எறிகுண்டுக்கள் இவற்றை நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்களுக்கு எதிராகப் பயன்படுத்துகையில், ஒபாமா நிர்வாகத்தில் எவரும் மனித உரிமைகள் பற்றியோ, ஜனநாயகம் பற்றியோ ஒரு சொல் கூடக் கதைக்கவில்லை.
ஒரு வாரம் முன்பு வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜே கார்னே ஒரு வெற்றுத்தன அறிக்கையை வெளியிட்டு, வாஷிங்டனுடைய உயர்நேச உறுதிப்பாட்டை “வெளியீட்டு சுதந்திரம், கூடும் சுதந்திரம் “ ஆகியவற்றிற்கு அளித்து, அதே நேரத்தில் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக “வன்முறையைத் தூண்டுதலையும்” எச்சரித்தார்.
எர்டோகன் பற்றி ஒபாமா பேசமாட்டார், அறிக்கை விட மாட்டார் என்பதைத் தெளிவுபடுத்தியபின், செய்தித்தொடர்பாளர் முடிவுரையாகத் தெரிவித்தார்: “துருக்கி ஒரு முக்கியமான நட்பு நாடாகும். பாருங்கள், அனைத்து ஜனநாயகங்களிலும் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டி உள்ளன.... பல பிரச்சினைகளிலும் நாம் துருக்கியுடன் தொடர்ந்து உழைப்போம்—ஒரு நேட்டோ நட்பு நாடு என்ற முறையிலும், பிராந்தியத்தில் முக்கிய நாடு என்ற முறையிலும்—அதைச் செய்வதற்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.”
துருக்கியை “பிராந்தியத்தில் முக்கிய நட்பு நாடு” என்று கூறுகையில் கார்னே அது பாதுகாப்பான புகலிட பங்கைக் கொண்டிருப்பதையும், வாஷிங்டன் சிரியா மீது கட்டவிழ்த்துள்ள இஸ்லாமியவாத போராளிகளுக்கு முன்னேற்றத் தளம் என்பதையும்தான் வெளிப்படையாக குறிப்பிடுகிறார். சேச்சென்யா, பால்கன்கள் மற்றும் மேற்கு ஐரோப்பா போன்ற தொலைவிடங்களில் இருந்து வெளிநாட்டுப் போராளிகள் துருக்கிய எல்லை மூலம் அனுப்பப்படுகின்றனர்; துருக்கி CIA நிலையம் ஒன்றிற்கும் ஆதரவளிக்கிறது; அது பில்லியன் கணக்கான பணம், மற்றும் ஆயுதங்கள் என சௌதி அரேபியா, கட்டார், இவை அளிப்பதை எல்லைக்கு அப்பால் நடத்தப்படும் படுகொலைக்கு எரியூட்ட ஒருங்கிணைக்கிறது.
இவ்வகையில் வாஷிங்டன், சிரிய ஆட்சி மாற்றத்திற்கான அதன் போரை, இஸ்லாமியவாத எதிர்ப்புக் குழுக்களை அடக்குவதில் அசாத் காட்டும் கொடூரத்தால் உந்துதல் பெறுவதாக பாசாங்குத்தனமாக கூறுகிறது. ஆனால் எர்டோகன் சமாதான எதிர்ப்புக்களை அடக்குவதை ஆதரிக்கிறது; ஏனெனில் அவை அமெரிக்க போர்த் திட்டங்களில் தலையிடக்கூடும் என்பதால்.
இவை எதுவுமே, போலி இடது அமைப்புக்களின் தொகுப்பை –சர்வதேச சோசலிச அமைப்பு அமெரிக்காவில் இருப்பதில் இருந்து பிரான்சில் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி, ஜேர்மனியில் இடது கட்சி வரை— சிரியாவில் நடக்கும் ஏகாதிபத்திய போருக்கு தங்கள் ஆதரவை கொடுப்பதையும், அதை “புரட்சி” எனக்கூறுவதையும் தடைசெய்யவில்லை.
ஆனால் துருக்கி, சிரியா ஆகியவற்றில் நடக்கும் நிகழ்வுகள் நெருக்கமாகத் தொடர்பு உடையவை. சிரிய ஜனாதிபதி பஷர் அல் அசாத்திற்கு எதிரான அமெரிக்கத் தலைமையிலான போரில் எர்டோகன் பங்கு கொண்டிருப்பது துருக்கிய மக்களிடையே செல்வாக்கற்றுள்ளது. கருத்துக் கணிப்புக்கள் துருக்கிய குடிமக்களில் 70 முதல் 80% வரை இத்தலையீட்டை எதிர்க்கின்றனர் எனக் காட்டுகிறது.
எர்டோகன், சிரியாவில் ஊக்குவிக்கும் போர் துருக்கியையே சூழ்ந்து கொள்ளும் என்னும் பரந்த கவலை உள்ளது. இரட்டை கார்க் குண்டுகள் துருக்கிய எல்லையில் உள்ள ரேஹன்லி சிறுநகரத்தை தாக்கி 50 பேரைக் கடந்த மாதம் கொன்றதை தொடர்ந்து இதே பகுதியில் அல்குவேடாவுடன் இணைந்த அல்நுஸ்ரா முன்னணியின் 12 உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர்; ஆரம்ப அறிக்கைகள் இவர்களிடம் பயங்கரமான சரின் வாயு இருந்தது எனத் தெரிவிக்கின்றன.
துருக்கிய அரசாகத்தின் போர்க் கொள்கை, குறிப்பாக அலாவிக்கள் போன்ற துருக்கியின் பிரதான மத, இன சிறுபான்மையினரிடையே செல்வாக்கற்றுள்ளது. சிரியாவிலுள்ள அல்குவேடா தொடர்புடைய சுன்னி இஸ்லாமிய வெறியர்களுக்கு எர்டோகனின் ஆதரவு, துருக்கியில் இஸ்லாமியவாத சமூகக் கொள்கைகளை சுமத்தும் தனது உள்நாட்டுக் கொள்கையின் விரிவாக்கம் ஆகும். ஒரு புதிய பாலத்திற்கு போல்போரஸ் ஜலசந்தியில் பல்லாயிரக்கணக்கான அலாவிகளைப் படுகொலை செய்த ஒரு 16ம் நூற்றாண்டு ஒட்டோமன் சுல்தான் பெயரைச் சூட்டுவது என்னும் அவருடைய முடிவு இக்கவலைகளை பெருக்கியுள்ளது.
ஒரு அடிப்படை அர்த்தத்தில், துருக்கிய வளர்ச்சிகளான, இராணுவாதம் மற்றும் வெளிநாடுகளில் தலையீடு உள்நாட்டில் ஜனநாயக உரிமைகள்மீது தாக்குதல் மற்றும் பொலிஸ் அரச நடவடிக்கைகள் என்பது அமெரிக்காவிற்குள்ளேயே பிரதிபலிக்கின்றன. இரு நாடுகளிலும் வெளிநாட்டு, உள்நாட்டுக் கொள்கைகள் தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவுகளுடைய இழப்பில், ஆளும் பெருநிறுவன மற்றும் நிதிய உயரடுக்குகளின் நலனுக்களுக்காக தொடரப்படுகின்றன.
ஒபாமா நிர்வாகம் மற்றும் அதன் போலி இடது சொத்துக்கள் “மனித உரிமைகள்”, “ஜனநாயகம்” ஆகியவை பற்றி சிரியாவில் நடத்தும் அறம் பற்றிய கேலிக்கூத்துக்களும், துருக்கியை போலவே முற்றிலும் பாசாங்குத்தனம் என்பதை தெளிவாக்குகின்றன. இவை, மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவின் எண்ணெய் வளம் மிக்க பகுதிகளின் மீது அமெரிக்க மேலாதிக்கத்தை உறுதிப்படுத்த வாஷிங்டனின் அதிகரித்த இராணுவ ஆக்கிரமிப்பு பிரச்சாரத்தின் குற்றம் சார்ந்த தன்மை பற்றி, பொதுமக்களை ஏமாற்ற வடிவமைக்கப்பட்டவை. இப்பிரச்சாரம் துருக்கிய மக்களையும், முழுப் பிராந்தியத்தையும் ஒரு குருதி கொட்டும் போரில் இழுக்கும் அச்சுறுத்தலைக் கொண்டது.
சிரியா, துருக்கி மற்றும் உலகம் முழுவதும் உழைக்கும் மக்களின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளுக்கான போராட்டம், ஏகாதிபத்தியம் மற்றும் முதலாளித்துவ இலாப அமைப்பு எதிராக தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன அரசியல் அணிதிரள்வின் மூலம்தான் நடத்தப்பட முடியும்.
0 comments :
Post a Comment