பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாது அரசு நழுவிக்கொள்வது ஏன்?
பரிந்துரைகளை முழுமையாக அமுல்செய்யாமல் தனக்குச் சாதகமான அம்சங்களை மட்டும் அமுல்செய்துவிட்டு நழுவிக்கொள்ளும் நிலையில் இலங்கை அரசு உள்ளதாக ஐ.நா. சபை மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை குற்றஞ்சாட்டியுள்ளார். கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளில் இலங்கை அரசு தமது விருப்பத்திற்கிணங்க தெரிவு செய்து சிலவற்றையே நடைமுறைப்படுத்துவதாகவும் நவநீதம்பிள்ளை குற்றஞ் சாட்டியுள்ளார்.
குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் ஆகிய விடயங்களில் அர்த்தமுள்ள முன்னேற்றத்தை அரசாங்கம் ஏற்படுத்தத் தவறியுள்ளதாகவும் உண்மையைக் கண்டறியும் தேசிய செயற்திட்டத்தினை வரவேற்பதாகக் குறிப்பிட்டுள்ளார். எனினும் தெரிவு செய்யப்பட்ட அடிப்படையில் ஒரிரு விடயங்கள் மட்டும் அமுல்படுத்தப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் தொடர்பிலான உள்நாட்டு செயன்முறைகளை மனித உரிமை பேரவை கண்காணிக்கும் திட்டம் வரவேற்கப்பட வேண்டியது என அவர் தெரிவித்துள்ளார். நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தித் தொடர்பான பௌதீக விடயங்களில் அரசாங்கம் முதலீடு செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும், அர்த்தமுள்ள நல்லிணக்கம் மற்றும் குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்குதல் போன்றவற்றில் இன்னமும் அபிவிருத்தி ஏற்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment