தமிழ் மக்களுக்கு என்ன கொடுத்தது கூட்டமைப்பு- பசில்
ஜெனிவாவுக்கு சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு ஒரு வீட்டை நிர்மாணிப்பதற்கு தேவையான கல்லைக்கூட பெற்றுக் கொடுத்தார்களா என்பதை ஜெனிவாவில் விளங்கப்படுத்த முடியுமா என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார். வடக்கிலிருந்து பயங்கரவாதிகளினால் வெளியேற்றப்பட்ட தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களை அவர்களது சொந்த மண்ணில் மீள்குடியேற்றியே தீருவோம் எனவும் அவர் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள அடம்பன் கிராமத்தில் 300 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப் பட்ட குடிநீர் விநியோகத்திட்ட த்தை வைபவ ரீதியாக நேற்று ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், கடந்த 20 வருடங்களாக இலங்கையில் வாழும் மக்கள் பயங்கரவாத செயற்பாடுகளினால் பாதிப்புக்குள்ளாகியிருந்தனர். அந்த நிலையினை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மாற்றியமைத்து சகலரும் அனுபவிக்கக் கூடிய சமாதானத்தை ஏற்படுத்தி தந்துள்ளார். அதனை குறிப்பாக வடமாகாண மக்கள் அனுபவித்து வருகின்றனர்.
வெளிநாடுகளில் இருந்து பெறப்படுகின்ற நிதிகளில் அதிகமானவை வடமாகாணத்தின் அபிவிருத்திக்கே செலவிடப்படுகின்றது. முற்றாக வடக்கில் புலிகளினால் அழித்து துவம்சம் செய்யப்பட்ட பல கட்டடங்களை மீள் புனரமைத்துள்ளோம். பாதைகள் நவீனமயப்படுத்தப்பட்டுள்ளன, மதவாச்சி, தலைமன்னார் புகையிரதப் பாதை நிர்மாணப் பணிகள் வேகமாக இடம்பெறுகின்றது. அதேபோல் புத்தளம் மன்னார் ஊடான யாழ்ப்பாண பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
நவீன வைத்தியசாலைகள், பிரதேச செயலகக்கட்டடங்கள் மற்றும் தேவையான பாடசாலை கட்டடங்கள் என்பன நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இவைகளெல்லாம் இங்கு வாழும் மக்களுக்காகவே என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இலங்கையில் 80 சதவீதமாக வாழும் பௌத்தர்களால் வழிபடும் தலதா மாளிகையின் நிர்மாணத்துக்கு கூட வழங்கப்படாத நிதிகள் மடு தேவாலய புனரமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை உலகில் கத்தோலிக்க மக்களது பிரதான வணக்கத் தலமாக மாற்றவேண்டும் என்பதுதான் எமது பிரதான நோக்கமாகும்.
அதேபோன்று தமிழ் மக்களது பிரசித்தம் பெற்ற 5 திருத்தலங்களில் ஒன்றான மன்னார் திருக்கேதீஸ்வரம் கோயில் புனரமைப்புக்கு என 350 கோடி ரூபாய்கள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.
இவைகளெல்லாம் இப்பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்களின் தேவைகளாகவுள்ளது. இவ்வாறு எம்மால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களை தடுப்பதற்கும், மக்கள் அதனை அனுபவிக்கக் கூடாது என்ற நோக்கத்தோடு சர்வதேச புலம்பெயர் சமூகத்திடமும், நாடுகளிடமும் சென்று தமிழ் கூட்டடைப்பு பிழையான தகவல்களை வழங்கிவருகின்றது. புலிகளினால் வெளியேற்றப்பட்ட மக்கள் எங்கிருந்தாலும், எந்த சமூகத்தை, இனத்தை சார்ந்தவர்களாக இருந்த போதும், அவர்களது தாயகத்தில் வாழ வேண்டிய உரிமை அவர்களுக்கு இருக்கின்றது.
அன்று மெனிக் பாமில் இருந்த மக்களை மீள்குடியேற்ற நடவடிக்கையெடுத்த போது, அவர்களை மீள்குடியேற்ற விடாமல் சர்வதேச நிறுவனமொன்றின் பிரதிநிதி அம்மக்களை ஏற்றிச் செல்ல தயாராக இருந்த பஸ் வண்டிக்கு முன்பாக வந்துநின்று செயற்பட்டதை நினைவு கூற விரும்புகின்றேன். அவ்வாறு அதற்கு பயந்து இம்மக்களை மீள்குடியேற்றம் செய்யாமல் இருந்திருந்தால் இன்னும் அவர்கள் அகதி முகாமில் வாழ நேரிட்டிருக்கும்.
அதனையும் காரணமாக கொண்டு ஜெனிவாவுக்கு சென்று அரசாங்கத்திற்கு எதிராக செயற்படும் சதித்திட்டத்தை தற்போது அங்கு சென்றுள்ள தமிழ் கூட்டமைப்பின் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் செய்திருப்பார்கள். அரசியல் காலங்களில் இங்கு வந்து மக்களின் இரத்தத்தை சூடேற்றி, அவர்களை பிழையாக வழிநடத்தி அதன்மூலம் தமது இருப்பை தக்க வைத்துக்கொள்ள முனையும் இது போன்ற அரசியல் வாதிகள், அப்பாவி சமாதானத்தை இன உறவை விரும்பும் இம்மக்களை இனக் கூறுகளாக பிரித்தாள நினைக்கும் எண்ணங்களை கைவிடுமாறு கேட்கின்றேன்.
இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த சமாதானத்தை இல்லாமல் ஆக்க எடுக்கப்படும் எந்தவொரு முயற்சிக்கும் எதிராக இந்த சமாதானத்தை தக்க வைத்துக் கொள்ள எடுக்கப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் நாம் எடுப்போம் என்பதை உறுதியாக கூறிக் கொள்ளவிரும்புகின்றேன் என தெரிவித்தார்.
0 comments :
Post a Comment