இந்தோனேசியாவின் இரகசியமான இனப்படுகொலை
"மேற்குலகிற்கு கிடைத்த நற்செய்தி!" - இந்தோனேசிய இனப்படுகொலையை மகிழ்வுடன் வரவேற்று தலையங்கம் தீட்டிய டைம்ஸ் வார இதழ் (ஜூலை 1966).
"கம்யூனிஸ்டுகளை கொலை செய்வது ஒரு சுகமான அனுபவம்! அவர்களை (இனப்) படுகொலை செய்ததற்காக பெருமைப் படுகிறேன். போர்க்குற்றம் என்றால் என்னவென்று வென்றவர்களே தீர்மானிக்கின்றனர். கம்யூனிசத்திற்கு எதிரான போரில் நாங்கள் வென்று விட்டோம்."
- 1965 ம் ஆண்டு, இந்தோனேசிய இனப்படுகொலையில் ஈடுபட்ட ஒரு கொலைகாரனின் சாட்சியம்.
உலகம் முழுவதும் நடக்கும் இனப்படுகொலைகளை பற்றிய தகவல்களை சேகரிக்கவும், மக்களுக்கு நினைவு படுத்தவும் தயங்காத மனித உரிமை நிறுவனங்களும், ஊடகங்களும், இந்தோனேசியாவில் நடந்த இனப்படுகொலை பற்றி வாயைத் திறப்பதில்லை. எங்காவது ஒரு நாட்டில், இனப்படுகொலை நடந்த பிறகாவது, ஐ.நா. மன்றத்தை கூட்டி விசாரணை நாடகமாடும் சர்வதேச சமூகம், இந்தோனேசிய இனப்படுகொலை நடந்து ஐம்பது வருடங்கள் கடந்த பின்னரும், ஒரு கண்டனத் தீர்மானம் கூட நிறைவேற்றவில்லை. ஏனிந்த இருட்டடிப்பு? ஏனிந்த பாரபட்சம்? ஏனிந்த புறக்கணிப்பு? காரணம்: இந்தோனேசிய இனப்படுகொலையில் கொல்லப்பட்டவர்கள், கம்யூனிஸ்டுகள். எந்த நாட்டிலாவது, கம்யூனிஸ்டுகள் படுகொலை செய்யப்பட்டால், சர்வதேச நீதிமன்றமோ அல்லது ஐ.நா. மன்றமோ தலையிட்டு விசாரிக்க மாட்டாது. இந்தோனேசியா மட்டுமல்ல, சிலி, குவாத்தமாலா போன்ற நாடுகளில் நடந்த "கம்யூனிஸ எதிர்ப்பு இனப்படுகொலைகள்", இன்று வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் வீசப் பட்டு விட்டன.
அண்மையில் இந்தோனேசியாவுக்கு ஆவணப்படம் ஒன்றை தயாரிக்க சென்ற இயக்குனர் Joshua Oppenheimer, ஐம்பது வருடங்களுக்கு முன்னர், அந்த நாட்டில் நடந்த இனப்படுகொலை பற்றி அறிந்து கொண்டார். இனப்படுகொலையினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களும், கொலைகாரர்களும் அருகருகே வாழ்ந்து வருவதைக் கண்டார். பாதிக்கப்பட்ட மக்கள் குற்ற உணர்ச்சியுடன் வாழ்வதையும், இனபடுகொலை செய்தவர்கள் அதனை பெருமையுடன் சொல்லிக் கொண்டு திரிவதையும் நேரில் பார்த்தார். அப்படியானவர்கள் சிலரை தெரிந்தெடுத்து, ஒரு ஆவணப்படம் தயாரித்தார். அதிலே இனப்படுகொலை செய்தவர்கள், தாமாகவே முன்வந்து நடித்திருந்தனர். "கம்யூனிஸ்டுகளை கொல்வது எந்தளவு சுகமான அனுபவம். எத்தனை கம்யூனிஸ்டுகளை, எத்தனை விதமாக கொலை செய்தோம்..." என்று கமெராவுக்கு முன்னால் தைரியமாகக் கூறுகின்றனர். சொல்வதோடு நின்று விடாமல், கொலை செய்த முறையை மீண்டும் ஒரு தடவை நடித்துக் காட்டுகின்றனர். முன்னாள் இனப்படுகொலையாளர்கள் நடித்த, The Act of Killing என்ற ஆவணப்படம், இந்த மாதம் உலகத் திரையரங்குகளில் காண்பிக்கப் படவுள்ளது.
இனப்படுகொலை செய்தவர்கள், எவ்வாறு இந்தளவு தைரியமாக, சுதந்திரமாக நடமாட முடிகின்றது? "இனப்படுகொலையில் ஈடுபட்டதற்காக பெருமைப் படுகின்றோம்." என்று, எவ்வாறு பகிரங்கமாக கூற முடிகின்றது? எல்லாம் அமெரிக்கா கொடுக்கும் தைரியம் தான். ஒரு நாட்டில், கம்யூனிஸ்டுகள் அதிகாரத்தை கைப்பற்ற விடாமல் தடுக்க வேண்டுமானால், எத்தனை இலட்சம் போரையும் இனப்படுகொலை செய்யலாம். அது தவறென்று சர்வதேச சமூகம் கூறாது. அது பாவம் என்று மத நம்பிக்கையாளர்கள் கூற மாட்டார்கள். எந்த ஊடகமும் அதைப் பற்றி ஆராய மாட்டாது. எந்தக் கல்லூரியும் அதைப் பற்றி மாணவர்களுக்கு போதிக்க மாட்டாது.
இந்தோனேசியாவில் இனப்படுகொலை செய்த ஒரு கொலைகாரன் சொன்னதைப் போல, "போர்க்குற்றம் என்றால் என்னவென்று, வென்றவர்களே தீர்மானிக்கிறார்கள்." கடந்த மூவாயிரம் வருட உலக வரலாறு முழுவதும், அவ்வாறு தான் நடந்து கொண்டிருக்கிறது. இன்றைய உலகம் மாறி விட்டதாகவும், நியாயத் தீர்ப்பு வழங்குவதற்கென இயங்கும், ஐ.நா. போன்ற சர்வதேச ஸ்தாபனங்கள் கடமையைச் செய்து வருவதாகவும், எம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம்.
இந்தோனேசியா ஒரு டச்சுக் காலனியாக இருந்தது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னரும், அதற்கு டச்சுக்காரர்கள் உரிமை கோரியதால், அங்கே ஒரு தேசிய விடுதலைப் போராட்டம் நடந்தது. இடையில் சில வருடங்கள், ஆக்கிரமித்த ஜப்பானியர்களுடன், இந்தோனேசிய தேசியவாதிகள் ஒத்துழைத்தனர். இந்தோனேசிய கம்யூனிஸ்டுகள் மட்டுமே, டச்சுக்காரரையும், ஜப்பானியரையும் எதிர்த்து போராடினார்கள். இறுதியில், தேசியவாதிகளிடம் சுதந்திரத்தை கையளிக்குமாறு அமெரிக்கா வற்புறுத்தியதால், டச்சு காலனிய படைகள் வெளியேறின.
அன்று இந்தோனேசியாவை ஆண்ட சுகார்னோவும், அவரது ஆதரவாளர்களும் கம்யூனிஸ்டுகளோ, சோஷலிஸ்டுகளோ அல்லர். அவர்கள் தேசியவாதிகள். உண்மையில் இங்கே தான் பிரச்சினை ஆரம்பமாகியது. உண்மையான, நேர்மையான தேசியவாதிகள், சிலநேரம் மேற்குலக நலன்களுக்கு எதிரானவர்களாக மாறலாம். சுகார்னோ, காலனிய முதலாளிகளின் நிறுவனங்களை தேசியமயமாக்கினார். அமெரிக்காவையோ, ரஷ்யாவையோ ஆதரிக்காத, அணிசேரா நாடுகளின் கூட்டமைப்பை ஸ்தாபித்ததில் சுகார்னாவுக்கு பெரும் பங்குண்டு. மேலும், சீனாவுடனும் நெருங்கிய தொடர்பை பேணி வந்தார். "இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சி, ஜனாதிபதி சுகார்னோவை பொம்மை போல ஆட்டி வைத்ததாக," சில சரித்திர ஆசிரியர்களும் எழுதியுள்ளனர். ஆனால், அது எந்தளவு தூரம் உண்மை என்பது கேள்விக்குறி. இனப்படுகொலைக்கு நியாயம் கற்பிப்பதற்காக, அவ்வாறு வரலாற்றை திரித்திருக்கலாம்.
1913 ம் ஆண்டு, ஹென்க் ஸ்னேவ்லீட் (Henk Sneevliet) என்ற டச்சு கம்யூனிஸ்ட், "இந்தோனேசிய சமூக ஜனநாயக கூட்டமைப்பு" என்ற, கம்யூனிஸ்டுகளுக்கு முன்னோடியான சோஷலிசக் கட்சியை உருவாக்கினார். இவர் நெதர்லாந்து நாட்டின் தேசிய நாயகன். அதற்கான காரணம் வேறு. கம்யூனிசத்தின் பெயரால், இந்தோனேசிய மக்களையும் ஒன்று திரட்டி வந்ததை விரும்பாத டச்சு காலனிய அரசு, அவரை வெளியேற்றியது. ஹென்க் தாயகம் திரும்பி வந்த காலத்தில், நெதர்லாந்து ஜெர்மன் நாஜிப் படைகளினால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தது. நாஜிகளின் யூத மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எதிர்த்து வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தியதால், ஜெர்மன் படையினரால் சுட்டுக் கொல்லப் பட்டார்.
1924 ம் ஆண்டு, "இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சி" (Partai Komunis Indonesia) உருவாகியது. (சுருக்கமாக PKI). 1926 ம் ஆண்டு, டச்சு காலனிய அரசுக்கு எதிராக மாபெரும் மக்கள் எழுச்சி ஒன்று இடம்பெற்றது. அது தோல்வியடைந்ததும், கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப் பட்டது. 13000 கம்யூனிஸ்டுகள் கைது செய்யப் பட்டனர். டச்சு காலனிய அரசு, ஆயிரக் கணக்கான கம்யூனிஸ்டுகளை நியூ கினியா தீவுக்கு நாடு கடத்தியது. (இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயருக்கு அந்தமான் தீவுகள் போன்று, இந்தோனேசியாவை ஆண்ட டச்சுக் காரருக்கு நியூ கினியா). இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர் உருவான, சுகார்னோவின் தேசிய அரசுக்கு எதிராகவும், கம்யூனிஸ்டுகள் மக்கள் போராட்டங்களை நடத்தினார்கள்.
அந்தக் காலத்தில், இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்த மூசோ, ஸ்டாலினுடன் நெருக்கமாக இருந்தவர். இரண்டாம் உலகப்போரில், ஜப்பானிய ஆக்கிரமிப்பாளருக்கு எதிராக போரிட்ட கம்யூனிச கெரில்லாப் படைகளுக்கு சோவியத் யூனியன் உதவி வந்தது. ஆனால், இந்தோனேசியா குடியரசானதும், தேசியவாதிகளுடன் இணைந்து ஒரு தேசிய அரசமைக்குமாறு சோவியத் யூனியன் அறிவுறுத்தியது. ஆனால், மூசொவின் தலைமை அந்த அறிவுரையை ஏற்றுக் கொள்ளவில்லை. 1948 ம் ஆண்டு, டச்சு காலனியாதிக்க படைகளின் வெளியேற்றத்தை பயன்படுத்திக் கொண்ட கம்யூனிஸ்ட் கெரில்லாக்கள், கிழக்கு ஜாவா பகுதியில் ஒரு விவசாயிகளின் எழுச்சிக்கு தலைமை தாங்கினார்கள்.
கிழக்கு ஜாவா விவசாயிகளின் புரட்சி வெற்றி பெற்றதால், அங்கு ஒரு "இந்தோனேசிய சோவியத் குடியரசு" உருவானது. அன்றைய சுகார்னோ அரசு பிரச்சாரம் செய்ததற்கு மாறாக, சோவியத் ஒன்றியம் அந்த கம்யூனிஸ்ட் எழுச்சியை அங்கீகரிக்கவில்லை. ஜாவா விவசாயிகளின் புரட்சிக்கு, வெளியுலக ஆதரவு கிடைக்காத நிலையில், சுகார்னோவின் படைகளால் கடுமையாக அடக்கப் பட்டது. கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் மூசொவும், அந்த யுத்தத்தில் கொல்லப்பட்டார். ஆகவே, "சுகார்னோ கம்யூனிஸ்ட் கட்சியின் பொம்மை போல ஆட்சி நடத்தியதாக" கூறுவது, பின்னாளில் நடந்த இனப்படுகொலைக்கு ஒரு காரணத்தை கண்டு பிடிப்பதற்காக என்பது இங்கே தெளிவாகும்.
1955 ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில், கம்யூனிஸ்ட் கட்சி பதினாறு சதவீத வாக்குகளைப் பெற்று, நாட்டில் நான்காவது பெரிய கட்சியாக உருவானது, சிலர் கண்களை உறுத்தி இருக்கலாம். 1965 ம் ஆண்டு, கட்சி அழிக்கப்பட்ட காலம் வரையில், மூன்று மில்லியன் உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. அன்றிருந்த சோஷலிச நாடுகளுக்கு வெளியே இருந்த எந்த நாட்டிலும், இவ்வளவு பெருந்தொகையிலான உறுப்பினர்களைக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சி இருந்ததில்லை. மேலும், கட்சியோடு சேர்ந்தியங்கிய விவசாயிகள் முன்னணியில் எட்டு மில்லியன் உறுப்பினர்கள் இருந்தனர். இந்த விபரங்கள் யாவும், சிலருக்கு எதிர்காலம் குறித்த அச்சத்தை தோற்றுவித்திருக்கலாம். அன்று அடுத்தடுத்து பல ஆசிய நாடுகளில், கம்யூனிஸ்டுகள் அதிகாரத்திற்கு வந்ததால், இந்தோனேசியாவிலும் ஒரு கம்யூனிசப் புரட்சி உருவாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்று பலர் நம்பினார்கள்.
இந்தோனேசியாவில் மிக முக்கியமாக, நான்கு அரசியல் சக்திகள், கம்யூனிஸ்ட் கட்சியை கருவறுக்க கங்கணம் கட்டின. அவையாவன:
1. இராணுவத்திற்குள் ஒரு பிரிவினர். வலதுசாரி முதலாளித்துவ நலன் சார்ந்த இராணுவ அதிகாரிகளுக்கு, சுகார்ட்டோ தலைமை தாங்கினார்.
2. நிலவுடமையாளர்கள். கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டம் காரணமாக, நிலமற்ற விவசாயிகள் பெருமளவு நிலங்களை ஆக்கிரமித்து வந்தனர். அதனால் நாடு முழுவதும் இருந்த நிலவுடமையாளர்கள், தமது எதிர்காலம் சூனியமாகி விடும் என்று அஞ்சினார்கள்.
3. கடும்போக்கு இஸ்லாமிய மதவாதிகள். இந்தோனேசியா, உலகிலேயே அதிகளவு முஸ்லிம் சனத்தொகையை கொண்ட நாடு. இஸ்லாமிய மதவாதிகள், "நாஸ்திக கம்யூனிஸ்டுகளை" வெறுத்தார்கள். பிற்காலத்தில் இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களாக கருதப்பட்ட மத அடிப்படைவாத அமைப்புகள், அன்றைய கம்யூனிஸ்ட் எதிர்ப்பு இனப்படுகொலையின் ஊடாக வளர்ந்தவை.
4. அமெரிக்கா. அமெரிக்க தூதரகமும், சி.ஐ.ஏ. யும் மிகத் தீவிரமாக இந்தோனேசிய அரசியல் விவகாரங்களில் தலையிட்டு வந்தன. அவர்கள் மேலே குறிப்பிட்ட மூன்று பிரிவினருடனும், மிகவும் நெருக்கமான தொடர்புகளை வைத்திருந்தனர். சுகார்ட்டோ என்ற கொடுங்கோல் சர்வாதிகாரியையும், இஸ்லாமிய மத அடிப்படைவாத தீவிரவாதிகளையும், அமெரிக்கர்களே உருவாக்கினார்கள்.
30 செப்டம்பர் 1965, ஜகார்த்தா நகரில் இராணுவ தளபதிகளின் வீடுகளின் முன்னால் ஒரு டிரக் வண்டி வந்து நின்றது. மிகவும் முக்கியமான ஏழு படைத்தளபதிகளை பிடித்துச் செல்வதே, டிரக் வண்டிகளில் வந்தவர்களின் நோக்கம். கைது செய்ய வந்தவர்களுடன் எதிர்த்துப் போராடியதால், மூன்று பேர் ஸ்தலத்திலே கொல்லப் பட்டனர். மூன்று பேர் அழைத்துச் செல்லப் பட்டு, அடுத்த நாள் கொல்லப் பட்டனர். ஒருவர் பிடிபடாமல் தப்பி ஓடி விட்டார். அடுத்தநாள், 1 ஒக்டோபர் 1965, ஆறு இராணுவ தளபதிகள் கொலை செய்யப் பட்ட செய்தி நாடு முழுவதும் பரவியது. "30 செப்டம்பர் குழு" என்று தம்மை அழைத்துக் கொண்டவர்கள், ஒரு சதிப்புரட்சி நடந்துள்ளதாக வானொலியில் அறிவித்தனர். ஆனால், யார் இந்த சதிப்புரட்சியாளர்கள்? உலகில் இன்று வரை துலக்கப் படாத மர்மங்களில் அதுவும் ஒன்று. அந்த சதிப்புரட்சி, CIA தயாரிப்பில் உருவான நாடகம் என்று சிலர் சந்தேகப் படுகின்றனர். அது உண்மையா? இந்தோனேசியாவில் நடந்த இனப்படுகொலையில், அமெரிக்காவுக்கும் பங்கு உண்டா?
(தொடரும்)
0 comments :
Post a Comment