Tuesday, March 5, 2013

இலங்கையில் அபிவிருத்தி அடையும் மசாஜ் சிகிச்சை

கொழும்பு மருதானையில் பிரபலமான பாடசாலை அமைந்துள்ள வளாகத்தில் ‘மசாஜ் சென்டர்’ என்ற பெயரில் வெளித்தோற்றத்தில் மசாஜ் சிகிச்சை நிலையம்போல நீண்டகாலமாக இயங்கிவந்த இந்த மசாஜ் நிலையம் கடந்த வாரத்தில் பொலிஸாரின் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கியது.

அநுராதபுரம், பொலனறுவை பகுதிகளைச் சேர்ந்த 22 முதல் 25 வயதுக்கு உட்பட்ட இளம் பெண்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் விபசாரத்தில் ஈடுபட்டு வந்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தனர்.இந்த மசாஜ் நிலையத்தை நடத்திவந்த குற்றச்சாட்டின்பேரில் முகாமையாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

திடீர் குற்றங்களை தடுத்தல் மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பொலிஸ் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரீ. கணேசநாதன் தலைமையிலான குழுவினரே இந்த சுற்றிவளைப்பினை மேற்கொண்டதுடன் கொழும்பில் அடிக்கடி இப்படியான சுற்றிவளைப்பு நடைபெறுகின்றபோதிலும் விபசார விடுதிகளை முற்றாக ஒழிக்க முடியாதுள்ளது.

மசாஜ் என்பது அழகு, ஆரோக்கியம் இரண்டும் சம்பந்தப்பட்டதோடு தசைகளில் இறுக்கத்தை நீக்க, தசை வலியைக் குறைக்க, தசை திசுக்களை மென்மையாக்க உதவும் ஒரு கலையாகும் இது கி.மு. 1000 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய மசாஜ் சிகிச்சை இன்று பல நாடுகளில் பல வடிவங்களில் நோய் தீர்க்கும் கலையாக பரிணமித்துள்ளது. உல்லாசத்துறையில் முக்கிய ஓர் அம்சமாகக் கருதப்படும் இந்த மசாஜ் சிகிச்சை நிலையங்கள் அண்மைக்காலமாக இலங்கையிலும் வெகுவாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பல வகையான மசாஜ் முறைகள் உள்ளன. இவை கைகளாலும் கருவிகளைப் பயன்படுத்தியும் செய்யப்படுகின்றன. மசாஜ் செய்வதற்கு பல படிமுறைகள் காணப்படுவதோடு அதற்கென பாடநெறிகளும் பயிற்சிகளும் நடைமுறையில் உள்ளன. தேர்ச்சி பெற்றவர்களால் மாத்திரமே முறையாக மசாஜ் சிகிச்சையினை வழங்க முடியும்.

அதிகமான வருமானத்தை ஈட்டக் கூடிய ஒரு துறையாக இது இருப்பதனால் இத்துறையினை அதிகமானோர் தெரிவு செய்வதாகக் கூறப்படுகின்றது. இவ்வாறு உடம்பு பிடித்து விடும் தொழிலில் ஈடுபடுபவர்களில் எத்தனை பேர் முறையாக மசாஜ் சிகிச்சையினை வழங்குகின்றார்கள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

மசாஜ் சிகிச்சை மூலம் உடலின் தசைகள் தளர்த்தப்பட்டு, அழுத்தப் புள்ளிகளில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யலாம். இரத்த ஓட்டம்அதிகரிப்பதால், சருமம் புத்துணர்வு பெற்று மெருகேறும். உடல் களைப்பு நீங்கும். எல்லாவற்றுக்கும் மேலாக மசாஜ் என்பது உடலின் அநாவசிய சதைகளைக் குறைத்து உடலைக் கச்சிதமாக சரியான அளவில் வைக்கவும், சருமத்தில் சுருக்கங்களோ, தொய்வோ ஏற்படாமல் இளமையுடன் காட்சியளிக்கவும் உதவுகின்றது. சரியான மசாஜ் மூலம் சரும நிறத்தைக் கூட அதிகரிக்கச் செய்ய முடியும். இவ்வாறான பல அனுகூலங்களும் இதனுள் அடங்கிக் கிடக்கின்றது.

மசாஜ் சிகிச்சையில் இவ்வாறான பல அனுகூலங்கள் அடங்கியுள்ள போதிலும் குறுகிய காலத்தில் அதிக பணம் உழைக்கும் நோக்கோடு அதனை பாலியல் தொழிலுக்கு பயன்படுத்துகின்றனர் சிலர் என்பதை கடந்தகால சம்பவங்கள் பல பறைசாற்றுகின்றன.இதற்கு எடுத்துக்காட்டாக கொள்ளுப்பிட்டி செல்லமுத்து அவனியூ பகுதியில் இவ்வாறு மசாஜ் நிலையம் என்ற போர்வையில் மிகவும் சூட்சுமமாக இயங்கி வந்த விபசார விடுதி ஒன்றினைக் கடந்த சில வாரங்களுக்கு முன் சுற்றி வளைத்த பொலிஸார் நடத்துனர் உட்பட பதினொரு இளம்பெண்களையும் கைது செய்துள்ளனர்.

குறித்த விடுதிக்கு வாடிக்கையாளர்களைப் போல் சென்ற பொலிஸ்கான்ஸ்டபிள் ஒருவரிடம் அங்கிருந்த பெண்மணி மசாஜ் சிகிச்சையா? பாலியலா?’ எனக் கேட்டுள்ளார். இதனையடுத்து அங்கு விபசாரம் நடப்பதை ஊர்ஜிதப்படுத்திக்கொண்ட பொலிஸார் சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர். இதுபோன்று ஏராளமான நிலையங்களைச் சுற்றிவளைத்து விபசாரத்தில் ஈடுபட்ட பலரைப் பொலிஸார் கைது செய்தமையும் குறிப்பிடத்தக்கது.விபசாரம் நடைபெறும் இடமாக மசாஜ் நிலையத்தையும் விட்டுவைக்க வில்லை.

பொலிஸாரின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு சட்ட ரீதியான மசாஜ் நிலையங்களில் மிகவும் ரகசியமான முறையில் பல விபசார நாடகங்கள் அரங்கேறிய வண்ணமும் உள்ளன.ஆனால் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட இவ்வாறான மசாஜ் நிலையங்களில் இது போன்ற முறைகேடான நடவடிக்கைகள் இடம்பெறுமாயின் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கக் கூடுமோ எனவும் எண்ணத் தோன்றுகிறது.

அபிவிருத்திகள், உட்கட்டமைப்பு வசதிகள், இலங்கையை ஆசியாவின் ஆச்சரியம் மிக்க நாடாகக் கட்டியெழுப்புவோம் என்று கூறும் அரசாங்கம் அதன் முதற்கட்டமாக கொழும்பை அழகுபடுத்தி வருகின்றது. ஆனால் சமூகத்தை சீரழிக்கும் அவலட்சணமான விடயங்கள் அதிரித்து வருகின்றமை கவலைக்குரிய விடயமே.

எனவே இதுபோன்ற அநாகரிமான செயல்களைத் தடுத்து எமது நாட்டின் கலாசார பாரம்பரிய விழுமியங்களை பாதுகாப்பது உரிய அதிகாரிகளினதும் அரசாங்கத்தினதும் கடமையாகும்.

தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், இந்தியா போன்ற நாடுகளில் உல்லாசப் பயணிகளை ஈர்ப்பதற்காக விபசாரத் தொழில் அந்நாடுகளின் அரச அங்கீகாரத்துடன் வருமானத்துக்காக நடைபெற்றாலும் எமது நாடு பண்பாடு, கலாசாரம் என்பவற்றில் மேலை நாட்டவர்கள் போற்றும் சிறப்புக் கொண்டது. எனவே இவற்றை அனுமதித்தலாகாது.

நாட்டில் பல வடிவங்களில் விபசாரங்கள் அரங்கேறி வருகின்றன. நட்சத்திர ஹோட்டல்கள், விடுதிகள், வீதியோரங்கள் என்பவற்றுக்குப் புறம்பாக பதிவு செய்யப்பட்ட அரசாங்க அங்கீகாரம் பெறப்பட்ட ஆயுர்வேத மற்றும் ஏனைய மசாஜ் நிலையங்களிலும் கூட இந்த விபசார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. அத்தோடு நடமாடும் விபசார நிலையங்களைக் கூட பொலிஸார் சுற்றி வளைத்து பலரைக் கைது செய்துள்ளமையை அண்மைக்காலத்தில் அறியக்கூடியதாக இருந்தது.

கைது செய்யப்பட்டவர்களில் 20வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்ட பெண்களே அதிகமாக உள்ளனர். அத்தோடு இவ்வாறான பெண்களைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த தரகர்களையும் கூட பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் பெப்ரவரி வரையிலான காலப்பகுதியில் விபசாரத்தில் ஈடுபட்ட 98 பேர் கைது செய்யப்பட்டனர்.

321 நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகமான விபசார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டதுடன் அதிகமான பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கைது செய்யப்பட்டவர்களுள் தொலைக்காட்சி நடிகைகள், மற்றும் பல பிரபலங்கள் உட்பட பெருந்தொகையான யுவதிகளும் அடங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அவ்வவ் பிரதேசங்களிலுள்ள நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மூன்று தசாப்த காலம் போரினால் பாதிக்கப்பட்டு அபிவிருத்தியில் பின்தங்கியிருந்த போதிலும் தற்போது புத்துயிர் பெற்றுள்ள அபிவிருத்தியும் புனரமைப்பு நடவடிக்கைகளும் அதிகளவு வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் வருகையால் அந்நியச் செலவாணி ஈட்டும் செயற்பாடும் வரவேற்கத்தக்கதே. இவற்றிடையே இவ்வாறான கலாசாரச் சீரழிவுகள் வெட்கித் தலைகுனியும் நிலையை ஏற்படுத்தும் என்பதே நிதர்சனம்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com