“இத்தாலிய தூதர் இந்தியாவை விட்டு தப்பி வெளியேற முடியாது” -சுப்ரீம் கோர்ட்!
இந்திய மீனவர்களை சுட்டுக்கொன்ற இத்தாலிய கடற்படை வீரர்களை விசாரணைக்காக இந்தியாவுக்கு அனுப்ப முடியாது என்று இத்தாலி கூறிவிட்ட விவகாரத்தில், இரு நாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர முறுகல் மேலும் அதிகரித்துள்ளது. உச்சநீதிமன்றம், “இந்தியாவுக்கான இத்தாலிய தூதர் டேனியல் மன்சினி நாட்டை விட்டு வெளியேறக் கூடாது. அவரை மத்திய அரசு வெளியேற விடக் கூடாது” என்று உத்தரவிட்டுள்ளது.
இந்திய மீனவர்களை சுட்டுக்கொன்ற இத்தாலிய கடற்படை வீரர்கள் இருவரும் இத்தாலிக்கு சென்று விட்டு 4 வார காலத்துக்குள் இந்தியா திரும்பி வர ஜாமீனில் அளிக்கப்பட்டது. இதன்படி இருவரும் 22-ம் தேதி இந்தியா திரும்பி வரவேண்டும். ஆனால், தங்களது நாட்டு வீரர்கள் 2 பேரும் இந்தியா திரும்ப மாட்டார்கள் என இத்தாலிய அரசு அறிவித்தது.
இத்தாலியின் இந்த அறிவிப்புக்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. நாடாளுமன்றத்திலும் இந்த பிரச்சினை உணர்வுபூர்வமாக விவாதிக்கப்பட்டது. அதையடுத்து, இந்தியாவில் உள்ள இத்தாலிய தூதர் டேனியல் மன்சினியை, இந்தியா உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கலாம் எனவும் ஒரு பேச்சு அடிபட்டது.
இது, கிட்டத்தட்ட அந்த நாட்டுடன் ராஜதந்திர உறவுகளை முறித்துக் கொள்ளும் நடவடிக்கை!
இதற்கிடையே நேற்று டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இத்தாலிய தூதர் டேனியல் மன்சினி, “நான் இந்தியாவை விட்டு ஒருபோதும் வெளியேற மாட்டேன்“ என அறிவித்தார். இதுபற்றி அவர் செய்தியாளர்களிடம், “எனது தூதர் பதவியின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் வரை நான் இந்தியாவை விட்டு வெளியேற மாட்டேன். இந்தியாவிலேயே தொடர்ந்து இருப்பதை விரும்புகிறேன்.
மாலுமிகள் பிரச்சினையில் இந்தியாவின் கவலையை இத்தாலிய நாட்டு அதிகாரிகள் பரிசீலிக்கிறார்கள். என்னை இந்திய அரசு அழைத்து இது குறித்து கவலை தெரிவித்தபோது, இந்த கருத்தை தான் அவர்களிடம் கூறினேன். சட்ட பிரச்சினையையும், இருநாடுகளுக்கு இடையே உள்ள உறவு பிரச்சினையையும் தனித்தனியாகத்தான் பார்க்க வேண்டும்” என்றார்.
இப்படியான நிலையில்தான் சுப்ரீம் கோர்ட்டின் அதிரடி உத்தரவு இதற்கிடையே,வந்துள்ளது. “இத்தாலிய தூதர் மன்சினி நாட்டை விட்டு வெளியேறக் கூடாது, அவர் வெளியேறி விடாமல் மத்திய அரசு பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் சுப்ரீம் கோர்ட் முன்பு நேரில் ஆஜராகி, இத்தாலிய கடற்படை வீரர்களை இந்தியாவுக்கு அனுப்ப மாட்டோம் என்று இத்தாலிய அரசு கூறியிரு்ப்பது குறித்து அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் மன்சினிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரம், வெளியுறவுத்துறைக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்த போகிறது!
1 comments :
if so what will happen to the indian ambassodor to Italia....?
Why not "Waico and Co" make a cry against italia
Post a Comment