Friday, March 15, 2013

5 ராணுவ வீரர்களை சுட்டு கொன்றுவிட்டு தப்பிய பாகிஸ்தான் தீவிரவாதி உயிரோடு பிடிபட்டான்

காஷ்மீரில் நேற்று முன்தினம் மத்திய ரிசர்வ் போலீஸ் படை முகாம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினார்கள். கிரிக்கெட் வீரர்கள் போல உடையணிந்து வந்து அவர்கள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் பலியானார்கள். 6 பேர் படுகாயம் அடைந்தனர். ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தைச் சேர்ந்த 4 தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியது பின்னர் தெரிய வந்தது.

தற்கொலை படை பிரிவைச் சேர்ந்த அவர்களில் 2 பேரை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். 2 தீவிரவாதிகள் தப்பிச் சென்று விட்டனர். அவர்களை பிடிக்க காஷ்மீர் மாநிலம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் தாக்குதல் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சத்பல் பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 2 பேரும் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து ஸ்ரீநகர் பகுதியில் இருந்து ராணுவத்தினர் விரைந்து சென்று அந்த பகுதியை முற்றுகையிட்டு தேடுதல் வேட்டை நடத்தினார்கள். அப்போது ஒரு நபர், பாதுகாப்பு படையினர் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். என்றாலும் ராணுவத்தினர் அவரை சுட்டுக் கொல்லாமல் சுற்றி வளைத்தனர். நீண்ட போராட்டத்துக்கு பிறகு அந்த தீவிரவாதியை ராணுவத்தினர் உயிரோடு பிடித்தனர்.

ராணுவத்தினர் நடத்திய விசாரணையில் அந்த தீவிர வாதியின் பெயர் அபு தலிப் என்ற தல்கா என்று தெரிய வந்தது. இவன் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவன். அங்குள்ள முல்தான் நகரில் அவனது பெற்றோர் உள்ளனர். தீவிரவாதி அபு தலிப் பிடம் இருந்து ஒரு டைரி கைப்பற்றப்பட்டது. அதில் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்களின் தொலைபேசி எண்கள் உள்ளன.

இதற்கிடையே மத்திய ரிசர்வ் போலீஸ் படை முகாமில் தாக்குதல் நடத்தி விட்டு தப்பி ஓடி விட்ட மற்றொரு தீவிரவாதி எங்கு பதுங்கி இருக்கிறான் என்று தெரியவில்லை. அவனையும் உயிரோடு பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

தீவிரவாதி சிக்கி இருப்பதன் மூலம் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. அமைப்பு இந்த தாக்குதல் திட்டத்தை தயாரித்து கொடுத்தது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. தீவிரவாதிகளுக்கு உதவி செய்த காஷ்மீரைச் சேர்ந்த பஷீர் என்பவனும் போலீசில் பிடிபட்டுள்ளான். அவனிடம் விசாரணை நடந்து வருகிறது.

நன்றி மாலைமலர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com