Tuesday, March 19, 2013

ஈராக் போரின் 10-ம் ஆண்டு நிறைவில் தற்கொலைப்படை தாக்குதல்: 50 பேர் பலி

ஈராக்கில் சர்வாதிகாரி சதாம் உசைனை அகற்றுவதற்காக கடந்த 2003-ம் ஆண்டு மார்ச் 20-ம்தேதி அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படை போரை தொடங்கியது. இந்த போரில் சதாம் உசேன் ஆட்சி அகற்றப்பட்டது. சதாம் உசேன் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.

இந்த போர் தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்தே, அல்கொய்தாவுடன் இணைந்த சன்னி முஸ்லிம் தீவிரவாதிகள் ஷியா முஸ்லிம்களை குறிவைத்து தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக இன்று தலைநகர் பாக்தாத் மற்றும் ஷியா முஸ்லிம்கள் வாழும் மாவட்டங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பாக்தாத்தில் பரபரப்பான மார்க்கெட்டில் கார்குண்டு வெடித்தது. பாக்தாத்தின் தெற்கு பகுதியில் ஷியா முஸ்லிம்கள் வசிக்கும் நகரில் போலீஸ் தளம் மீது தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவன், டிரக்கினால் மோதி வெடிக்கச் செய்தான்.

இந்த தாக்குதல்களில் குறைந்தபட்சம் 50 பேர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 160 பேர் காயம் அடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த குண்டுவெடிப்புகளுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால் அமெரிக்க படைகளிடம் தோல்வியடைந்த அல்கொய்தா அமைப்புதான் இந்த தாக்குதல்களை நடத்தியிருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.

மத்திய பாக்தாத்தில் வியாழக்கிழமை நடத்திய தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com