Saturday, February 16, 2013

ஆசியாவில் போர் அபாயம்! Peter Symonds

ஆசியாவில் ஒரு புதிய உலகப் போர் வெடிக்கும் அபாயம் குறித்து சர்வதேச அளவில் ஆளும் வர்க்கங்களுக்கு இடையிலான பதட்டம் பெருகி வருவதை இரண்டு சமீபத்திய வருணனைகள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. இந்த இரண்டு வருணனைகளுமே இப்பிராந்தியத்தின் பதட்டமான கடல்பகுதிச் சர்ச்சைகளை, அதிலும் குறிப்பாக சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான பிரச்சினைகளை சுட்டிக் காட்டி, அவற்றை 1914 இல் போட்டி நலன்கள் மற்றும் கூட்டணிகளிடையேயான சர்ச்சைகள் பெருகி தவிர்க்கவியலாமல் முதலாம் உலகப் போர் வெடிப்பதற்கு இட்டுச் சென்ற நிகழ்வுடன் ஒப்பிட்டன.

ஒரு கட்டுரை வெளியுறவுக் கொள்கை சஞ்சிகையில் ஜனவரி 30 அன்று முன்னாள் ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட்டினால் எழுதப்பட்டிருந்த “21 ஆம் நூற்றாண்டின் கடல்வழி பால்கன்கள்” என்ற தலைப்பிலானது. அதில் ரூட் அறிவித்தார்: “கிழக்கு ஆசியாவில் இயல்பு நிலை என்பது இல்லை. கிழக்கு சீனா மற்றும் தெற்கு சீனக் கடலில் பிராந்தியங்களுக்கு உரிமை கோரும் மோதல்களினால் எழும் பதட்டங்களால் இப்பிராந்தியமானது ஒரு நூற்றாண்டிற்கு முன்னதாக இருந்த பால்கன்களின் 21 ஆம் நூற்றாண்டு கடல்பகுதி மறுவுருவமாக நீரிலமைந்த வெடிமருந்துக் கிடங்காக ஆகிக் கொண்டு வருகிறது. தேசியவாத உணர்வு இப்பிராந்தியமெங்கிலும் எழுச்சி கண்டு, மோதல் குறைந்த அணுகுமுறைகளுக்கான உள்நாட்டு அரசியல் களத்தின் இடத்தைக் குறைத்துக் கொண்டிருக்கிறது...பாதுகாப்புத் துறையின் வார்த்தைகளில் சொல்வதானால், 1975 இல் சாய்கோனின் வீழ்ச்சிக்குப் பின்னர் எந்தவொரு நேரத்திலும் இருந்ததை விட இப்பிராந்தியம் மிகவும் எளிதில் நொருங்கத்தக்கதாய் இருக்கிறது.”

கிடன் ராச்மேன் என்ற கட்டுரையாளரும் பிப்ரவரி 4 அன்று ஃபைனான்சியல் டைம்ஸில் எழுதியிருக்கும் “1914 இன் நிழல் பசிபிக் மீது விழுகிறது” என்ற தலைப்பிலான கட்டுரையில் இதே கருத்தை கூறியிருக்கிறார். “முதலாம் உலகப் போரில் மனிதர்கள் ’குருட்டுத் துணிச்சலுடன்’ முன்னேறுவதைக் காட்டும் தேய்ந்து போன பழைய கருப்பு வெள்ளை திரைப்படக் காட்சிகள் எல்லாம் இனி சாத்தியமில்லாத அளவுக்குத் தூரமாகி விட்டதாகத் தோன்றுகிறது. ஆனால் உலகின் மிகப் பெரிய சக்திகள், அவை 1914 இல் செய்ததைப் போல மீண்டுமொரு முறை போரில் இறங்காது என்கிறதான கருத்து ரொம்பவும் மெத்தனமானதாகும். சீனா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா இடையில் அதிகரித்து வரும் பதட்டங்கள் ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு முன்னதாக வெடித்த படுபயங்கர மோதலின் எதிரொலிகளைக் கொண்டு வருகின்றன.

இந்தக் கட்டுரைகளின் தொனி அச்சுறுத்துவனவாக இல்லை. எழுதிய இரண்டு பேருமே உலகப் போர் நெருங்கி விட்டது என்று நம்பவில்லை, ஆனால் அவர்களின் நிதானமான மதிப்பீடுகளில் போரை முழுமையாக நிராகரிக்கவும் அவர்கள் தயாரில்லை. ஜப்பானில் சென்காகு என்றும் சீனாவில் டையாயு என்றும் அழைக்கப்படுகின்ற கிழக்குச் சீனக் கடலில் துருத்திக் கொண்டு நிற்கும் ஒரு தீவுப் பகுதி குறித்த பிராந்திய மோதல் தான் மிக உடனடியான தீப்பற்றும் புள்ளியாக இருக்கிறது. சென்ற செப்டம்பரில் ஜப்பான், தீவுகளை “தேசியமயமாக்கியதில்” இருந்து சர்ச்சைக்குரிய நீர்ப்பகுதி மற்றும் வான்வெளிப் பகுதியில் சீனா மற்றும் ஜப்பானின் கப்பல்களும் விமானங்களும் செய்கின்ற ஆபத்தான பல தந்திர வேலைகள் ஒரு பகிரங்க மோதலை தூண்டக் கூடிய ஒரு சம்பவத்தின் அபாயத்தை அதிகரித்திருக்கிறது.

ஜப்பானில் டிசம்பரில் தேர்தல் நடந்திருப்பதன் பின்னர் நிலைமை இன்னும் சிக்கலாகியிருக்கிறது. ”புதிய ஜப்பானிய அமைச்சரவையில் கடும்போக்கு தேசியவாதிகள் தான் முழுக்க உள்ளார்கள். இவர்கள் சீனாவுடன் மோதுவதில் மிக ஆவலானவர்களாக இருக்கின்றனர்” என்று ராச்மான் குறிப்பிட்டார். சென்ற வாரத்தில் நடந்த சமீபத்திய அத்தியாயத்தில், சீனக் கடற்படைக் கப்பல்கள் இரண்டுமுறை தமது ஆயுத ஏற்பாடுகளை ஜப்பானிய இலக்குகளை நோக்கித் திருப்பியதாக ஜப்பான் குற்றம் சாட்டியது. இதனையடுத்து காரசாரமான பொதுக் குற்றச்சாட்டுகள் மற்றும் மறுப்புகளின் இன்னுமொரு சுற்று தூண்டப்பட்டது.

ரூட்டும் சரி ராச்மேனும் சரி அதிகரிக்கும் புவி-அரசியல் பதட்டங்கள் மற்றும் தேசியவாத ஊற்றெடுப்பின் உண்மையான காரணங்கள் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. ஆழமடைகின்ற உலகப் பொருளாதாரத்தின் நிலைமுறிவில் தான் அக்காரணங்கள் தங்கியிருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக, ஒபாமா நிர்வாகத்தின் பாத்திரத்தையும் ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற தனது கூட்டாளிகளை சீனாவுக்கு எதிரான அவற்றின் பிராந்திய உரிமைகோரல் பிரச்சினைகளைத் தீவிரமாக்கும்படி திட்டமிட்டு ஊக்குவித்திருக்கும் அதன் “ஆசிய சுழல்மைய”த்தின் பாத்திரத்தையும் அவர்கள் மறைக்கின்றனர். பிராந்தியம் முழுவதிலும் ஆஸ்திரேலியா, இந்தியா, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை உள்ளடக்கி சீனாவுக்கு எதிராக இலக்கு கொண்ட இராணுவ கூட்டணிகள், தளங்கள் மற்றும் மூலோபாய கூட்டுகளின் ஒரு அமைப்புமுறையை அமெரிக்கா ஸ்தாபித்துக் கொண்டிருக்கிறது.

இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு சோவியத் ஒன்றியத்தின் உடைவைத் தொடர்ந்து அமைதி மற்றும் வளமையின் ஒரு புதிய காலகட்டம் பிறந்ததாக முதலாளித்துவ வட்டாரங்களில் கொட்டமடித்த காலம் எப்போதோ போய் விட்டது. பனிப்போரின் முடிவு பழைய பெரும் சக்திகளிடையேயான குரோதங்கள் மற்றும் போட்டிகள் அனைத்திற்கும் கதவு திறந்து விட்டிருக்கிறது. உலகெங்கும் கச்சாப் பொருட்களுக்கும், சந்தைகளுக்கும் மற்றும் மலிவு உழைப்பிற்கும் புதிய நவ-காலனித்துவ தேடுதல் வேட்டைக்கும் இவை தீனி போட்டு வருகின்றன. தனது பொருளாதாரச் சரிவிற்கு ஈடுகட்டும் ஒரு அவலமான முயற்சியில் ஒரு போருக்கு அடுத்து இன்னொன்றாய் அடுத்தடுத்து தொடக்குவதற்கு தனது இராணுவ மேலாதிக்கத்தை பயன்படுத்தி வருகின்ற அமெரிக்க ஏகாதிபத்தியம் தான் உலக அரசியலில் மிகவும் ஸ்திரம் குலைக்கும் காரணியாக உள்ளது.

ஒபாமாவின் “ஆசிய சுழல்மைய” திட்டமானது இப்பிராந்தியத்தை, எல்லாவற்றுக்கும் மேல் சீனாவை, உலகின் போட்டிபோடும் உலகப் பெருநிறுவனங்களுக்கான பிரம்மாண்டமான மலிவு உழைப்புக் களமாக மாற்றுவதுடன் பிணைந்திருக்கிறது. சீனாவின் செல்வாக்கைக் குலைக்க ஆசியா முழுவதிலும் அமெரிக்கா மேற்கொள்கின்ற மூலோபாய உந்துதல் என்பது அதன் பசிபிக் கடந்த கூட்டு குழுவாக்கத்தின் மூலமாக வர்த்தக நிபந்தனைகளை உத்தரவிடுவதன் மூலம் அதன் பொருளாதார மேலாதிக்கத்தை பராமரிப்பதற்கு செய்கின்ற முயற்சிகளுடன் பிணைந்திருக்கிறது.

1914 உலக நிலைமையை ஒப்பிட்டு ராச்மேன் எழுதுகிறார்: “நூறு வருடங்களுக்கு முன்னால் ஜேர்மனியைப் போலவே, இப்போது சீனாவும், ஒரு ஸ்தாபகமான பெரும் சக்தி [அமெரிக்கா] தனது எழுச்சியைத் தடுப்பதில் முனைப்பாக இருக்கிறது என்று அஞ்சுகின்ற ஒரு எழுந்து வரும் சக்தியாக இருக்கிறது.” ஜேர்மனியைப் போலவே, கச்சாப் பொருட்களுக்காகவும் சந்தைக்காகவும் உலகெங்கும் தேடியலையும் சீனா, ஆதிக்க சக்திகளுடன் குறிப்பாக அமெரிக்காவுடன், மோதலுக்கு வருகிறது என்பது உண்மையே. ஆயினும் ஜேர்மனியைப் போல சீனா ஒரு ஏகாதிபத்திய சக்தி அல்ல. எரிசக்தி மற்றும் தாதுக்களை அது பாரிய அளவில் இறக்குமதி செய்வது உலகின் மிகப் பெரும் பெருநிறுவனங்களின் உரிமையாக உள்ள, அல்லது அவை விநியோகம் செய்கின்ற பெரும் உற்பத்தி நிறுவனங்களுக்கு தீனி போட்டுக் கொண்டிருக்கிறது. சீனப் பொருளாதாரம் எத்தனை பெரியதாக இருப்பினும், அது முழுமையாக அந்நிய முதலீட்டையும், அந்நிய தொழில்நுட்பத்தையும், அத்துடன் அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் மேலாதிக்கம் செய்யப்படும் ஒரு உலக முதலாளித்துவ ஒழுங்கையும் சார்ந்ததாக இருக்கிறது.

பகுத்தறிவும் பொதுவான பொருளாதார நலன்களும் போரை வென்று விடும் என்கிற நம்பிக்கையுடன் ருட்டும் ராச்மேனும் தங்களது கட்டுரைகளை முடித்துள்ளனர். ஆயினும் இந்த நம்பிக்கைகள் எல்லாம் ராச்மேன் மேற்கோளிடும் ஜோசப் நை என்ற ஹார்வர்ட் பேராசிரியரின் கருத்தில் நொருங்கிப் போகின்றன. இந்தப் பேராசிரியர் அக்டோபரில் சீனாவுக்கும் ஜப்பானுக்கும் பயணம் சென்ற அமெரிக்க உயர் மட்டக் குழுவில் பங்குபற்றியவர். “நாங்களும் 1914 உடனான ஒப்புமை குறித்து விவாதித்தோம்” என்று நை விளக்கினார். “எந்தத் தரப்பும் போரை விரும்புவதாக நான் நினைக்கவில்லை, ஆனால் செய்திகள் தவறாகப் புரிந்து கொள்ளப்படுவது மற்றும் விபத்துகள் குறித்து நாங்கள் இருதரப்புக்கும் எச்சரித்தோம். கட்டுப்பாடுடன் நடந்து கொள்வது பெரும்பாலும் பகுத்தறிந்து செயல்படும் நாடுகளுக்கு உதவியாக இருக்கிறது, என்றாலும் 1914 இன் பிரதான நாடுகள் எல்லாம் பகுத்தறிவு பெற்றிருந்த நாடுகளாகவே இருந்தன.”

நையின் கருத்துகள் போர் என்பது அகநிலை விருப்பங்கள் குறித்த விடயமல்ல, மாறாக அது புறநிலையான சமூக மற்றும் பொருளாதார சக்திகளால் உந்தப்படுவதாகும் என்ற உண்மையை சுட்டிக்காட்டுவதாக இருக்கிறது. 1914 ஐத் தொடர்ந்து, அந்நாளின் மிகுந்த தொலைநோக்கு கொண்ட மார்க்சிச புரட்சியாளர்கள் - லெனினும் ட்ரொட்ஸ்கியும் - போரானது முதலாளித்துவத்தின் முறிவையும் போர் மற்றும் புரட்சிகளின் ஒரு புதிய சகாப்தம் அதாவது ஏகாதிபத்திய சகாப்தம் திறப்பதையும் சமிக்கைசெய்தது என்ற முடிவுக்கு வந்தனர். போர் வெடித்தமையானது முதலாவது தொழிலாளர்’ அரசை நிறுவி சர்வதேசரீதியாக தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களுக்கு ஒரு பெரும் உந்துசக்தியை அளித்த 1917 அக்டோபரில் நடந்த ரஷ்யப் புரட்சியையும் கொண்டுவந்தது.

கடந்த நூற்றாண்டில் ஆழமான பொருளாதார, தொழில்நுட்ப மற்றும் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன, ஆனாலும் முதலாளித்துவத்தின் அடிப்படையான முரண்பாடுகள், அதாவது உலகப் பொருளாதாரத்திற்கும் காலாவதியான தேசிய அரசு அமைப்புமுறைக்கும் இடையிலான முரண்பாடு மற்றும் சமூகமயமாக்கப்பட்ட உற்பத்திக்கும் அத்தனை பொருளாதார நடவடிக்கைகளையும் தனியார் இலாபத்திற்கு கீழ்ப்படியச் செய்வதற்கும் இடையிலமைந்த முரண்பாடுகள் அப்படியே தான் இருக்கின்றன. உலகப் போருக்கும் காட்டுமிராண்டித்தனத்திற்கும் சரிந்து விடாமல் தடுக்கக் கூடிய ஒரே சமூக சக்தி சர்வதேசத் தொழிலாள வர்க்கம் மட்டுமே. இலாப அமைப்பு முறையை ஒழிப்பதன் மூலமும் ஒரு உலகளாவிய திட்டமிட்ட சோசலிசப் பொருளாதாரத்தை ஸ்தாபிப்பதன் மூலமும் தான் அது அதனைச் செய்ய முடியும். 20 ஆம் நூற்றாண்டில் தொழிலாள வர்க்கத்தின் மூலோபாய அனுபவங்களில் இருந்து, எல்லாவற்றுக்கும் மேலாக சர்வதேச ட்ரொட்ஸ்கிச இயக்கம் மார்க்சிச வேலைத்திட்டத்திற்காக நடத்திய நெடிய போராட்டத்தில் இருந்து, பெற்ற படிப்பினைகளை முழுமையாக உட்கிரகித்துக் கொள்வது இதற்கு அத்தியாவசியமானதாக இருக்கிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com