Thursday, February 28, 2013

சீனாவிற்கு எதிரான அச்சுறுத்தல்களை விரிவாக்க சைபர் ஊடுருவல் குற்றச்சாட்டுக்களை அமெரிக்கா பயன்படுத்துகிறது. By Barry Grey

சீன அரசாங்கத்திற்கு எதிரான அச்சுறுத்தல்களை விரிவாக்கம் செய்ய ஆதாரமற்ற சைபர் தாக்குதல் குற்றச்சாட்டுக்களை ஒபாமா நிர்வாகம் பயன்படுத்துகிறது. அமெரிக்கப் பெருநிறுவனம் மற்றும் அரசாங்க வலைத் தளங்களில் ஊடுருவல் குற்றச்சாட்டுக்கள் கடந்த சில நாட்களாக குவிந்துள்ளன, அவற்றின் உண்மை தன்மையை ஆராயாமல் அமெரிக்க செய்தி ஊடகம் இவ்வாறு புரளிகளை பரப்புகின்றது; சீனாவை தனிமைப்படுத்தி, இறுதியில் இராணுவத் தாக்குதலுக்கு தயாரிப்பு நடத்துவதை நியாயப்படுத்துவதற்கு அமெரிக்க பொதுமக்களின் நோக்குநிலையில் பிறழ்வை ஏற்படுத்த ஒபாமா நிர்வாகம் இதைச் செய்கிறது.

சீனாவிற்கு எதிரான சைபர் ஊடுருவல் குற்றச்சாட்டுக்களானது அதிகரித்த அளவில் உள்நாட்டில் கணினி மற்றும் இணையத்தளத் தொடர்புகளைக் கண்காணிக்கவும், சர்வதேச அளவில் சைபர் போர் முறைகளை அதிகமாகக் கையாளவும் பயன்படுத்தப்படும்.

மீண்டுமொருமுறை பென்டகன் மற்றும் சிஐஏயின் சார்பில் செயற்படும் கருவியாக மாறிவிட்ட நியூ யோர்க் டைம்ஸ் பெய்ஜிங்கிற்கு எதிரான சமீபத்திய ஆத்திமூட்டலில் முன்னிலை வகிக்கிறது. “சீனாவின் இராணுவம் அமெரிக்காவிற்கு எதிரான சைபர் ஊடுருவலில் தொடர்புற்றுள்ளது” என்று ஆக்கிரோஷம் நிறைந்த முதல் பக்க கட்டுரை ஒன்றை செவ்வாயன்று வெளியிட்டதுடன், “மின்ணினைப்பு வலையமைப்புத்தான் ஒரு இலக்காக இருக்கிறது” என்று அச்சுறுத்தும் துணைத் தலைப்பையும் கொடுத்துள்ளது.

இக்கட்டுரை, இழிந்த தன்மையையும் பாசாங்குத்தனத்தையும் நிறையவே கொண்டுள்ளது. சைபர் போர்முறையை உலகில் மிகவும் இரக்கமின்றி நடத்தும் நாடு அமெரிக்கா என்பது நன்கு அறியப்பட்டதே. அமெரிக்காவானது இஸ்ரேலுடன் இணைந்து ஈரானிய அணுச்சக்தித் திட்டத்தை Stuxnet என்னும் வைரசை ஈரானிய கணினி முறைகளுக்குள் நுழைத்துள்ளது என்பதை இக்கட்டுரையே ஒப்புக்கொண்டுள்ளது. அந்த நாசவேலையுடன்—அதுவே ஒரு சட்டவிரோத ஆக்கிரமிப்பு நடவடிக்கைதான்—தொடர்ச்சியாக ஈரானிய விஞ்ஞானிகள் படுகொலை செய்யப்பட்ட நடவடிக்கைகளும் வாஷிங்டனுடைய ஆதரவுடன் இஸ்ரேலால் நடத்தப்பட்டன.

டைம்ஸுடன் நெருக்கமான தொடர்பு கொண்டதும் மற்றும் அமெரிக்க இராணுவ, உளவுத்துறை முகவர்களுடன் நெருக்கமான தொடர்பு கொண்டதுமான ஒரு தனியார் கணினி பாதுகாப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள 60 பக்க அறிக்கையை அடிப்படையாக் கொண்டு செய்தித்தாளின் ஒரு முழுப்பக்கத்தையும் கொண்டிருக்கும் முதற்பக்க கட்டுரை இருக்கிறது. ஓய்வூபெற்ற விமானப் படை அதிகாரியால் நிறுவப்பட்டு வர்ஜீனியாவில் அலெக்சாந்த்ரியாவை தளமாகக் கொண்ட மாண்டியன்ட் நிறுவனம் கொடுத்துள்ள இந்த அறிக்கையானது ஷாங்காயைத் தளமாகக் கொண்ட சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் (PLA) ஒரு பிரிவானது அமெரிக்க பெருநிறுவனங்கள், அமைப்புக்கள் மற்றும் அரசாங்க நிர்வாக நிறுவனங்களுள் சைபர் ஊடுருவல் செய்வதில் ஈடுபட்டுள்ளது என்ற ஆதாரமற்ற கூற்றை, சான்றுகள் ஏதும் இன்றி அளிக்கிறது.

அதனுடைய அறிக்கையில் இதே சீன ஊடுருவல் குழுவானது 2006ல் இருந்து 141 சைபர் தாக்குதல்களை நடத்தியதைக் கண்டறிந்துள்ளதாக மான்டியன்ட் கூறுவதுடன், இவைகளில் 115 அமெரிக்கப் பெருநிறுவனங்களை இலக்கு கொண்டவை என்று கூறுகிறது. இணைய தள தடயங்களின் அடிப்படையில், அதாவது இணையத்தள சேவை வழங்குனர்களின் முகவரிகள் (Internet provider addresses) உட்பட, மான்டியன்ட் ஊடுருவலில் 90 சதவீதத் தாக்குதல்கள் அதே ஷாங்காய்ப் பகுதியிலிருந்து வந்துள்ளன என்ற முடிவிற்கு வந்துள்ளது. இதன்பின் அது மக்கள் விடுதலை இராணுவப் (PLA) பிரிவு 61398 இன் தலைமையகம் அதற்கு அருகில்தான் உள்ளது எனக் குறிப்பிடுகிறது. இத்தற்செயல் நிகழ்விலிருந்து மான்டியன்ட் முற்றிலும் ஆதாரமாற்ற கூற்றான சைபர் தாக்குதல்கள் PLA கட்டிடத்திலிருந்துதான் வருகின்றன எனக்கூறுகிறது.

அதனுடைய கட்டுரையில், “நிறுவனமானது சைபர் ஊடுருவல் செய்வோரை 12 மாடிக் கட்டிடத்திற்குள் ஒழுங்கமைக்க முடியவில்லை [PLA பிரிவு 61398 தலைமையகம்]...” என்பதை டைம்ஸ் ஒப்புக்கொள்கிறது. ஆனால் “அரசிற்கு சொந்தமான தொலைத் தொடர்பு நிறுவனத்தின் தீர்மானமான உயர் வேக பைபர் ஆப்டிக் லைன்களை 61398 பிரிவுத் தலைமையகத்தில் அமைப்பது குறித்த ஓர் சீன உள் தொலைத்தொடர்பு சிறு குறிப்பை மான்டியன்ட் கண்டுபிடித்துள்ளது” என்றும் செய்தித்தாள் தொடர்ந்து கூறுகிறது. ஆகவே இக்குறிப்பை சீனக் கணனிகளில் தன்னுடைய ஊடுருவல் மூலம்தான் மான்டியன்ட் “கண்டுபிடித்தது” என்று ஒருவர் கருத முடியும்.

அரசாங்கமோ அல்லது இராணுவமோ ஊடுருவல் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளது என்பதை மறுத்ததுடன், மான்டியன்ட் அறிக்கையை அதனுடைய குற்றச்சாட்டுக்களில் ஆதாரமில்லை என்று சீனாவின் செய்தித் தொடர்பாளர்கள் உதறித்தள்ளிவிட்டனர். சீனப் பாதுகாப்பு அமைச்சரகம் புதனன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு, இணைய தளம் வழங்குனர்களுடைய முகவரிகள் நம்பத்தகுந்த குறிப்பை ஊடுருவல் தாக்குதல்கள் தோற்றுவிக்கும் இடத்தைக் கொடுக்கவில்லையொன்றும், ஏனெனில் ஊடுருவல் செய்பவர்கள் வாடிக்கையாக IP முகவரிகளைத் திருடுகின்றனர் எனக் கூறுகிறது. சீனா எப்பொழுதும் ஊடுருவல் செய்பவர்களால் இலக்கு கொள்ளப்படுகிறது என்றும், இவற்றில் பெரும்பாலானவை அமெரிக்காவில் தோற்றிவிக்கப்பட்டவை என்றும் வெளியுறவு அமைச்சரகச் செய்தித் தொடர்பாளர் சுட்டிக்காட்டினார்.

Dell Secureworks இன் சைபர் பாதுகாப்பு வல்லுனரான Joe Stewart என்பவர் Christian Science Monitor இடம் கூறியதுதான் சீனாவின் நிலைப்பாடாக எதிரொலிக்கப்படுகிறது. அவர் கூறியதாவது, “ஊடுருவல் செய்யும் குழுவான PLA பிரிவு 61398 கட்டிடத்திலிருந்து வருகிறது என்பதற்கு இன்னமும் எங்களிடம் சரியான ஆதாரம் இல்லை; இருப்பதெல்லாம் விந்தையான தற்செயல் நிகழ்வு அத்திசையைக் காட்டுவதுதான் என்பதைத்தவிர. அத்தோடு என்னைப் பொறுத்தவரை இது சரியான சான்று இல்லை.”

டைம்ஸ் கட்டுரையை பின்தொடர்ந்து சீன சைபர் தாக்குதல்கள் குறித்த செய்தி ஊடக அறிக்கைகளை அலையென ஒபாமா நிர்வாகம் கொண்டுவந்தது. புதனன்று இராஜதந்திர அழுத்தங்களை அதிகரித்து, சீனா மற்றும் இன்னும் பிற நாடுகளினால் மேற்கொள்ளப்படும் வர்த்தக இரகசிய திருட்டு அலையை எதிர்க்க இன்னும் தண்டிக்கக்கூடிய சட்டங்களை இயற்ற உள்ளதாக நிர்வாகம் கூறியது. நிர்வாகமானது “அபராதங்கள், தண்டனைகள் மற்றும் கடுமையான வர்த்தகக் கட்டுப்பாடுகள்” ஆகியவை சீனாவிற்கு எதிராக கொண்டுவரப்படுவது குறித்து விவாதிக்கிறது என்று அசோசியேட்டட் பிரஸ் தகவல் கொடுத்துள்ளது.

ஒபாமாவின் முதலாவது பதவிக் காலத்தில் “ஆசியாவின் இயக்க மையம்” என்ற பெயரில் நடத்தப்பட்ட சீனாவிற்கு எதிரான அமெரிக்கத் தாக்குதலின் விரிவாக்கத்தைத்தான் சமீபத்திய பிரச்சார தாக்குதல் சுட்டிக்காட்டுகிறது. அக்கொள்கையானது கிழக்கு சீனா மற்றும் தெற்கு சீனக் கடற்பகுதிகளில் சீனாவிற்கும் கிழக்கு ஆசியாவில் ஜப்பான், வியட்நாம், பிலிப்பைன்ஸ் உட்பட தொடர்ச்சியாக நாடுகளுக்கு இடையே நடக்கும் மோதல்களை தூண்டிவிடுதலும் அடங்கியிருந்தது.

இதில் நெருக்கமான இராணுவ உறவுகள் நிறுவப்படுதல், புதிய அமெரிக்கத் தளங்களை இந்தியா, ஆஸ்திரேலியா உட்படப் பல நாடுகளில் நிறுவுதல் மற்றும் சீனாவை இராணுவ அளவில் சுற்றிவளைத்தல் ஆகியவைகள் அடங்குகின்றன.

தன்னுடைய கட்டுரையை முடிக்கும் வகையில், டைம்ஸானது “அரசின் தொடர்பிற்கான பெருகியுள்ள சான்றுகள்.... மற்றும் அமெரிக்க உள்கட்டமைப்பிற்கு பெருகும் அச்சுறுத்தல்கள் ஆகியவைகளுக்கு கடுமையான விடையிறுப்பு தேவை என முக்கிய அதிகாரிகள் முடிவிற்கு வரும் நிலைமையை கொண்டுவந்துள்ளன” என்று எழுதியுள்ளது. இது உளவுத்துறைக் குழுவின் குடியரசுக் கட்சித் தலைவரும் குடியரசுக் கட்சியை சேர்ந்தவருமான மைக் ரோஜர்ஸ் சீனா கட்டாயமாகப் பின் வாங்குவதற்கு வாஷிங்டன் “அதிக விலையை கொடுக்க” வேண்டும் என்று கூறியுள்ளதை குறிப்பிட்டுள்ளது.

புதனன்று வெளியிட்ட தலையங்கத்தில், நிர்வாகமானது அமெரிக்க இணைய தள சேவை வழங்குனர்களுக்கும் வைரஸ் எதிர்ப்பு விற்பனை நிறுவனங்களுக்கும் சீன ஊடுருவல் குழுக்களின் கையெழுத்துக்கள் பற்றித்தகவல் கொடுக்க முடிவு எடுத்துள்ளதாகவும், இதையொட்டி அமெரிக்க இணைய தளங்களுக்கு இக்குழுக்கள் அணுகும் வாய்ப்பை மறுத்துவிட்டன என்றும் டைம்ஸ் தெரிவிக்கிறது. மேலும் கடந்த வாரம் ஜனாதிபதி ஒபாமா ஒரு நிர்வாக ஆணையை அரசாங்கத்திற்கும் தனியார் நிறுவனங்களுக்கும் இடையே சைபர் அச்சுறுத்தல்கள் குறித்து தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படுவது அதிகரிப்பதற்கு இசைவு கொடுத்துக் கையெழுத்திட்டார்; இதில் முக்கிய உள்கட்டுமானமாகிய மின்ணிணைப்பு வலையமைப்பைக் (electrical grid) கண்காணிப்பதும் அடங்கும்.

சீன தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது “இலக்கு வைக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளுக்கு” தன்னுடைய தலையங்கத்தில் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் அழைப்பு விடுத்துள்ளது.

இத்தகைய புதிய சீன எதிர்ப்பு பிரச்சாரத்தின் பின்னணியானது இது அமெரிக்க இராணுவத் திறன்களின் ஆக்கிரோஷமான விரிவாக்கத்தின் ஒரு பகுதியாகவும், இதில் மரபார்ந்ததும் மற்றும் சைபரை தளமாகக் கொண்டதுமா.ன இரண்டும் அடங்கும் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. தன்னுடைய பெப்ருவரி 12 அன்று கூட்டரசு நிலை குறித்த உரையிலும் சைபர் போர் பிரச்சினையை ஒபாமா எழுப்பியதுடன், அமெரிக்க “எதிரிகள் நம் மின்ணிணைப்பு வலையமைப்பு, நம் நிதிய நிறுவனங்கள் மற்றும் நம் விமானப் போக்குவரத்து முறைகளை நாசமாக்க முற்படுகின்றனர்” என்று கூறி அத்தகைய தாக்குதல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று வலியுறுத்தினார்.

இதே உரையில் அவர் டிரோன் (ஆளில்லா விமானம்) மூலம் படுகொலை செய்யும் திட்டத்திற்கும் ஆதரவு கொடுத்தார்; இது ஜனாதிபதிக்கு உலகில் எங்கும் எவரையும், அமெரிக்கக் குடிமக்கள் உட்பட கொல்லும் வரம்பற்ற, ஒருதலைப்பட்ச அதிகாரம் உள்ளது என்னும் கூற்றைத் தளமாகக் கொண்டது.

கடந்த அக்டோபர் மாதம், ஒபாமா ஒரு நிர்வாக ஆணையில் கையெழுத்திட்டு, இராணுவ அதிகாரமானது சைபர் தாக்குதல்களை நடத்தவும், முன்பு ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் எனக் கருதப்பட்டவற்றை “பாதுகாப்பு” நடவடிக்கைகள் என்று மீண்டும் வரையறுத்தும் உத்தரவிட்டார். இதில் கணினி இணைய தளங்களை துண்டித்துவிடுவதும் அடங்கும். பாதுகாப்பு மந்திரி லியோன் பானெட்டா ஓர் ஆக்கிரோஷ உரையில் “சைபர் பேர்ல் ஹார்பர்” நடத்தப்படும் என்று எச்சரித்தார். டைம்ஸ் ஏட்டிடம் பானெட்டா, “மூன்று விரோதத் திறன்கள் உள்ளன; பெரும் வளர்ச்சியடைந்துவரும் தகுதிகளையுடைய ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் ஆகும்” என்றார்.

ஜனவரி மாத இறுதியில், சீன அதிகாரிகள் தனது செய்திச் செயற்பாடுகளில் ஊடுருவல் செய்வதாகக் நியூ யோர்க் டைம்ஸ் குற்றம் சாட்டியது; இக்குற்றச்சாட்டை வாஷிங்டன் போஸ்ட்டும், வோல்ஸ்ட்ரீட் ஜேர்னலும் விரைந்து ஆதரவுகொடுத்தது. அமெரிக்க இராணுவம் அதனுடைய சைபர் கட்டுப்பாட்டகத்திற்கு வேலைசெய்யும் நபர்களை ஐந்து மடங்கு அதிகரிக்க ஒப்புக்கொண்டுவிட்டது என்று வாஷிங்டன் போஸ்ட் அதே கிழமையில் தெரிவித்தது. ஜனாதிபதிக்கு தவிர்க்க இயலாது முன்கூட்டிய சைபர் போர்த் தாக்குதல்களுக்கு ஒப்புதல் தரும் அதிகாரம் இருக்கிறது என்ற முடிவிற்கு வந்துள்ளதாகக் ஒபாமா நிர்வாகம் கூறியதாக சில நாட்களுக்குப் பின் அதனுடைய முதல் பக்கத்தில் டைம்ஸ் தெரிவித்தது.

சீனாவிற்கு எதிரான இத்தகைய ஆக்கிரோஷ நிலைப்பாடு மற்றும் சைபர் போர்முறை வழிகளின் விரிவாக்கம் ஆகியவைகள் உள்நாட்டில் பெருகும் ஜனநாயக உரிமைகளுக்கான அச்சுறுத்தல்களுடன் இணைந்துள்ளன. சைபர் போர்த் திட்டங்களில் அமெரிக்காவிற்குள் இராணுவ நடவடிக்கை விருப்பத் தேர்வுகளும் அடங்கியுள்ளன. இராணுவமானது “அமெரிக்காவிற்குள் முக்கிய சைபர் தாக்குதல் பிரச்சினைகளில் இராணுவ ஈடுபடுத்தலை” மேற்கொள்ளும் என்றும் அது குறித்த சில தெளிவற்ற நிபந்தனைகளையும் கூறியதாக இம்மாதம் முன்னதாக டைம்ஸ் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை அதிகரிக்கும் முயற்சியாக இணைய தளம் மற்றும் இணைய தளத் தொடர்புகளை கண்காணித்தல் ஆகியவைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. கடந்த வாரம்தான், மிச்சிகனின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரான ரோஜர்ஸ் மற்றும் கலிபோர்னியாவின் ஜனநாயகக் கட்சி செனட்டர் டச் ருப்பர்ஸ்பெர்கர் ஆகியோர் சைபர் உளவுத்துறை பகிர்வு மற்றும் பாதுகாப்புச் சட்டத்தை (CISPA) மீண்டும் அறிமுகப்படுத்தினார்கள். அரசாங்கம் மின்னஞ்சல்களையும் பிற இணைய தளத் தொடர்புகளையும் உளவு பார்க்க அனுமதிக்கப்படும் என்ற விதிகளையொட்டி எழுந்த எதிர்ப்புக்களுக்கு மத்தியில் கடந்த ஆண்டு இச்சட்டவரைவு செனட்டில் காலாவதியாயிற்று.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com