Sunday, February 10, 2013

எனைத் தேங்காய்க் கள்ளியாக்கியது ஆரோ?

இலங்கையில் பள்ளிக்கூடத் தேவைக்காக 8 தேங்காய்கள் திருடியதன் பேரில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றின் முன்கொண்டுசென்று, தற்போது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள 13 வயதுச் சிறுமியின் கதைபற்றிவாசகர்கள் அறிவர். நாளுக்கு நாள் இந்த விடயம் சார்ந்த செய்திகள் இலங்கையின் எழுத்து மற்றும் மின்னூடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அது சார்ந்த கவிதையொன்று இங்கே களம் காண்கிறது.

இல்லாமை எனில் இருப்பதுகண்டும்
இயல்பா யெலாரும்போல் எனைநோக்கி
பொல்லா லடிப்பது போல் சொன்னார்
பூச்சிக்கென கொண்டுவா பணமென!

இல்லாமையால் தவழும் எனில்வெட்கம்
இன்று தராதுவிடின் பெரும்வெட்கம்
பொல்லா களவென்ன களவோ எனஉன்னி
பறித்த தேங்காயில் பறித்தேன் சில!

கண்டுவிட்டார் எனை விரட்டிவந்தார்
கூண்டுக்குள் அடைத்திட பாடாய்ப்பட்டார்
கண்டார் பெருமகிழ்ச்சி எனையுள்ளேதள்ளி
கண்டேன் சமூகத்தை அழுதேன் எண்ணி!

பேராறாய் நான் அழுதிட்டபோதும் பாரார்
பரிதவிக்கின்ற நிலையும் காணார்
ஊரவர் எல்லோரும் பகட்டாய் வாழ
ஊர்பள்ளியில் படிப்பதற்காய் செய்தேன்பிழை!

இனியும் வாராதார் யாருளர் திருட்டுக்குள்
இப்படி யநியாயங்கள் மலிந்தால் பாரில்
தீனியிலை எங்களுக்களுக்குள் அவர்க்கு
தேவை எம்பணம் மட்டும் - அதிலேகுறியவர்!

போதும் போதுமையா உங்கள் நன்மைகள்
பரிதவித்து மடிகின்றோம் வேண்டாம் கரம்
சூதும் வாதும் வேதனைசெயும் என்பார்
சத்தியமாய் எமைநோக்காயின் வருமிடரே!

கூண்டுக்கு ளடைத்து மானம்பறித்து
குற்றம்கண்டு பிணைக்குள் விடுதலைதந்து
ஈண்டு செய்த நல்லவரே நீங்கள் ஐயா!
இத்தலத்து அழித்திடவே வறுமை பாரும்!

-கலைமகன் பைரூஸ்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com