Friday, February 15, 2013

பணத்தைச் சுரண்டுவதே ஆட்சியாளரின் முக்கிய நோக்கம்! என்கிறார் வெலிகம தொகுதி அமைப்பாளர் கயான் சஞ்ஜீவ

நாட்டை அபிவிருத்தி செய்வதாக முலாம் பூசிக்கொண்டு நாட்டின் பணத்தை பைகளில் நிரப்பிக்கொள்கின்றனர் இன்றைய ஆளும் கட்சியினர் என்று தென்மாகாண சபை ஐதேக உறுப்பினரும், வெலிகம தொகுதியின் பிரதான அமைப்பாளருமான கயான் சஞ்ஜீவ குறிப்பிட்டார்.

வெலிகம பிரதேச சபை உறுப்பினர் அஜ்மல் ஸத்தாரின் இல்லத்தில் இன்று இரவு நடைபெற்ற வெலிகமைத் தொகுதியில் ஐதேகவின் முக்கிய கிளைகளை மீளக் கட்டியெழுப்பும் ஊருக்கு ஊர் - வீட்டுக்கு வீடு ஒன்றுகூடலில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இன்று பொதுமக்கள் மூன்றுநேர உணவு ஒருபுறம் இருக்க இரண்டுநேர உணவுக்கே கஷ்டப்படுகின்றனர். சுதந்திரக் கட்சி அரசாங்கத்துக்கு வாக்களித்தவர்கள், அதற்குப் பல்வேறு வழிகளில் பங்களிப்புச் செலுத்தியவர்கள் இன்று எம்மிடம் அவர்களைத் திட்டித் தீர்க்கிறார்கள். அவர்களின் ஒரேநோக்கம் பணத்தைச் சூரையாடுவதே. அன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, யுத்தம் முடிவடையும் வரை உங்கள் வயிற்றுப்பட்டிகளை இறுக்கிக்கொள்ளுங்கள்.. அதன் பின்னர் நாம் தளர்த்திக் கொள்ளலாம். விடிவு பிறக்கும். இராணுவத்திற்க்காக செலவு செய்யக் கூடிய பணத்தை அபிவிருத்திக்காக ஒதுக்கலாம். நகரத்துக்கு நகரம், கிராமத்துக்குக் கிராம்ம் நாம் பணிகளை மேற்கொள்ளலாம்.தெற்காசியாவின் அதிசயமாக இலங்கையைக் கட்டியெழுப்பலாம் என்றார்.

இன்று தலைகீழாகவே எல்லாம் நடைபெறுகிறது. நாட்டில் அபிவிருத்தி என்று ஊடகங்கள் படம் காட்டுகிறது. ஐதேக இந்த ஆண்டு நடுப்பகுதிக்குள் தன்னுடைய பலம் ஏது என்பதைக் காண்பிக்கும். அதற்கான முன்னெடுப்பே கிராமத்துக்குக் கிராமம் ஐதேகவுக்குள் அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்படுவது என்று குறிப்பிட்டார்.

வெலிகம பிரதேச சபை உறுப்பினர் அஜ்மல் ஸத்தார் தலைமையில் நடைபெற்ற இந்த ஒன்றுகூடல் நிகழ்வின்போது தொடர்ந்து உரையாற்றிய மாகாண சபை உறுப்பினர்,

இன்று முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள ஹலால் சான்றிதழ் விடயத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக அரசாங்கம் மறைமுகமாக ஒத்துழைக்கிறது. இலட்சக் கணக்கான ரூபாய்களை ஹலால் எதிர்ப்பு அறிவித்தல்களை அச்சிடுவதற்காக வழங்குகின்றது. இது பற்றி எமது கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் மங்கள சமரவீர அவர்கள் தெளிவாக இன்று அதுபற்றித் தெளிவுறுத்தினார்.

ஐதேக இனங்கள் எல்லாவற்றையும் ஒன்றாய்க் கருதுகிறது. சிங்களவர், முஸ்லிம்கள், தமிழர்கள், பர்கர் என இனம் பார்ப்பதில்லை. நீண்ட காலத்திற்குப் பிறகு வரலாற்றில் முதல் தடவையாக வெலிகம பிரதேச சபைக்கு இரு ஐதேக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருப்பது காத்திரமானதாக இருக்கிறது. பிரதேசத்தின் உறுப்பினர் அஜ்மல் ஸத்தார் எமது கட்சிக்காக, என்னோடு சேர்ந்து நிறைய பங்களிப்பு செய்கிறார். எதிர்காலத்தில் இலங்கையில் பேசப்படுகின்ற முஸ்லிம் தலைவர்களைப் போல் அவரும் மின்னக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம் இருக்கின்றன. அவரைப் பற்றி கட்சித் தலைமையகத்திற்கும் நான் அறிவித்திருக்கிறேன். அவரை உயர்பதவியில் வைக்க வேண்டியது எனது கடமை. நிச்சயம் நான் அ தனை நிறைவேற்றுவேன்.

நாங்கள் எதிர்க்கட்சியினராக இருப்பதனால் எங்களுக்கு ஒதுக்கப்படும் பணத்தால் பாரியளவில் உதவமுடியாமல் இருக்கிறது. அதற்காக வருந்துகிறேன். என்றாலும் என்னால் முடியமான எந்தவொரு பங்களிப்பையும் இந்த ஊருக்கு வழங்கத் தயங்க மாட்டேன் என்றும் குறிப்பிட்டார்.

(கலைமகன் பைரூஸ்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com