Tuesday, February 26, 2013

கண்ணில் அரிப்பு கண்ணால் நீர்வடிதல் இவற்றை எப்படி தடுப்பது ?

கண்ணில் அரிப்பு, கண்ணால் நீர்வடிதல், கண்ணைக் கசக்குதல், கண்மடல் வீங்குதல், வெளிச்சத்தைப் பார்க்கக் கூச்சம் எனச் சிலருக்கு கண்களே தொல்லையாகி விடுவதுண்டு.இவை எல்லாம் கண்ணில் ஒவ்வாமையின் Eye Allergy அறிகுறிகளாகும்.இவை பொதுவாகத் தனியாக வருவதில்லை. தும்மல், மூக்கால் வடிதல், மூக்கடைப்பு போன்ற வேறு ஒவ்வாமைகளுடன் கைகோர்த்து வருவதுண்டு.

பொதுவாக ஒவ்வாமைகளுக்குக் காரணம் என்ன? தூசி, புழுதி, போன்றவை காரணமாகலாம். வாசனைத் திரவியங்கள், அழகுசாதனப் பொருட்கள், கடுமையான மணங்கள் காரணமாகலாம்.

சிலருக்கு சீதோசன காலநிலைகளும் காரணமாகலாம். பூக்கள் மகரந்தங்கள் போன்றவையும் காரணமாகலாம். தூசிப் பூச்சி, ஒட்டடை, பூனை நாய் போன்ற வளர்ப்பு மிருகங்களின் ரோமம் போன்றவையும் சொல்லப்படுகிறது.

கீழ்கண்ட ஆலோசனைகளை The American Academy of Allergy Asthma and Immunology வழங்குகிறது.

வீட்டைவிட்டு வெளியே போகும் போது தூசி, மகரந்தம் போன்றவை கண்ணில் விழாமலிருக்க பரந்த விளிம்புள்ள தொப்பிகளை அணியுங்கள். தொப்பி தலையில் வெயில் மழை படாமலிருக்க மட்டுமின்றி இந்த வகையிலும் உதவுகிறது என்பதை பலரும் மறந்து விடுகிறார்கள்.

அதே போல கண்ணாடி, கருப்புக் கண்ணாடி அணிவதாலும் ஒவ்வாமையை ஏற்படுத்தும் பொருட்கள் கண்ணில் நேரடியாகதத் தாக்காது காப்பாற்றலாம்.

வெளியில் போய் வந்ததும் கண்களை நீரினால் கழுவுங்கள். நன்கு அலசிக் கழுவினால் ஒவ்வாமையை ஏற்படுத்தும் பொருட்களை அகற்ற முடியும். சோப் போட வேண்டியதில்லை.

கொன்டக்ட் லென்ஸ் contact lenses.போடுவராயின் அதனை அகற்றுவதும் உதவும்.எவ்வளவு அரித்தாலும் கண்களைக் கசக்குவதைத் தவிருங்கள்.அரிப்புடன் கிருமித் தொற்றும் கண்ணில் நுண்ணிய உரசல்களும் பிரச்சனையை மோசமாக்கும்.
உங்கள் மருத்துவரைக் காணுங்கள்.

ஒவ்வாமையைத் தணிக்கும் மாத்திரைகளை அல்லது, அதற்கான கண் துளி மருந்துகளையும் அவர் தருவார். சில தருணங்களில் இரண்டையும் சேர்த்தும் தரக் கூடும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com