Thursday, January 31, 2013

புதிய தேர்வுக்குழு தலைவராக சனத் ஜெயசூர்ய நியமனம்!!

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தேர்வுக்குழு தலைவராக, முன்னாள் நட்சத்திர வீரர் சனத் ஜெயசூர்ய நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுநாள் வரை தலைவராக இருந்த அசந்த டீ மெல்லின் பதவிக்காலம் நிறைவடைவதை தொடர்ந்து புதிய தேர்வுக்குழுவை விளையாட்டு அமைச்சு அறிவித்தது.அதன்படி எதிர்பார்த்தபடி தேர்வுக்குழு தலைவராக இலங்கை அணியின் முன்னால் கேப்டனும் ஆளும் கட்சி எம்.பியுமான சனத் ஜெயசூர்ய நியமிக்கப்பட்டுள்ளார். ஏனைய உறுப்பினர்களாக ஹேமந்த விக்ரமரத்ன, பிரமோதய விக்ரமசிங்க, ஷமிந்த மெண்டிஸ், எரிக் உப்பஷாந்த ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் விக்ரமரட்ன மட்டுமே இரண்டாவது தடவையாக தெரிவுக்குழுவில் நீடிக்கிறார். ஏனைய அனைவரும் புதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தான் புதிய தலைவராக நியமிக்கப்பட்டது தொடர்பில் சனத் ஜெயசூர்ய கருத்து தெரிவிக்கையில், இலங்கை கிரிக்கெட் அணியில் திறமைகளுக்கு தட்டுப்பாடு கிடையாது. திறமைகளை சரியான முறையில் இணங்கண்டு தயார்படுத்துவதே தேவையாக உள்ளது. இலங்கை தேசிய அணிக்கு இளைய வீரர்கள் பலரை களமிறக்கலாம். அவர்கள் திறமையோடு காணப்படுகின்றனர். இவர்கள் சிரேஷ்ட வீரர்களின் இடங்களை தங்களால் நிரப்ப முடியும் என்பதனையும் தமது விளையாட்டின் மூலம் நிரூபித்துள்ளனர் என தெரிவித்தார்.

இதேவேளை ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதனால், இவரது நியமனம் அரசியல் சம்பந்தப்பட்டது என்ற கருத்துக்களை நிராகரித்த சனத் ஜெயசூர்ய, இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக இலங்கைக்காக போட்டிகளில் பங்குபற்றியுள்ளேன். தேர்வாளர் தலைமை பதவிக்கு தகுதியானவனாகவே தன்னை கருதுவதாக தெரிவித்தார்.

43 வயதான சனத் ஜெயசூர்ய, 1996 ம் ஆண்டு இலங்கை உலக கோப்பையை வெல்வதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர். அவர் 110 டெஸ்ட் போட்டிகளிலும் 445 ஒரு நாள் போட்டிகளிலும், 31 T20 போட்டிகளிலும் அவரது வாழ்நாள் கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார்.

அண்மையில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை அணியில் பல இளம் வீரர்கள் இடம்பெற்றிருந்ததுடன் சிறப்பாக தங்களது திறமையை வெளிப்படுத்தியிருந்தனர். இதனால் ஒரு நாள் தொடரை சமப்படுத்தவும், T20 ஐ கைப்பற்றவும் இலங்கை அணியால் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com