Thursday, January 31, 2013

கட்டிகளை கரைக்கும் சப்பாத்திக்கள்ளி!!

நமது இரத்தத்தில் பலவிதமான செல்கள், கனிம, கரிமப்பொருட்கள் கலந்துள்ளன. இவை உறுப்புகளுக்கு தேவையான ஊட்டச்சத்தை தருவதுடன் செல் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றன.டிபன்ஸ் மெக்கானிசம் என்று சொல்லப்படும் செல்களின் தற்காப்பு செயலுக்கு இரத்த அணுக்கள் பெரிதும் உதவுகின்றன. உணவுப்பாதை, மூச்சுப்பாதை, தோல் போன்றவற்றின் வாயிலாக நமது உடலுக்குள் நுழையும் நுண்கிருமிகள் இரத்த அணுக்களுடன் சண்டையிடும் போது அழிந்துவிடுகின்றன அல்லது இரத்த அணுக்களால் தூக்கியயறிப்பட்டு தோலின் வாயிலாக வெளியேற்றப்படுகின்றன.

இவை வியர்வை துவாரங்களை அடைத்து கட்டிகளை உண்டுபண்ணுகின்றன. அதுமட்டுமின்றி தோலின் வாயிலாக உடலுக்குள் செல்லும் நுண்கிருமிகளும் இரத்தத்தை சென்றடைய முடியாமல் தோலிலேயே தங்கி ஆரம்பத்திலேயே அழிக்கப்பட்டு தோலில் கட்டிகளாக மாறுகின்றன.

இந்தக் கட்டிகள் நாட்கள் செல்லச் செல்ல பெரிதாகி, சிவந்து, உடைந்து சீழாக வெளியேறி பின் புண்களாக மாறி ஆறுகின்றன. இதனால் இயற்கையாகவே கிருமிகள் கிருமிகளாலே அழிக்கப்பட்டு உடல் பாதுகாக்கப்படுகிறது. இவ்வாறு தோன்றும் கட்டிகள் சிலந்தி கட்டிகள், உஷ்ண கட்டிகள், பிளவை கட்டிகள் என பல வழக்கப் பெயர்களால் அழைக்கப்படுகின்றன.

இவ்வாறு தோலில் தோன்றும் கட்டிகள் நாளுக்குநாள் பெரிதாகி கடும் வேதனையை உண்டாக்குவதுடன் குறிப்பிட்ட அளவு வளர்ந்ததும், சீழ் கோர்த்து உடைகின்றன. கட்டிகள் முற்ற ஆரம்பித்ததும் அவற்றை மருத்துவரின் மேற்பார்வையில் கீறி, புண்களை ஆற்ற வேண்டும். இல்லாவிட்டால் உறுப்புகள் அழுகிப் போக ஆரம்பித்துவிடும். சாதாரண கட்டிகளை ஆரம்ப நிலையிலேயே பழுக்கச் செய்து உடைத்து விடவேண்டும். கட்டியை எளிதாக பழுக்கச் செய்து உடைக்கும் அற்புத ஆற்றலுடையது மட்டுமின்றி வறண்ட பகுதிகளில் கூட செழித்து, வளர்ந்து காணப்படும் எளிய மூலிகைதான் சப்பாத்திக்கள்ளி.

ஒபன்சியா டிலேனி என்ற தாவரவியல் பெயர் கொண்ட கேக்டேசியே குடும்பத்தைச் சார்ந்த சப்பாத்திக்கள்ளியின் தண்டுகளே இலைகளாக மாற்றுரு கொண்டுள்ளன. இதன் இலைகளில் ஏராளமான அளவு நீர்ச்சத்தும், ஆர்பினோகேலக்டன், குர்சிட்டின் மற்றும் பிளேவனால்கள் போன்ற வேதிச்சத்துக்களும் காணப்படுகின்றன. இவை கிருமிகளை அழித்து இரத்தக் கட்டிகளை கரைக்கும் தன்மையுடையவை.

முட்களுள்ள சப்பாத்திக்கள்ளியின் இலைத்தண்டை பிளந்து, வெளிப்புறமுள்ள முட்களை நீக்கி, உட்புறமாக சிறிது மஞ்சளை தடவி, அனலில் வாட்டி, கட்டிகளின் மேல் இறுக்கமாக கட்டி வைத்து வர ஆரம்ப நிலையிலுள்ள கட்டிகள் விரைவில் உடைந்து புண் எளிதில் ஆறும். புண் ஆற தாமதமானால் மஞ்சளை தேங்காய் எண்ணெயுடன் கலந்து தடவி வர விரைவில் குணமுண்டாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com