Thursday, January 31, 2013

பிரச்சினை முடியும் வரை மட்டு. மாவட்டத்திற்கு தேர்தல் இல்லை —தோதல் ஆணையாளர்

எல்லை நிர்ணய செயற்பாடுகள் நிறைவுற்ற பின்னரே மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் அம்மாவட்டத்தின் எட்டு பிரதேச சபைகளுக்குமான தேர்தல்களை நடத்த முடியுமென தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப் பிரிய தெரிவித்தார்.புதிய உள்ளூராட்சிச் சபை தேர்தல் திருத்தச் சட்டத்திற்கிணங்க உள்ளூர் அதிகார சபைகளின் எல்லைகள் நிர்ணயம் செய்யும் பணிகள் நிறைவு பெறும்வரை மேற்படி தேர்தல்களை நடத்த சட்டரீதியான சாத்தியப்பாடுகள் இல்லையெனவும் தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகர சபைக்கான தேர்தல் மற்றும் அத்தோடிணைந்ததாக மேலும் எட்டு பிரதேச சபைகளுக்குமான தேர்தல்கள் பாதுகாப்புக் காரணங்களுக்காகப் பின்போடப்பட்டிருந்ததுடன் அத்தேர்தல்கள் மீண்டும் 2008 மார்ச் மாதம் 10 ஆம் திகதி நடாத்தப்பட்ட இந்த உள்ளூராட்சிச் சபைகளுக்கான பதவிக் காலம் 2012 மார்ச் 10 ஆம் திகதி நிறைவடைந்தது எனினும் சில தவிர்க்க முடியாத காரணங்களால் அவற்றின் பதவிக் காலத்தை 2013 மார்ச் 17 ஆம் திகதி வரை உள்ளூராட்சி மாகாண சபை அமைச்சரினால் ஒத்திவைக்கப்பட்டது.இதற்கிணங்க தேர்தல்களை நடத்துவதற்கான பெயர் குறித்த நியமனங்களைக் கோரும் அறிவித்தல் 2013 ஜனவரி மாதம் முதல் இருவாரங்களுக்குள் வெளியிட உத்தேசித்திருந்த போதிலும் தேர்தல்களை நடத்துதல் தொடர்பான உள்ளூராட்சிச் சபைகள் தேர்தல்கள் திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய திருத்த சட்டம் ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வருவதாக மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சு வர்த்தமானி அறிவித்தலினூடாக பிரகடனம் செய்தது.இதன்படி புதிய திருத்தத்திற்கிணங்க உள்ளூராட்சி சபைகளின் வட்டார எல்லைகள் நிர்ணயம் செய்யும் பணிகள் நிறைவுறும் வரை மட்டக்கள்பபு மாநகர சபை மற்றும் மேலும் 8 உள்ளூராட்சி சபைகளின் தேர்தல்களை நடத்தமுடியாதுள்ளது எனவும் தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்தார்.

அத்துடன் குறிப்பிட்ட திருத்தத்தில் உள்ளூராட்சிச் சபைகளின் பிரதிநிதிகளின் வெற்றிடங்களை நிரப்புதலுடன் தொடர்புடைய பிரிவு திருத்தம் செய்யப்பட்டுள்ளதால் தற்போது செயற்பாட்டிலுள்ள மாநகர சபைகள், நகர சபைகள் மற்றும் உள்ளூராட்சிச் சபைகளின் மக்கள் பிரதிநிதிகளுக்கான வெற்றிடத்தை நிரப்ப முடியாதுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com