போதைப்பொருள் வர்த்தக நிலைகளை முற்றுகையிடுவீர். கோத்தா உத்தரவு.
நாட்டில் போதைப்பொருள் பரிமாற்றங்கள் நடைபெறும் நிலையங்களை முற்றுகையிடுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது. போதையற்ற தேசத்தை உருவாக்கும் மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்திற்கு இணங்க போதை பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டங்களை தங்கு தடையின்றி நிறைவேற்றும் பொருட்டே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
பாதுகாப்பு செயலாளரின் உத்தரவுக்கமைய போதை பொருள் ஒழிப்பு தொடர்பான விசேட சுற்றிவளைப்புக்கள் நாடெங்கும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கூடுதலாக போதை பொருள் பரிமாற்றங்கள் இடம்பெற கூடியதாக இனங்காணப்பட்டுள்ள பிரதேசங்களை தழுவக்கூடியவாறு சுற்றி வளைப்புக்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. விசேட புலனாய்வு உத்தியோகத்தர்களை கொண்ட சுற்றி வளைப்பு குழுக்கள் இதற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
பாரியளவு போதை பொருள் வர்த்தகங்களில் ஈடுபடுவோரை கைது செய்வதை நோக்காக கொண்டே இவ்வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக போதை பொருள் ஒழிப்பு பணியகம் தெரிவிக்கின்றது.
ஒழுக்க விழுமியங்களை விருத்தி செய்து, நட்பிரஜைகளை உருவாக்கும் நோக்குடன் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் போதைப் பொருள் ஒழிப்பு பணியகம் மேலும் தெரிவிக்கின்றது.
கடந்த ஆண்டில் பணியகத்தினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் ஊடாக 47 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
0 comments :
Post a Comment