ஐ.தே.க உறுப்பினர்கள் நிவாரணம் வழங்குவதற்கு தடை.
அரசியல் செயற்பாடுகள் தவிர, ஏனைய நிவாரண நடவடிக்கைகள் மற்றும் சங்கங்கள், நிறுவனங்களின் நிகழ்வுகளுக்கு தலைமை தாங்குவதும், அதில் பங்கேற்பதும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். இதனடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைப்பாளர்கள், நிவாரண பணிகளில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் தலைவரின் உத்தரவை மீறினால், பதவியும், கட்சி அங்கத்துவமும் பறிபோகும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.
கட்சி யாப்பின்படி, தலைமைத்துவத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம், ரணில் விக்ரமசிங்க, இவ்வுத்தரவை பிறப்பித்துள்ளார். இதன் பிரகாரம், நிவாரண நடவடிக்கைகள் மற்றும் தொண்டர் அமைப்புகளுடாக மேற்கொள்ளப்படும் நிவாரண பொருள் விநியோகம் ஆகியவற்றில், ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைப்பாளர்கள் பங்கேற்பதற்கு, தடை விதிக்கப்பட்டுள்ளது.
வெள்ள நிவாரணம் மற்றும் ஏனைய நிவாரணங்களை வழங்குவதற்கு, அரச சார்ப்பற அமைப்புகளும், அரசாங்க அமைப்புகளும் இருப்பதால், ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் அவற்றில் பங்கேற்பது, அனாவசியமானதென, எதிர்க்கட்சி தலைவர் உத்தரவிட்டுள்ளதாக, அக்கட்சி உள்ளக வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. அத்துடன் கட்சி அமைப்பாளர் ஒருவரோ, மக்கள் மன்ற உறுப்பினர்களோ, இதுபோன்ற அமைப்பொன்றை உருவாக்குவதும், தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு அமைப்பொன்றை உருவாக்கினால், அந்த பிரமுகர், கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் விலகிக்கொள்ள வேண்டுமென, ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளதாக, தெரியவந்துள்ளது.
இது தொடர்பான அறிக்கையொன்றை பெற்றுக்கொடுக்குமாறு, கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயகவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, சிறிகொத்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, கட்சியில் வெற்றிடமாக உள்ள பிரதி தலைவர் பதவிக்கு பெர்ருத்தமானவர்களை நியமிப்பது தொடர்பான முக்கியமான பேச்சுவார்த்தையொன்று, இன்று கட்சி தலைவர் ரணில் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெறவுள்ளது.
முன்னாள் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச மீண்டும் பிரதி தலைவர் பதவியை கோரியுள்ள போதிலும், ரணில் விக்ரமசிங்க இதுவரை அது தொடர்பாக எதுவித முடிவுகளையும் மேற்கொள்ளவில்லையென, தெரியவந்துள்ளது.
பிரதி தலைவர் பதவிக்கு மேலும் 4 பேரின் பெயர்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடநத வெள்ளிக்கிழமை ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்ற விசேட கூட்டத்தில், தலைவரின் கட்டளையை உரிய வகையில் பின்பற்ற வேண்டுமென, சஜித் பிரேமதாசவிற்கு, ரணில் விக்ரமசிங்க, உத்தரவிட்டார்.
பதவி பறிபோன சஜித் பிரேமதாச, தற்போது அரசியல் வங்குரோத்து நிலையை அடைந்துள்ளார். இன்று நடைபெறவுள்ள விசேட கூட்டத்தின் பின்னர், பிரதி தலைவர் யார் என்பது, அறிவிக்கப்படவுள்ளது. அத்துடன் கட்சி தலைவருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் படி, ஒரு பிரதி தலைவர் அல்ல, ஒன்றுக்கும் மேற்பட்ட பிரதி தலைவர்களையும் நியமிக்க முடியுமென, கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
0 comments :
Post a Comment