Tuesday, January 15, 2013

மக்கள் மீது உள்ள வெறுப்பில் தடுமாறும் ஊடகங்கள்!

ஊழல் என்பது பணமோசடி மட்டுமல்ல கருத்து ரீதியான மோசடி, மக்களை ஏமாற்றுதல், பிழையான வழிகாட்டுதலைச் செய்தல், அரசியல் ரீதியான குற்றம் போன்றவையும் ஊழல் தான் என்பது நமது இன்றைய புரிதல்

நம் தமிழ் ஊடகங்கள் இன்னமும் தங்கள் எளிமையான சூத்திரங்களை விட்டு வெளியே வருவதாக இல்லை. அரசையும் அரச இராணுவத்தையும் திட்டிக்கொண்டிருப்பதன் மூலம் கிடைக்கும் கெத்தே நமது மக்களுக்குப் போதும் என்று கருதுகிறார்கள். அவர்கள் வாழ்வுக்கு என்ன வழி என்றோ இன்றைய நிலையிலிருந்து மக்கள் தம்மை உயர்த்திக் கொள்வது எப்படி என்றோ எதுவும் சிந்திக்கத் தேவையில்லை; யாரையாவது பழிசொல்லித் திட்டிக்கொண்டிருக்கும் கிறுகிறுப்பே போதும் என எல்லோரையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆவேசங்களையும், பகைவெறுப்பையும் வைத்துக்கொண்டு, உண்மைகளை மக்களிடம் மறைத்து வருகின்றனர். உண்மை களைச் சொல்லிவிட்டால் மக்களிடம் ஏற்றிவைத்திருக்கும் உணர்ச்சிகர ஆவேசங்களும் அரசுக்கெதிரான - மாற்று இனத்த வர்க்கெதிரான வன்மங்களும் தணிந்துவிடுமோ என்று பொய் யர்களையும் பித்தலாட்டக்காரர்களையும் மக்கள் மத்தியில் தலைவர்களாக உயர்த்தி வருகின்றன இந்த ஊடகங்கள். அவர்கள் அரசை எதிர்த்து நாலு வீரவசனங்களைச் சொல்வதே போதும் இவர்களுக்கு. அவர்கள் எத்தகைய கேடு கெட்டவர் களாக இருந்தாலும் அவர்களை வீர நாயகர்களாக்குகின்றன இந்த ஊடகங்கள்.

அதனால்தான் நிதிநிறுவன மோசடி மூலம் மக்களை நடுத் தெருவில் விட்டுவிட்டு ஓடிப்போனவர்களெல்லாம் திரும்பவந்து தலைவர்களாவதற்கும் இந்த ஊடகங்கள் உதவுகின்றன. அவர் அரசை எதிர்த்து நாடாளுமன்றத்திலும் யாழ்ப்பாணம் பஸ் ஸ்ராண்டிலும் முடிந்தால் பிபிசி பேட்டியிலும் நாலு வீரவசனங் களை முழங்குவாராக இருந்தால் சரி. அதன்பிறகு அவர்கள் பஜிரோவில் ஏறிப் போய்விடலாம்; டிப்ளோமற் வீசாவில் வெளிநாடுகளில் உள்ள குடும்பத்தினரிடமும் போய்விடலாம். தமிழ் மக்களுக்கான தீர்வை அரசாங்கம்தான் வைக்கவேண்டும், அல் லது அதை சர்வதேசம் பார்த்துக்கொள்ள வேண்டும். அது குறித்து எந்தத் திட்டத்தையும் இவர்கள் தமிழ்மக்களிடம் சொல்ல வேண்டியதில்லை.

அதுபோல், இந்த ஊடகங்கள் உருவாக்கி வைத்திருக்கும் தலைவரின் அலுவலகத்திலிருந்து வெடிபொருட்கள், ஆபாச சிடிக்களை எல்லாம் பொலிசார் சென்று கைப்பற்றலாம்; அவரது உதவியாளரை ஆதாரங்களுடன் கைது செய்துகொண்டும் போகலாம். அவர் அரசை எதிர்த்து வீரவசனங்கள் பேசுபவராக இருந்தால், பொலிசார்தான் எல்லாவற்றையும் கொண்டுபோய் வைத்துவிட்டு எடுத்துச் செல்கிறார்கள் என்று எந்த ஆதாரங்களு மில்லாமல் விழுந்தடித்து எழுதி, மக்களுக்கு அந்தக் குற்றவாளிகளே நாயகர்கள் என்று ஆக்கும் இந்த ஊடகங்கள்.

மக்கள் உணர்ச்சிகளைத் திருடி அவர்களது வாழ்வ்வை கொள்ளையடிக்கும் அரசியலிலிருந்து அவர்களை வாழ வைக்கும் நடைமுறைச் சாத்திய அரசியலுக்கு மாறவேண்டும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com