Tuesday, January 15, 2013

புதிய பிரதம நீதியரசராக, ஜனாதிபதி சட்டத்தரணி மொஹான் பீரிஸ், சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

இலங்கையின் 44வது பிரதம நீதியரசராக ஜனாதிபதி சட்டத்தரணி மொஹான் பீரிஸ், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இன்று முற்பகல் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். ஷிரானி பண்டாரநாயகவுக்கு எதிரான குற்றவியல் பிரேரணை, பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளினால், நிறைவேறி, அவர் பதவிநீக்கம் செய்யப்பட்டதன் பின்னர் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு மொஹான் பீரிஸை நியமிப்பதற்கான பரிந்துரை, பாராளுமன்ற பேரவையில் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டதன் பின்னர், புதிய நியமனம் இடம்பெற்றது.

சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் பாராளுமன்ற பேரவை, இன்று முற்பகல் கூடி, மொஹான் பீரிஸின் பெயரை அங்கீகரித்தது. பாராளுமன்ற பேரவையின் ஏனைய உறுப்பினர்களாக பிரதமர் டி.எம். ஜயரட்ன, எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம. அஸ்வர், டி.எம். சுவாமிநாதன் ஆகியோர் இடம்பெறுகின்றனர்.

பாராளுமன்ற பேரவையின் பரிந்துரைக்கமைய, ஜனாதிபதியினால் புதிய பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்ட மொஹான் பீரிஸ், முன்னாள் சட்டமா அதிபராவார். அவர், அமைச்சரவை ஆலோசகராகவும் செயற்படுகிறார். கொழும்பு சென் ஜோசப் கல்லூரி, றோயல் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவரான இவர், இலங்கை சட்டக்கல்லூரியில், சட்டத்துறை கல்வியை தொடர்ந்தார். நீண்டகாலம் சட்டத்தரணியாக பணியாற்றிய மொஹான் பீரிஸ், இங்கிலாந்தின் வேல்ஸில் சொலிசிட்டராகவும், செயற்பட்டுள்ளார். 1981 ஆம் ஆண்டு அரச சட்டத்தரணியாக சட்டமா அதிபர் திணைக்களத்தில் இணைந்து கொண்ட மொஹான் பீரிஸ், பின்னர் அரச சிரேஷ்ட சட்டத்தரணியாக 17 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

அவர், ஹாவர்ட் சட்டக்கல்லூரியில் சட்டத்துறையில் பயிற்சிபெற்று, கேம்பிரிட்ஜ் கல்லூரியிலும், ஜோர்ஜ் வொஷிங்டன் பல்கலைக்கழகத்திலும், பொலிஸ் மற்றும் குற்றவியல் ஆய்வு தொடாபான கல்வியை பெற்றுள்ளாh. நிர்வாக சட்டம், வணிக சட்டம், காணி சட்டம், அடிப்படை மனித உரிமை, கைத்தொழில் சட்டம், குற்றவியல் சட்டம் போன்ற பல்வேறு துறைகளில் வழக்குகளில் வாதாடியுள்ள மொஹான் பீரிஸ், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதி தலைவராகவும், பணியாற்றியுள்ளார்.

இதேநேரம் சட்டவாக்கத்துறையான பாராளுமன்றம் பிரதம நீதியரசர் ஷிராணி மீது குற்றப் பிரேரணை கொண்டுவந்து, அதனடிப்படையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி நீதியரசரரைப் பதவி நீக்கம் செய்வதாக அறிவித்தும், நீதித்துறைக்குச் சவால் விடுத்து ஷிராணி இன்று (15.01.3013) நீதிமன்றம் செல்வுள்ளதாக தெரிவிக்கப்டும் நிலையில் இந்த பதவியேற்பு நிகழ்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.




0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com