Thursday, January 24, 2013

2013-ம் ஆபிரிக்காவிற்கான புதிய போட்டிகளும்! Chris Marsden

மாலியில் பிரான்சின் இராணுவ ஆக்கிரமிப்பு, கண்டத்தில் இருக்கும் முன்னாள் ஏகாதிபத்திய பிரபுக்கள் அனைவரும் மேற்கொண்டுள்ள புதுப்பிக்கப்பட்டுள்ள ஆபிரிக்க மேலாதிக்கத்திற்கான போட்டியின் சமீபத்திய வெளிப்பாடு மட்டுமே. பிரான்ஸ், பிரித்தானியா போல் 19ம் நூற்றாண்டுக் கடைசியில் இருந்து 1960கள் வரை ஆபிரிக்காவை நேரடியாக ஆட்சி செய்த சக்திகள் மட்டும் இதில் ஈடுபட்டிருக்கவில்லை; எல்லாவற்றிற்கும் மேலாக இப்பொழுது அமெரிக்காவும் உள்ளது.

பாரிஸ், ஆபிரிக்காவில் தன் ஏகாதிபத்திய நோக்கங்களை ஒருபோதும் முற்றிலும் கைவிட்டுவிடவில்லை என்பதை அதன் சமீபத்திய ருவண்டா மற்றும் லிபிய சம்பவங்கள் மிகவும் மிருகத்தனமாக நிரூபிக்கிறது. இப்பொழுதும்கூட அது ஐவரி கோஸ்ட், செனெகல், கபோன், மத்திய ஆபிரிக்க குடியரசு, சாட் மற்றும் டிஜிபுட்டி ஆகியவற்றில் 9,000 துருப்புக்களை நிறுத்தி வைத்துள்ளது. அது மாலிக்கு மீண்டும் வந்துள்ளது அல் குவேடா அல்லது இஸ்லாமிய அடிப்படைவாதத்துடன் போராடுவதற்கு அல்ல; மாறாக அந்நாட்டின் யுரேனியம், தங்கம், இன்னும் எடுக்கப்படாத எண்ணெய் இருப்புக்கள் மற்றும் மேற்கு ஆபிரிக்கப் பிராந்தியத்தில் ஏராளமான நிலப்பகுதிகளின்மீது கட்டுப்பாடு கொள்வதும் ஆகும்; சமீபத்தில் ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் “எதிர்காலத்தின் கண்டம்” என அறிவித்துள்ளார்.

மாலியில், வான்வழி ஆதரவு கொடுப்பதற்கு அப்பால் அமெரிக்கா ஏதேனும் செய்யுமா என்பது பற்றி இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் அதற்கு மேல் அது ஏதும் செய்யவில்லை என்றால், அதற்குக் காரணம் அது ஒரு போட்டி கொள்ளையிடும் சக்திக்கு உதவ விரும்பவில்லை என்பதுதான் பொருளாகும். 2013 ம் ஆண்டு வாஷிங்டன் ஏராளமான இராணுவ நடவடிக்கைகளை கண்டத்தில் நடத்துவதுடன் தொடங்குகிறது; அங்கு அமெரிக்கா இப்பொழுது அதற்கான எண்ணெயில் கால் பகுதிக்கும், அது நுகரும் மூலப் பொருட்களுக்கும் நம்பியுள்ளது; அவற்றுள் எண்ணெய், தங்கம், வைரங்கள், தாமிரம், இரும்பு மற்றும் பெரும் பணத்தைக் கொடுக்கும் பயிர்களான கோக்கோ போன்றவையும் அடங்கும்.

வாஷிங்டன் மற்றும் பிற பிரதான சக்திகளை பொறுத்த வரை ஆபிரிக்கா ஒரு விளையாட்டுக் களம் போன்றதாகும். முழுக் கண்டத்தின் மீதும் மேலாதிக்கத்தை கொள்வதற்கு அமெரிக்கா நோக்கம் கொண்டுள்ளது; இப்பூசலில் அதன் முக்கிய போட்டியாளன் இப்பொழுது சீனா ஆகும்.

ஆபிரிக்காவின் மிகப் பெரிய வணிகப் பங்காளி என்னும் அமெரிக்காவின் இடத்தை இப்பொழுது சீனா கடந்துவிட்டது; அதன் வணிக மொத்த நிதி 2009ல், அமெரிக்காவுடைய 86 பில்லியன் டாலருடன் ஒப்பிடுகையில், 90 பில்லியன் அமெரிக்க டாலர் ஆக உள்ளது; இக்கண்டத்தில் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் 50 பில்லியன் டாலருக்கு மேல் உள்ளன. இருதரப்பு வணிகம் 2011ல் 160 பில்லியன் டாலர்கள் என்று விளங்கியது; இந்த ஆண்டு இது 200 பில்லியன் டாலரை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தவிர, சீனா 2010ல் இருந்து ஆபிரிக்காவில் வணிகத் திட்டங்களுக்குக் கிட்டத்தட்ட 101 பில்லியன் டாலர்களை உதவ உறுதியளித்துள்ளது அல்லது திட்டங்களை முன்வைத்துள்ளது; இதில் கட்டுமானம் மற்றும் இயற்கை ஆதாரங்களுக்கான உடன்பாடுகள் மொத்தம் 90 பில்லியன் டாலர்கள் என உள்ளன.

பெய்ஜிங்குடன் பொருளாதார அளவில் போட்டியிடமுடியாத நிலையில், வாஷிங்டன் மீண்டும் தன்னுடைய நலன்களைப் பெறுவதற்கு இராணுவ வாதத்திற்குத் திரும்பியுள்ளது. மாலி நிரூபித்துள்ளது போல், 2011ல் பேரழிவைக் கொடுத்த லிபியப் போர் எதிர்காலத்திற்கான ஒரு குறிகாட்டி போல் காணப்பட வேண்டும்.

இப்பிராந்தியத்தில் மில்லியன் கணக்கான மக்களின் உயிர்களைக் கவர்ந்த பல போர்கள், அவற்றின் வேர்களை மூலோபாய இருப்புக்கள் பற்றிய பூசல்களில் தான் கொண்டுள்ளன; இதில் போட்டி ஏகாதிபத்திய சக்திகள் தவிர்க்க முடியாமல் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ வெளிப்படையாக தங்கள் பங்கை கொள்கின்றனர்—காங்கோ ஜனநாயகக் குடியரசில் வடக்கு மற்றும் தெற்கு சூடானில், ஆபிரிக்க மத்திய குடியரசில், சோமாலியாவில், மாலி எனப் பட்டியல் நீளும்.

தன்னுடைய பங்கிற்கு அமெரிக்கா, ஆபிரிக்காவில் பல இராணுவ நடவடிக்கைகளை செய்து வருகிறது. இதில் சோமாலி பள்ளத்தாக்கு பகுதி, காமரூன், கினியா வளைகுடா, போட்ஸ்வானா, செனெகல், தென்னாபிரிக்கா, மொரோக்கோ, கானா, துனிசியா, நைஜீரியா மற்றும் லைபீரியா ஆகியவை அடங்கும். சோமாலி அரசாங்கத்தைப் பாதுகாக்கும் ஆபிரிக்க ஒன்றியப் பணி அமைப்பின் (African Union Mission) துருப்புக்களுக்கு அது நிதி உதவியும் பயிற்சியும் கொடுத்துள்ளது. அமெரிக்க படைகள் ஆபிரிக்க தீபகற்பத்தை ஒட்டிய மூலோபாய நீர்நிலைகளை ரோந்து பார்ப்பதில் மையப் பங்கை கொண்டுள்ளன. AFRICOM உடைய பொதுத்துறை இயக்குனரான கேர்னல் டாம் டேவிஸ், “நாங்கள் ஆபிரிக்கக் கண்டத்தில் அநேகமாக ஒவ்வொரு நாட்டுடையை இராணுவத்திற்கும் பயிற்சி அளிக்கிறோம், இராணுவங்களுக்கு இடையேயான தொடர்புகள், செயற்பாடுகளையும் நடத்துகிறோம்” என்று பெருமை பேசிக் கொண்டார்.

இந்த ஆண்டு அமெரிக்கா குறைந்தப்பட்சம் 3,000 துருப்புக்கள் கொண்ட இராணுவப் பிரிவை ஆபிரிக்காவில் நிரந்தரமாக நிறுத்தி வைக்க உள்ளது. இத்துருப்புக்கள் அங்கு ஏற்கனவே அதிக முறையற்று அல்லது திருட்டுத்தனமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் 2,000 அல்லது ஒருவேளை 5,000 என்று கூட இருக்கும் துருப்புக்களுடன் சேரும். 35 நாடுகளில் 100க்கும் மேற்பட்ட இராணுவப் பயிற்சிகளை அமெரிக்க நடத்தவுள்ளது. தன்னுடை சொந்த அதிரடிப் படையையும் அது செயல்படுத்தத் தொடங்கும்; அது அமெரிக்க ஆபிரிக்க கட்டுப்பாட்டுடன் இணைந்து செயல்புரியும் (AFRICOM). அதன் தலைவர் ஜெனரல் கார்ட்டர் ஹாம் அமெரிக்கா இனி “பகிர்ந்து கொள்ளும் முறையை நம்பியிருக்காது; அதாவது Commander’s in Extremis Force with European Command என அழைக்கப்படுவதுடன்... நாம் இப்பொழுது நம்முடைய சொந்த படையையே கொண்டுள்ளோம்.”

“அமெரிக்க இராணுவத்தின் முழு இன்றியமையாத நிலைப்பாடு அமெரிக்கா, அமெரிக்கர்கள் மற்றும அமெரிக்க நலன்கள் ஆகியவற்றைப் பாதுகாப்பதாகும்” என்று ஹாம் அறிவித்தார்.

துருப்புக்களின் எண்ணிக்கை ஒப்புமையில் சிறியது; ஆனால் பலரும் முக்கிய செயலான பயிற்சியளித்தல், ஆபிரிக்க இராணுவங்களுக்குத் தளவாடம் கொடுத்தல் என்பவற்றில் ஈடுபட்டுள்ளனர்; இவை அமெரிக்கப் படைகளின் பினாமிகளாகப் பயன்படுத்தப்படும். உண்மையில் ஏகாதிபத்தியத்தின் ஆபிரிக்க கொள்ளயடித்தலுக்கான அனைத்துத் திட்டங்களும் ஆபிரிக்க முதலாளித்துவம் வகிக்கும் பங்கில்தான் தங்கியுள்ளது.

வாஷிங்டன், பாரிஸ், லண்டன் மற்றும் பெய்ஜிங்கில் இருக்கும் அரசாங்கங்களும் பெருநிறுவனங்களும் எண்ணற்ற ஊழல் நிறைந்த உள்ளூர் ஆட்சிகளையும், இயக்கங்களையும் தங்கள் கொள்ளைப் போர்களை நடத்தவும், தொழிலாளர்கள், வறிய விவசாயிகளை மிருகத்தனமாகக் கட்டுப்படுத்தப் பொலிஸ் வேலை செய்வதற்கும் நம்பியுள்ளன.

ஆபிரிக்காவின் சமீபத்திய பொருளாதார வளர்ச்சி ஒரு புறம் இருந்தாலும், அதில் இருந்து நலன் ஏதும் தொழிலாளர்களுக்கும் வறியவர்களுக்கும் சென்றுவிடவில்லை. மக்கட்தொகுப்பில் 60% நாள் ஒன்றிற்கு 2 டாலருக்கும் குறைவான பணத்தில் வாழ்க்கை நடத்தும் நிலையில் இருக்கும் கண்டம்தான் இது. எந்த விந்தையும் இன்றி மத்தியதர வர்க்கம் என்பது நாள் ஒன்றுக்கு 2 முதல் 20 டாலருக்குள் வாழும் மக்கள் என்று வரையறுக்கப்பட்டுள்ளது, இதிலும் பெரும்பாலானவர்கள் 2 முதல் 4 டாலர்கள் வரைதான் வருமானத்தைக் கொண்டுள்ளனர். இதற்கிடையில் ஆபிரிக்க நாடுகள் பொருளாதாரச் செயற்பாட்டின் எந்த நடவடிக்கையிலும் கீழ்மட்டத்தில்தான் உள்ளன; மிகவும் குறைந்த வளர்ச்சி உடைய நாடுகள் 50 என்ற ஐ.நா. பட்டியலில் 34 ஆபிரிக்க நாடுகள் உள்ளன. சமத்துவமற்ற நிலை, வறுமை இவற்றை அளக்கும் எந்தப் பட்டியலிலும் உயர்மட்டத்திலேயே உள்ளன.

ஆளும் ஊழல் நிறைந்த உயரடுக்குத்தான் செல்வக் கொழிப்பை பெற்றுள்ளது; இதற்குக் காரணம் அது கொள்ளை முறையில் பங்கு கொண்டுள்ளது, அம்முறையின் முக்கிய இலாபங்களோ ஏகாதிபத்திய சக்திகளுக்கு செல்கின்றன. இச்சூழலில், ஒரு சமூக வெடிப்பு தவிர்க்க முடியாததாகும்.

தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்படும் மக்களுடைய எந்த இயக்கமும், எனவே தவிர்க்க முடியாமல் கொடூரமான சமூக சமத்துவமற்ற தன்மையின் காவல்காரன் போல நடந்து கொள்ளும் ஆளும் உயரடுக்கிற்கு எதிராக இயக்கப்பட வேண்டும்; இவர்கள்தான் தேசியவாதம், இன, மத, பழங்குடி மக்களின் விரோதப் போக்குகளுக்கு வாதிடுபவர்கள்; இவை தவிர்க்க முடியாமல் சகோதரப் படுகொலைகளுக்கு வழிவகுக்கின்றன.

தென்னாபிரிக்க சுரங்கங்களை சூழ்ந்திருந்த வேலைநிறுத்த அலை, நிச்சயமாக வருங்காலப் போராட்டங்கள் எடுக்கவேண்டிய அவசியமான போக்கிற்கு சமிக்ஞை செய்கின்றன. இது ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் மற்றும் COSATU தொழிற்சங்கக் கூட்டமைப்பை குறிவைக்கிறது; அவைதான் சுரங்கப் பெருநிறுவனங்களின் கைக்கூலிகள் போல் செயல்பட்டு வேலைநிறுத்த அலைகளை கொலைக்கார அடக்குமுறையைக் கையாண்டு நசுக்கினர்.

ஆபிரிக்காவிலும் சர்வதேச ரீதியாகவும் தேசியவாத ஆட்சிகளும் இயக்கங்களும் இருப்பது போலவே, ANC உடைய சமகாலப் பங்கு ஏகாதிபத்தியக் கொள்ளை முறைகளை எதிர்த்து நிற்பதின் இயலாமைக்கும் அதே போல் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் போராட்டத்திற்கு வெளியே ஒரு சிறிய அளவிலேனும் சமூக மற்றும் ஜனநாயக வெற்றிகளை பெறமுடியாது என்பதற்கும் சான்றாகும்.

ஒடுக்கப்பட்ட நாடுகளில் உள்ள தேசிய முதலாளித்துவம் இயல்பிலேயே முதலாளித்துவத்துடன் கட்டுண்டுள்ள நிலையில், ஏகாதிபத்திய ஆதிக்கத்தில் இருந்து ஜனநாயகம், சுதந்திரம் ஆகியவற்றிற்கான போராட்டத்தை நடத்தும் பொறுப்பை எடுக்க முடியாது என்பதையே வரலாறு நிரூபிக்கிறது. ஆபிரிக்க தொழிலாளர்களும் இளைஞர்களும் தங்கள் சொந்த புரட்சிகரத் தலைமையைக் கட்டமைக்க முன்வர வேண்டும்; அது அதிகாரத்தை எடுத்துக் கொண்டு கண்டத்தை சோசலிச அடிப்படையில் ஐக்கியப்படுத்த வேண்டும்; வங்கிகள், பெரிய நிறுவனங்கள், மூலோபாய சுரங்கத் தொழில்கள் மற்றும் நிலம் ஆகியவை தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும்.

முடிவுரையாக 2013 தொழிலாள வர்க்கத்தின் முன்னணிப்படை தன்னை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பதாகையின் கீழ் இருத்திக் கொள்ளும் ஆண்டாக இருக்க வேண்டும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com