Monday, December 17, 2012

மட்டக்களப்பில் வீசிய சூறாவளியால் பல வீடுகள் சேதம் இயல்பு நிலைபாதிப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று திங்கட்கிழமை அதிகாலை வீசிய மினி சூறாவளி காரணமாக 455 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் பயிர்ச்செய்கைகளும் அதிகமாக அழிவடைந்துள்ளதுடன் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதன் காரணமாக போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது இந்த மினி சூறாவளி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி, வெல்லாவெளி, செங்கலடி ஆகிய பகுதிகளில் 455 பாதிக்கப்பட்ட வீடுகளில் 61 வீடுகள் முழுமையான சேதமடைந்துள்ளது என அனர்த்த முகாமைத்துவ அமைப்பு தெரிவித்துள்ளது.

மினிசூறாவளி காரணமாக களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் 384 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 52 வீடுகள் முழுமையான பாதிக்கப்பட்டுள்ளதுடன், தோட்டங்களும்,பயன்தரு மரங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் இருந்தவர்கள் சிலர் கண்ணகிபுரம் விநாயகர் வித்தியாலயத்தில் தங்க வைக்கவைக்கப்பட்டுள்ளதுடன் பெரும்பாலானோர் உறவினர்,நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ளதாக களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் சுதாகர் தெரிவித்தார்.

இதேபோன்று வெல்லாவெளி பிரதேசத்தில் வீசிய கடும் காற்று காரணமாக 19 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் அதில் மூன்று வீடுகள் முழுச்சேதமடைந்துள்ளது, பட்டிப்பளை பிரதேசத்துக்குட்பட்ட கொக்கட்டிச்சோலை,குழுவினமடு,பட்டிப்பளை ஆகிய பகுதிகளில் வீசிய மினி சூறாவளி காரணமாக 53 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் இதில் 06 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன,செங்கலடி பிரதேச செயலகத்துக்குட்பட்ட கோப்பாவெளி பகுதியில் வீசிய மினி சூறாவளி காரணமாக 08 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் இவற்றில் நான்கு வீடுகள் முழுமையான சேதமடைந்துள்ளதுடன் பொதுக்கட்டிடங்கள்,பாடசாலைகள் என்பனவும் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான சமைத்த உணவுகளை வழங்குவதற்கும் தற்காலிக இருப்பிடங்களை வழங்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாக பிரதேச செயலாளர்கள் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்ற களுவாஞ்சிகுடி பிராந்திய படை அதிகாரி வீதிகளில் காணப்படும் மரங்களை அகற்றுவதற்கு படையினரை பணித்துள்ளதுடன் தடைபட்டுப்போய் உள்ள மின்சாரத்தை வழமை நிலைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள தேவையான உதவியை பிரதேச மின்சார அத்தியட்சர் காரியாலயத்துக்கு வளங்குமாறு கூறியதுடன் பொதுமக்களுக்கு தேவையான அவசர உதவிகளையும் வளங்குமாறு பணித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com