Wednesday, December 5, 2012

த.தே.கூட்டமைப்பினர் பிரதேசவாதத்தை கிளப்ப முயற்சிக்கின்றனர் - பாராளுமன்றில் சந்திரகுமார்.

கிளிநொச்சி இரணைமடுக்குளம் புனரமைக்கப்படுகின்றது. ஆனால் அம்மடு புனரமைக்கப்பட்டு அங்குள்ள நீர் யாழ்பாணத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் 2013 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சு நீர்ப்பாசன நீர்வள முகாமைத்துவ அமைச்சு மற்றும் சுற்றாடல் அமைச்சு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித்தலைவருமான முருகேசு சந்திரகுமார் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் மேற்படி குற்றச்சாட்டு பிரதேசவாதத்தை தூண்டுவதாக உள்ளதாக தெரிவித்துள்ளர்.

அவர்கள் ஆற்றிய முழு உரை வருமாறு

கௌரவ தவிசாளர் அவர்களே!

நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சு நீர்ப்பாசன நீர்வள முகாமைத்துவ அமைச்சு மற்றும் சுற்றாடல் அமைச்சு ஆகிய முக்கிய அமைச்சுக்களின் மீதான வரவு செலவுத்திட்டக் குழுநிலை விவாதங்களில் எனக்கும் கலந்து கொள்ளச் சந்தர்ப்பம் கிடைத்தமையையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன்.

எமது நாடு சிறந்த நீர்ப்பாசனப் பாரம்பரியத்தையுடையது. சிறந்த முறையில் நீர்ப்பாசனத்தைப் பயன்படுத்தியவர்கள் என்ற பெருமையும் எமக்குண்டு. இலங்கையின் பெருமளவு விவசாயம் நீர்ப்பாசனம் மூலமே மேற்கொள்ளப்படுகின்றது. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட நீர்ப்பாசன முறையின் தொடர்ச்சியை நாம் இன்னும் வளமாக்கித் தொடர்ந்து கொண்டிருக்கின்றோம். இப்பொழுது நாடு முழுவதும் 163 பாரிய குளங்களும் 2617 சிறிய குளங்களும் மற்றும் 3910 நீர்ப்பாசன வாய்க்கால்களும் உள்ளன. அதேநேரம் புதிய நீர்ப்பாசனத் திட்டங்கள் தொடர்ந்தும் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதற்காக அரசாங்கம் பல ஆயிரம் கோடி ரூபாய்களை ஆண்டுதோறும் செலவழித்து வருகின்றது. அந்த அளவுக்கு நாம் நீரின் பயனை அனுபவித்து வருகின்றோம்.

இலங்கைக்குத் தனிச் சிறப்பு கிடைத்துள்ளது என்றால் அது நீரினால்தான் என்றுதான் நான் நம்புகின்றேன். இன்று நீரைத் தேடி உலகம் பெரும் பாடுபடுகின்றது. இன்று உலகப் போக்கில் ஒரு லீற்றர் பாலின் விலையைவிட ஒரு லீற்றர் நீரின் விலை அதிகமாகியுள்ளது. இதுதான் இன்றைய யதார்த்தமாக இருக்கின்றது. கிரகங்களை நோக்கிய பயணத்திலும் அங்கு முதலில் தண்ணீரைத்தான் தேடுகின்றார்கள். இன்று வல்லரசுகள் செவ்வாய்க் கிரகத்தில் தண்ணீர் கிடைப்பதற்கான சாத்தியங்கள் உண்டா என்பது பற்றி அறிவதற்காகக் கோடிக் கணக்கான டொலர்களைச் செலவழித்துக் கொண்டிருக்கின்றன. நீரின் பெறுமதி அந்த அளவுக்கு உள்ளது. இதனால்தான் 'நீரின்றி அமையாது உலகம்' என்ற ஒரு பழமொழியைச் சொல்கின்றார்கள். இனிமேல் ஓர் உலகப் போர் மூளுமாக இருந்தால் அது தண்ணீருக்கான போராக - யுத்தமாக இருக்கும் என்பதே பலருடைய கருத்தாக உள்ளது. எங்கள் நாட்டின் இறுதிப் போர் - நான்காம் கட்ட ஈழப் போர் - மாவிலாற்றில் தண்ணீருக்கான சண்டையாகத்தான் ஆரம்பமானது.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நீர் தொடர்பான விவாதத்தில் நான் மேலும் சில கருத்துக்களை முன்வைக்க விரும்புகின்றேன். வட பகுதியிலே நீண்ட காலமாகப் புனரமைக்கப்படாதிருந்த குளங்களையும் மற்றும் பாசன வாய்க்கால்களையும் புனரமைப்பதற்குப் பல்வேறு திட்டங்களின் ஊடாக அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம் வவுனிக்குளம்இ அக்கராயன்குளம்இ முத்தையன்கட்டுக்குளம்இ கட்டுக்கரைக்குளம் போன்ற பாரிய குளங்கள் முதல் ஆயிரக் கணக்கான சிறு குளங்கள் வரை புனரமைக்கப்பட்டுள்ளன. மேலும் பல குளங்களைப் புனரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அடுத்த ஆண்டில்கூட பல குளங்கள் புனரமைப்புக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் பாசனத்துக்கான நீரைச் சேமிப்பது மட்டுமல்லாது நிலத்தடி நீா்ச் சேமிப்பும் இடம்பெறுகின்றது.

ஒப்பீட்டளவில் பார்த்தால் இந்த நீர்ச் சேகரிப்பு விடயத்தில் நாம் மிகப் பெரும் முன்னேற்றத்தை கண்டுள்ளோம். இது எமக்குப் பெரும் வெற்றியாகும். இதற்காக நாம் கடுமையாக உழைத்துள்ளோம். அதேநேரம் எமது பாரம்பரியத்தையும் முன்னோரின் வழிமுறைகளையும் நாம் பாதுகாப்பதுடன் மேம்படுத்தி வருகின்றோம். இந்தப் பெரும் பணி பற்றி நாளைய வரலாறு சொல்லத்தான் போகின்றது. ஆனால்இ கடந்த காலங்களில் குளங்கள் உடைத்துவிடப்பட்டன. வாய்க்கால்களும் ஆறுகளும் சிதைத்துவிடப்பட்டன. இது மக்களுக்கும் எமது முன்னோருக்கும் இழைத்த கொடுமையும் அவமரியாதையும் ஆகும். இவ்வாறு உடைக்கப்பட்ட கல்மடுக் குளத்தை நாம் எமது பதவிக் காலத்தில் மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களின் வழிகாட்டலின்கீழும் கெளரவ அமைச்சர் பஸில் ராஜபக்ஷ அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் ஊடாகவும் மீள்நிர்மாணம் செய்துள்ளோம். இந்தக் கல்மடுக் குளம் இறுதி யுத்த காலத்தின்போது யுத்த காரணங்களுக்காக மக்களின் விவசாயத் தேவையைக் கருத்தில் எடுக்காமல் புலிகளினால் உடைத்து நொருக்கப்பட்டமையை எல்லாரும் அறிவார்கள்.

அடுத்த ஆண்டில் வடக்கின் மிகப் பெரும் குளமான இரணைமடுக் குளம் புனரமைக்கப்படவுள்ளது. இதற்காக 5.4 பில்லியன் இலங்கை ரூபாய் - 41.34 மில்லியன் அமெரிக்க டொலர்கள் – ஒதுக்கப்பட்டு இத்திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. இந்தப் புனரமைப்பின்மூலம் மேலும் 15000 ஏக்கர் கன அடி நீரைத் தேக்கி வைக்க முடியும். இதனால் கிளிநொச்சி மாவட்டத்தின் விவசாயச் செய்கையை மேலும் மேம்படுவதுடன் கிளிநொச்சிஇ யாழ்ப்பாணம் ஆகிய மாவட்ட மக்களின் குடிநீர்ப் பிரச்சினையும் தீர்த்து வைக்கப்படும்.

இதனைப் புரிந்துகொள்ளாத - இன்று இந்த அவையிலே பேசிய தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், இந்த நீரை கிளிநொச்சி மாவட்ட மக்களின் நலன்களுக்கு எதிராக யாழ்ப்பாணத்துக்கு திட்டமிட்டு கொண்டு செல்கின்றார்கள் என்று கூறி தேவையில்லாமல் பிரதேசவாதத்தை கிளப்ப முயற்சிக்கின்றார். அந்த இரணைமடுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது அல்லது அத்திட்டம் தொடர்பில் ஆலோசிக்கப்படும்போது அல்லது அவர்களுடன் நடாத்திய பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளின்போது கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளினால் விதிக்கப்பட்ட நிபந்தனைகள் சகலதும் ஏற்றுக்கொள்ளப்பட்டுத்தான்இ இந்த நீர் திட்டத்தினூடாக குடிநீரானது கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கும் யாழ். மாவட்ட மக்களுக்கும் கொண்டு செல்லப்படுகின்றது.

இங்கு அவர் வைத்த வாதங்களுக்கு நான் பதில் அளிக்க விரும்புகின்றேன். இந்தக் குளத்தினுடைய புனரமைப்பின் மூலம் கிட்டத்தட்ட 15000 கன அடி நீரை மேலதிகமாக சேமிக்க முடியும். நீர் அணையினை இரண்டு அடியால் உயர்த்திஇ குளக்கட்டிலுள்ள கசிவுகளைச் சீர்செய்துஇ தண்ணீரை மேலதிகமாகத் தேக்கிஇ ஏற்கெனவே கிளிநொச்சி மாவட்டத்தில் நீர்ப்பாசனம் இல்லாத விவசாய நிலங்களுக்கு நீர் செல்லக்கூடிய வகையில்இ நீர்ப்பாசன விநியோகத்தை செய்துஇ மேலும் பல ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் நெற்பயிர்ச்செய்கை செய்யக்கூடிய சூழலை உருவாக்கியிருக்கின்றது. அத்துடன் வரட்சியான காலகட்டங்களில் கிளிநொச்சி மாவட்ட மக்களுடைய குடிநீர் பிரச்சினையை தீர்த்த பின்னர்இ மீதித் தண்ணீர்தான் யாழ். மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளுக்குச் செல்ல இருக்கின்றது. அவ்வாறேஇ ஏற்றுப்பாசன நீரை திருவையாறு போன்ற பிரதேசங்களிலுள்ள விவசாய நிலங்களுக்கு வழங்கக்கூடிய வகையில் சகல கால்வாய்களையும் பூரணமாகப் புனரமைத்துஇ அதில் சில கால்வாய்களை "சீமென்ட்" கால்வாய்களாக மாற்றிஇ உரிய நீர்ப்பாசன ஒழுங்குகள் செய்யப்படுகின்றன. யாழ். மாவட்டத்தின் முழுமையான குடிநீர் பிரச்சினையை இரணைமடு குளத்தினூடான நீர்விநியோகத்தினால் தீர்த்துவிட முடியாது. அதற்கென வேறு திட்டம் தயாரிக்கப்பட்டிருக்கின்றது. அது எதிர்காலத்தில் செயற்படுத்தப்படும்.

இந்த விடயங்களையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் ஏதோ கிளிநொச்சி விவசாயிகளின் நலன் சார்ந்து நிற்பவர்போல் அவர் பேசினார். இவர்கள் மக்களுடைய நலன்களில் அக்கறை உடையவர்களாக இருந்திருந்தால்இ அன்று கல்மடுக் குளத்தை உடைத்துஇ தண்ணீரை வீண்விரயம் செய்துஇ கிட்டத்தட்ட 6000 ஏக்கர் நிலப் பரப்பில் பயிர் செய்கை செய்த விவசாயிகளின் வாழ்க்கையை அழித்தபோது ஏன் கண்டிக்க முற்படவில்லை? இன்று அரசாங்கமானது அந்தக் குளத்தினுடைய அணைக்கட்டை உயர்த்திஇ மேலதிகமாக நீரைத்தேக்கிஇ கடந்த காலங்களில் எவருக்கு நீர் கிடைக்காமல் இருந்ததோ அவர்களுக்கும் நீர் கிடைக்கக்கூடிய ஒரு சூழலை வகுத்திருக்கின்றது. இதன்மூலம் தர்மபுரம் என்ற பிரதேச மக்களின் நீண்டகால அபிலாசை தீர்த்துவைக்கப்பட்டிருக்கின்றது. அவர்களும் நெற்பயிர்செய்கை செய்யக்கூடிய சூழலை ஏற்படுத்தி இருக்கின்றது. ஆகவேஇ இந்த விடயங்களை கருத்தில் கொள்ளாமல், அவர் தனது அபிப்பிராயங்களை இங்கே குறிப்பிட்டார்.

அடுத்து ஆனையிறவு கடல் நீர் ஏரியை அல்லது சுண்டிக்குளம் கடல் நீர் ஏரியை நன்னீராக்கி, நீரை சேமித்து, யாழ். மாவட்டத்துக்கு குடிநீரை வழங்கலாமென்று குறிப்பிட்டார். இது ஒரு அர்த்தமற்ற திட்டம். ஆனையிறவு கடல் நீரேரியானது இலங்கையின் உப்பு உற்பத்தியில் பெரும் பங்கை வகிக்கின்ற ஒரு பிரதேசம். இதனை நம்பி கிட்டத்தட்ட 10000 தொழிலாளர்கள் வேலை செய்திருக்கின்றார்கள். அதுமட்டுமல்ல, ஆனையிறவு கடல் நீரேரியில் கிட்டத்தட்ட 2000 குடும்பங்கள் பருவ காலத்தில் இறால், மீன் பிடிக்கின்றன. இவர்களுடைய எதிர்காலத்தை கருத்தில் கொள்ளாமல், அந்த நீரை நன்னீராக்கி, நீரை சேமிக்கமுடியுமென்ற திட்டமானது, ஒன்றுக்கும் உதவாத திட்டமென்றே நான் கருதுகின்றேன்.

இது மட்டுமல்ல, வட மாகாணத்தில் குடிநீர் விநியோகத்துக்காக செய்யப்பட்ட தி்ட்டங்களுக்கு எவ்வளவோ மில்லியன்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. யாழ்ப்பாணத்தில் மட்டும் கிட்டத்தட்ட 26000 பயணாளிகள் நன்மை பெறக்கூடிய அளவுக்கு பல்வேறு திட்டங்கள் செயற்படுத்தப்பட்டிருக்கின்றது. இவ்வாறு 26000 பயனாளிகள் குடிநீரைப்பெறும் வகையில் 15 இடங்களில் சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் - நீர் விநியோகத் திட்டங்கள் - செயற்படுத்தபட்டு இருக்கின்றன.

அது மட்டுமல்ல வவுனியா மாவட்டத்தில் கிட்டத்தட்ட 7200 குடும்பங்களுக்கு நீர் விநியோகிக்கும் திட்டமும் மன்னார் மாவட்டத்தில் கிட்டத்தட்ட 24000 குடும்பங்களுக்கு நீர் விநியோகிக்கும் திட்டமும் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் மொத்தமாக 58000 குடும்பங்கள் பயனடையவுள்ளனர்.

வடக்கின் துரித மீட்சித் திட்டத்தின் கீழ் நெடுங்கேணியில் கிட்டத்தட்ட 175 மில்லியன் ரூபா செலவில் நீர் விநியோகிக்கும் திட்டமும் விடத்தல் தீவில் 204 மில்லியன் ரூபா செலவில் 8500 மக்கள் நன்மை பெறக்கூடிய நீர்விநியோகத் திட்டமும் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. அதே போன்று அடம்பன் பிரதேசத்தில் கிட்டத்தட்ட 296 மில்லியன் ரூபா செலவில் 5800 மக்கள் பயன்பெறக்கூடியதாக நீர்விநியோகத்திட்டமும் வல்வெட்டித்துறை பிரதேசத்தில் கிட்டத்தட்ட 248 மில்லியன் ரூபா செலவில் 10000 மக்கள் பயன்பெறக்கூடியதான நீர்விநியோகத்திட்டமும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டம் 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நிறைவடையும் என உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று மருதங்கேணியில் கிட்டத்தட்ட 25 மில்லியன் ரூபா செலவில் 1500 மக்கள் பயன்பெறக்கூடியதான நீர்விநியோகத்திட்டமும் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள பாண்டியன் குளத்தில் கிட்டத்தட்ட 198 மில்லியன் ரூபா செலவில் 2260 மக்கள் பயன் பெறக்கூடியதான நீர் விநியோகத்திட்டமும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதே போன்று முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஒட்டுசுட்டான் நீர்வழங்கல் திட்டத்தின் கீழ் கரைச்சிப் பிரதேசத்தில் 92 மில்லியன் ரூபா செலவிலே 10700 பயனாளிகள் பயன்பெறக்கூடியதான நீர்வழங்கல் திட்டமும் மல்லாவி நீர்வழங்கல் திட்டத்திலே 192 மில்லியன் ரூபா செலவில் 4500 மக்கள் பயன்பெறக்கூடியதான நீர்வழங்கல் திட்டமும் மேற்கொள்ளப்படுகின்றன. கிளிநொச்சி நீர் வழங்கல் திட்டத்தில் கரைச்சி பிரதேச செயலகப்பிரிவிலுள்ள 11 கிராம உத்தியோகத்தர் பிரிவும் கண்டாவளை பிரதேச செயலகப்பிரிவிலுள்ள குமாரபுரம், பரந்தன் நகரம் ஆகிய இரண்டு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் நீர்வழங்கல் மேம்பாட்டுத் திட்டம் அமுல்படுத்தப்படுகின்றன. அதே போன்றே மடுத்தேவாலயத்திலும் மேற்கொள்ளப்படுகின்றது.

இதைவிட 99 மில்லியன் ரூபா செலவில் கிளிநொச்சி நகரிலுள்ள 12000 குடும்பங்களுக்கான நீர் விநியோகத் திட்டம் வருகிற ஜனவரி மாதமளவில் ஆரம்பிக்கப்படவிருக்கின்றது. இதைவிட 674 மில்லியன் ரூபா செலவில் யாழ்ப்பாணத்திலுள்ள 22000 மக்கள் பயன்பெறக்கூடிய பல்வேறு திட்டங்கள் கரு உருவாக்கம் செய்யப்படவிருக்கின்றது. இவ்வாறு பல்வேறு செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆகவே இன்னும் இரண்டு மூன்று வருடங்களுக்குள் வட மாகாணத்திலுள்ள மக்கள் எதிர் கொள்ளும் குடிநீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமென நான் எதிர்பார்க்கிறேன். அரசியல் ஆதாயம் தேடும் நோக்கத்தில் சில அரசியல் வாதிகள் மக்களை மடையர்களாக்கப் பார்க்கின்றனர். சில ஊடகங்கள் இவர்களுக்கு ஒத்தூதுபவர்களாக இருக்கின்றனர்.

நீங்கள் உங்களுடைய சொந்தச் சகோதரர்களுக்கோ அல்லது நீங்கள் பெற்ற பிள்ளைகளுக்கோ தினமும் பொய் சொல்லி வளர்ப்பீர்களா? என்ற கேள்வியை நான் இந்த அவையிலே உங்களிடம் கேட்க விரும்புகின்றேன். நீங்கள் அப்பிள்ளைகளுக்கு அவ்வாறு பொய் சொல்லி வளர்த்தால் எதிர்காலத்தில் அவர்கள் எத்தகைய குணத்துடன் திகழ்வார்கள்? அதேபோன்றுதான் உங்களுக்கு வாக்களித்த உங்களுடைய மக்களுக்கு நீங்கள் பொய்யைச் சொல்கின்றீர்கள். தவறான கருத்துக்களையும் தவறான புள்ளிவிபரங்களையும் சொல்லிக்கொண்டிருக்கின்றீர்கள். அதனால் தான் இவ்வளவு காலம் போராடியும் தமிழ் மக்களால் வெற்றியடைய முடியவில்லை.

கடந்த பெரும் போகப் பயிர்ச்செய்கைக் காலத்தில் இலங்கை முழுவதும் கடும் வரட்சி நிலவியது. திட்டமிட்டு இரணைமடுக் குளத்திலுள்ள நீர் திறந்துவிடப்பட்டதாகப் பிரச்சாரம் செய்தீர்கள். சில மாதங்களுக்கு முன்னர் இரணைமடுக்குளத்தில் மட்டுமன்றி இலங்கை முழுவதும் வரட்சி நிலவியது என்பதே உண்மை.

எமது நாட்டின் புனரமைப்பு வேலைகள் செம்மையாக நடைபெற்று வருவதை உறுதிப்படுத்துகின்ற கண்காணிப்பாளர்கள் பொறுப்புடன் கடமையாற்றுகின்றனரா என்பதைக் கெளரவ அமைச்சர் அவர்கள் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். பல்வேறு திட்டங்களை அமுல்படுத்துவதற்காக பெருமளவு கோடி பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே கெளரவ அமைச்சர் அவர்கள் சரியான முறையில் கண்காணிப்பு நடைமுறைப்படுத்துவதை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் பல குறைபாடுகள் இருப்பதை நாம் அவதானித்துள்ளோம். திட்டங்களை நடை முறைப்படுத்துவதில் குறைபாடுகள் ஏற்பட்டால் அவை மக்களுக்குத் தீமையாக அமைந்துவிடும். எனவே அவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். கிளிநொச்சி மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பல புனரமைப்புப் பணிகள் தொடர்பாக கமக்காரர் அமைப்பு போன்ற அமைப்புக்கள் தமது திருப்தியின்மையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஆகவே இவ்விடயம் தொடர்பில் நிலைமைகளை அவதானித்தல் அவசியமாகும்.

இதே போன்று யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களின் சுற்றுச் சூழல் பாதுகாப்பையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். சுற்றாடல் பாதுகாப்பு என்பது வாழ்க்கைக்குத் தேவையான வளங்களைப் பாதுகாப்பதாகும். சிதைவடைந்து கொண்டிருக்கும் சுற்றாடலில் எந்தவொரு மனிதனாலும் வாழ முடியாது. யாழ்ப்பாணம் கிளிநொச்சி உட்பட்ட பல பகுதிகளின் சுற்றாடல் போரினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை மீளுருவாக்கம் செய்வதற்குரிய சிறப்புத்திட்டங்களை நாம் உருவாக்க வேண்டும். துரதிஷ்டவசமாக இத்தகைய திட்டங்கள் எதுவும் இது வரை மேற்கொள்ளப்படவில்லை.

இதே வேளையில் அப்பிரதேசங்களில் சட்டவிரோத மணல் அகழ்வு மரம் வெட்டுதல் போன்ற சுற்றாடல் அழிப்புக் குற்றச்செயல்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக அங்கே முடிந்தளவிலான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். இருந்தாலும் அவை எமக்கு மேலும் சவாலாகவே உள்ளன. சுற்றுச்சூழல் மேம்பாட்டின் முக்கியத்துவத்தைக் கருத்திற்கொண்டுஇ மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் 500 மில்லியன் ரூபாய்களை இந்த வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கியுள்ளார். எனவே நாம் ஒரு பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில் இதுதொடர்பான அவதானங்களை மேற்கொள்ள வேண்டும்.

அடுத்ததாக நீர்வழங்கல் தொடர்பாக சில விடயங்களை இங்கே முன்வைக்க விரும்புகின்றேன். கிளிநொச்சி மாவட்டத்தில் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு 2015ஆம் ஆண்டளவில் நிரந்தரத் தீர்வு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனும் கெளரவ அமைச்சர் அவர்களுடனும் கலந்துரையாடியுள்ளோம். அவர்கள் எம்முடன் இணைந்து நீர்வழங்கல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் அங்கு சிறிய அளவிலான நீர் விநியோகத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வட்டக்கச்சிஇ இயக்கச்சிஇ அக்கராயன்இ நெடுந்தீவுஇ மாதகல் போன்ற இடங்களில் அப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதற்கான ஏற்பாடுகளைச் செய்து தந்த கெளரவ அமைச்சர் அவர்களுக்கு நான் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

கிளிநொச்சி நகர நீர்விநியோகத் திட்டமும் மேலும் விரிவாக்கம் செய்யப்பட வேண்டியிருக்கின்றது. அந்தத் திட்டத்துக்குள் உள்ளடங்காத கிராமங்களையும் உள்ளடக்க வேண்டுமென கெளரவ அமைச்சர் அவர்களிடம் கேட்டுக்கொள்கின்றேன். அதேபோல பரந்தன், கோரக்கன்கட்டு, பூநகரி - தெளிகரை போன்ற இடங்களிலும் பூநகரிப் பிரதேசத்தின் சமூக மேம்பாட்டுத்திட்ட நீர்விநியோகங்களை ஆரம்பிக்க வேண்டுமென்று நான் பரிந்துரைக்கின்றேன். எம்மை தங்களின் பிரதிநிதியாக இந்த மன்றிற்கு அனுப்பிவைத்த மக்களுக்கு உருப்படியாக எதையாவது செய்யவேண்டுமென்ற எமது நோக்கத்துக்கு கிடைத்துவரும் வெற்றியையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன்.

பல ஆண்டுகளாகவே சிலர் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்துவருகின்றார்கள். இதனால் அவர்களுடைய குடும்பங்கள் நன்மையடைகின்றதே தவிரஇ மக்களுக்கு எந்த நன்மையும் கிடைப்பதில்லை. இதைவிடஇ கிடைக்கின்ற நன்மைகளைத் தடுக்கின்ற விதமாகத்தான் அவர்களுடைய சிந்தனையும் பேச்சுக்களும் அரசியல் கொள்கைகளும் உள்ளன. இந்நிலை தொடர்வதையிட்டு பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக அவர்களுடைய வேதனையையும் கண்டனத்தையும் இவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கின்றேன். அழிந்தும் சிதைந்தும் போயிருக்கின்ற பிரதேசங்களைக் கட்டியெழுப்பிஇ பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைக்கு உயிரூட்டுவதே இன்றைய முக்கிய பணியாக நாம் கருதுகின்றோம். இதற்கு ஒத்துழைப்பு நல்கும்படி அனைத்துத் தரப்பினரையும் கேட்டு விடைபெறுகின்றேன்.

நன்றி.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com