Thursday, December 20, 2012

இந்திய ராணுவ தளபதி இலங்கையில்! இலங்கை ராணுவ வீரர்களுக்கு மேலதிக பயிற்சி ஓகே.. ஓகே!!

இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவில் பயிற்சி வழங்குவது குறித்து தமிழகத்தில் எதிர்ப்புக் குரல்கள் குறையாத நிலையில், இந்திய ராணுவத்தின் பிரதான தளபதி ஜெனரல் பிக்ரம் சிங், நேற்று (புதன் கிழமை) கொழும்பு வந்து இறங்கியதுடன் இவரின் இலங்கை விஜயத்தின்போது, சிறப்பு ஏற்பாடாக, தியத்தலாவவில் அமைந்துள்ள ராணுவத் தளத்துக்கு அளைத்து செல்வது என திட்டமிடப்பட்டிருந்தது.

அதற்கு காரணம், தியத்தலாவவில் அமைந்துள்ள ராணுவத் தளத்தில்தான், இலங்கை ராணுவப் பயிற்சிக் கல்லூரி (Diyatalawa Sri Lanka Military Academy – SLMA) இயங்குகிறது. இங்கிருந்துதான், இலங்கை ராணுவ வீரர்கள் பயிற்சிக்காக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

கீழேயுள்ள போட்டோக்கள், நேற்று (புதன்கிழமை) இலங்கை ராணுவ தலைமையகத்தில் எடுக்கப்பட்டவை.
இந்த பயிற்சி கல்லூரியில் வைத்து, இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவில் தற்போது வழங்கப்படும் பயிற்சிகளுக்கு மேலதிகமாக மேலும் சிறப்பு ட்ரெயினிங் புரோகிராம்களுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டதை, எந்த தமிழ் மீடியாவும் சொல்லப் போவதில்லை. அடுத்த போட்டோவுக்கு வாருங்கள், நாங்கள் சொல்கிறோம்.

இலங்கையில், தியத்தலாவவில் அமைந்துள்ள ராணுவத் தளத்துக்கு நேற்று விஜயம் செய்த இந்திய ராணுவத் தளபதி, இலங்கை ராணுவப் பயிற்சிக் கல்லூரியில் சுமார் 2 மணிநேரம் செலவிட்டார்.

அப்போது, இந்தியாவுக்கு பயிற்சிக்கு அனுப்பப்படும் இலங்கை ராணுவ வீரர்கள் தற்போது பெறும் பயிற்சிகளைவிட, மேலதிக பயிற்சிகள் வழங்கப்பட ஏற்பாடு செய்வதாக இந்திய ராணுவத் தளபதி பிக்ரம் சிங் தெரிவித்தார்.

இந்திய ராணுவத் தளபதி இலங்கை ராணுவத்தினருக்கு உதவுவதாக வாக்குறுதி அளித்தது எதைப் பற்றி என்று, இலங்கை ராணுவ தலைமையக செய்திக் குறிப்பு இவ்வாறு தெரிவிக்கிறது: “All possible assistance to further improvement of training slots to Sri Lanka Army in various training programmes in India”
இந்த வருடத்தில் மாத்திரம் இலங்கை ராணுவ அதிகாரிகள் 870 பேருக்கு இந்தியா வெவ்வேறு மாநிலங்களில் உள்ள இந்திய ராணுவ பயிற்சி கல்லூரிகளில் பயிற்சியளித்துள்ளது. இந்தியாதான், இலங்கை ராணுவ அதிகாரிகளை பயிற்றுவதற்கு விருப்பத்துக்குரிய இடமாக தொடர்ந்தும் இருப்பதாக தெரிவித்துள்ளது இலங்கை ராணுவம்.

இந்திய தளபதியின் இலங்கை வருகை, இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவில் பயிற்சி வழங்கும் விஷயத்தில் தற்போதுள்ள தடைகள் சிலவற்றை அகற்றிவிடும் என இலங்கை ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையுடன் ராணுவ தொடர்புகளை சீனாவும் பாகிஸ்தானும் அதிகரித்துள்ள போதிலும், இலங்கை ராணுவத்துக்கு அதிக உதவிகளை வழங்குவதில் இந்தியாதான் முன்னணியில் உள்ளது. இலங்கை, கண்டியில் ராணுவ உளவுத்துறை கல்லூரி (National Defense Intelligence College and the Joint Military Intelligence College) ஒன்று இந்தியாவின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ளது.

இலங்கை, கண்டியில் உள்ள ராணுவ உளவுத்துறை கல்லூரியில் தற்போது 10 இந்திய ராணுவ பயிற்சியாளர்கள் தங்கியிருந்து, இலங்கை ராணுவ உளவுத் துறையினருக்கு பயிற்சிகளை வழங்குகிறார்கள்.

இந்தியா, இலங்கைக்கு தாக்குதல் ராணுவ தளபாடங்களை வழங்குவதில்லை என்ற கொள்ளையை வைத்துள்ள போதிலும், இந்த ஆயுதங்களை இலங்கை வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்காக, 100 மில்லியன் அமெரிக்க டாலர் கடனை இலங்கைக்கு வழங்கியுள்ளது.
தளபதி பிக்ரம் சிங் கொழும்பு வந்து  இறங்கிய இரண்டு மணி நேரத்தில், திட்டமிட்டபடி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தொடங்கினார். முதலாவதாக, இலங்கை ராணுவத் தலைமையகத்தை சென்றடைந்த அவரை, இலங்கை ராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய வரவேற்றார்.

அத்துடன், ராணுவ தலைமையகத்துக்கு விஜயம் செய்த ஜெனரல் பிக்ரம் சிங், இலங்கை ராணுவ வீரர்களால் வழங்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

இந்திய ராணுவத் தளபதியின் இலங்கை விஜயத்தின்போது, அவருடைய குழுவில் தளபதி ஜெனரல் பிக்ரம் சிங்கின் மனைவி சுர்ஜிட் கௌர் இடம்பெற்றுள்ளார். இவர் இந்திய ராணுவ நலன்பேணும் சங்கத்தின் தலைவியாக உள்ளார்.

இந்திய ராணுவ குழுவில், மேஜர் ஜெனரல் ரஜீவ் தெவாரி, கர்னல் எஸ்.கே.ஆச்சர்யா, கர்னல் எஸ்.சீ.தேவ்கன் மற்றும் கேப்டன் ரஜீவ் மெத்திவ்ஸ் ஆகியோர் நேற்று இலங்கை வந்தடைந்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com