Saturday, December 22, 2012

புலிப்பேச்சு பேசினால் மாணவருக்கு விடுதலை கிடையாது

தேவையற்ற பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு மாணவர்களை அனுமதிக்க முடியாது. பயங்கரவாதத்தை தூண்டும் எந்தவொரு செயற்பாடும் ஏற்றுக்கொள்ள முடியாது. கடந்த கலத்தில் நடந்தவை நடந்ததாகவே இருக்கட்டும். அதைவிடுத்து நடப்பவை நன்றாக நடக்க வேண்டும். அமைதி நிலைநாட்டப்பட வேண்டும். பயங்கரவாதச் செயற்பாடுகளில் இருந்து மாணவர்கள் விடுபட வேண்டும். இதற்குப் பெற்றோரும், பல்கலைக்கழக விரிவுரையாளர்களும், பேராசிரியர்களும் கவனமெடுக்க வேண்டும்.

இதில் யாரையும் நான் குறை கூறவில்லை. இவ்வாறான மாணவர்களின் செயற்பாடுகளில் கவனமெடுக்காமை யாலேயே சட்டத்தை நிலை நாட்ட பொலிஸாரும் படையினரும் தலையிட வேண்டியேற்பட்டது. இதில் ஈடுபட்ட பல மாணவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். பல்கலைக்கழகச் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் பட்சத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மாணவர்களின் விடுதலைக்கு நான் விரைந்து செயற்படுவேன் என்று யாழ். கட்டளைத் தளபதி மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார். நேற்று பலாலி முப்படைத் தலைமையகத்தில் நடைபெற்ற பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோருடனான சந்திப்பி லேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பல்கலைக்கழக மாணவர்கள் விடுதலை செய்யப்பட்டால் தான் பல்கலைக்கழ கத்தை மீண்டும் திறக்கலாம் என்றால் அது சாத்தியப்படாது. எந்தவொரு நிபந்தனைக்கும் இங்கு இடமில்லை. பல்கலைக்கழகச் செயற்பாடுகள் நடைபெற எந்தத்தடையும் இல்லை. குறிப்பிட்ட மாணவர்கள் புனர்வாழ்விற்குப் பின்னர் விடுவிக்கப்படுவர் என்று உறுதியாகக் கூறுகிறேன். தற்போது பயங்கரவாத உணர்வுடனேயே அந்த மாணவர்கள் இருக்கின்றார்கள். அவர்களுக்கான ஆலோசனைகள், புத்திமதிகள் தற்போது வழங்கப்படுகின்றது. விரைவில் இவர்களின் விடுதலைக்காக நான் பாதுகாப்பு அமைச்சின் செயலரிடம் பேசி நல்லதொரு முடிவை எட்ட முடியும். சில தீயசக்திகளின் தூண்டுதல்களினாலேயே இவ்வாறு மாணவர்கள் பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். அவர்களை உங்களுக்கும், எங்களுக்கும் நன்றாகத் தெரியும். எனவே அவ்வாறான செயற்பாடுகளில் நீங்கள் உங்கள் பிள்ளைகளைச் செல்லவிடாது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்களை வழிநடத்துங்கள் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்தப் பிரச்சினையை ஜே.வி.பி.யுடன் ஒப்பிட்டுப் பேச முடியாது. அது அங்கீகரிக்கப்பட்ட ஒரு கட்சி. அவர்கள் நினைவு கூரல்கள் செய்தாலும் பயங்கரவாதத்தை தூண்டவில்லை. 30 வருடங்களாக நீங்கள் பட்ட துன்பங்களை நாம் அறிவோம்.

நான் படையில் சேர்ந்தபோது குறைவானவர்களே படையில் இருந்தனர். ஆனால் இப்போது அந்த எண்ணிக்கை 2 இலட்சத்தை எட்டியுள்ளது. அதற்கு பயங்கரவாதிகளே காரணம் என்றும் அவர் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இலட்சக் கணக்கான படையினர் இருப்பதாக ஒரு சில பத்திரிகைகளில் செய்தி வெளிவந்தாலும், தற்போது 15 ஆயிரம் படையினரே இருக்கின்றனர். மிகுதியானவர்கள் எமது நாட்டில்தான் இருக்கிறார்கள். அதுமட்டுமல்ல சில பத்திரிகைகள் சிங்களப் படைகள் என்கின்றன. சிங்களப் படைகள் என்று கூறுவது தவறு ஸ்ரீலங்காப் படைகள் என்பதுதான் சரி.

முன்னர் படையில் சிறந்த தளபதிகளாக 4 பேர் இருந்தனர். அவர்கள் தமிழர்களே. ஆனால் அவர்கள் படையில் இருந்து விலகப் பயங்கரவாதிகளே காரணம். எனவே எந்தவொரு பயங்கரவாத செயற்பாட்டையும் ஏற்றுக் கொள்ள முடியாது. இது எந்தவொரு குடிமகனாலும் ஏற்றுக் கொள்ள முடியாத விடயம் என்றார். இந்தச் சந்திப்பில், பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், விடுவிக்கப்பட்ட மாணவர்கள், பெற்றோர்கள், பத்திரி கையாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

விடுவிக்கப்படாமல் புனர்வாழ்வளிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களிடம் அவர்களின் குறைகளைக் கேட்டறிந்த தளபதி மகிந்த ஹத்துருசிங்க, அங்கு அவர்களின் புனர்வாழ்விற்குப் பின்னர் விடுவிக்கத்தாம் உத்தரவாதமளிப்பதாகத் தெரிவித்தார். கண்ணீர் மல்கத் தமது பிள்ளைகளை விடுவிக்குமாறு பெற்றோர் கேட்டுக்கொண்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com