Friday, November 16, 2012

நரம்புத்தளர்ச்சி நீங்க பசலை கீரை

காலை மற்றும் இரவு நேர உணவுகளை விட அறுசுவையுடன் விருந்து போல வயிறு முட்ட ரசித்து, ருசித்து சாப்பிடும் உணவு மதிய உணவுதான்.

ஒவ்வொரு நாள் உணவிலும் ஏதேனும் ஒரு கீரையை உட்கொள்பவர்களுக்கு வைட்டமின் குறைபாட்டினால் உண்டாகும் நோய்கள் ஏற்படுவதில்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதுபோல் கீரையை தொடர்ந்து உட்கொள்பவர்களுக்கு ஆண்மை அதிகரிப்பதுடன் விந்தணுக்களின் எண்ணிக்கையும் கூடுகிறது.

பெரும்பாலான கீரைகள் மிகவும் குளிர்ச்சித்தன்மை உடையதுடன் மலத்தையும் இலக்கும் தன்மையை கொண்டுள்ளன. இதனால் சிலருக்கு சளித்தொல்லை, தொண்டைக்கட்டு போன்றவை எப்பொழுதாவது ஏற்படலாம். இந்த தொல்லைகளுக்காக பயந்து சிலர் கீரையை உட்கொள்வதில்லை. அதுபோன்றவர்கள் கீரையுடன் பருப்பு, மிளகு, சீரகம், மஞ்சள், வெங்காயம் போன்றவற்றை சரியான முறையில் சேர்த்துக்கொண்டால் இந்த தொந்தரவுகள் ஏற்படாமல் தடுக்கலாம்.

தொடர்ந்து ஒரே கீரையை எடுத்துக் கொள்பவர்களுக்கு கீரையில் உள்ள உப்புகள் இரத்தத்தில் அதிகமாக கலந்து கற்களை உண்டாக்கலாம். அது போன்றவர்கள் மூடிய பாத்திரத்தில் கீரையை நன்கு வேகவைத்து, நீரை வடிகட்டி இலைகளை மட்டும் சமைத்து உபயோகப்படுத்தலாம். இதனால் உப்பை தவிர பிற சத்துகள் வீணாகாமல் உடலில் சேருகின்றன.

அது போல் கீரையிலுள்ள இரும்பு, பாஸ்பரஸ், சுண்ணாம்பு, சிலிகா, துத்தநாகம் மற்றும் செலினிய சத்துகள் செல் அழிதல் மற்றும் முதிர்தலை கட்டுப்படுத்தி ஆயுளை நீட்டிக்கின்றன. பெரும்பாலான கீரைகள் போகத்தை அதிகப்படுத்துவதுடன், நாடி நரம்புகளுக்கு வலுவையும் உண்டாக்குகின்றன.

பலவிதமான கீரைகளை நாம் அடிக்கடி உட்கொண்டாலும், சில கீரைகளே அனைவரும் உட்கொள்வதற்கு ஏற்றதாகவும், எளிதில் செரிமானம் ஆகக்கூடியதாகவும் காணப்படுகின்றன. அது போன்ற கீரைகளில் தனித்தன்மை வாய்ந்தது பசலைக்கீரை. தரைப்பசலை, கொடி பசலை என இரண்டு வகைகளாக காணப்படும் பசலைக் கொடிகளில் சிவப்பு நிறத்தண்டுகளையும், சிவப்பு மற்றும் பச்சை நிறம் கலந்த இலைகளையுடைய கொடி பசலையே உணவுடன் கூட்டாக செய்து சாப்பிட பயன்படுத்தப்படுகிறது.

வைட்டமின் ஏ, பி, சி, புரதம், இரும்பு, சுண்ணாம்பு, பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் ஏராளமாக உள்ள பசலைக்கீரையை வாரம் இரண்டு முறையாவது மதிய உணவுடன் சேர்த்து சாப்பிட நரம்புத்தளர்ச்சி நீங்குவதுடன், உடல் உஷ்ணம் தணியும்.

போர்டுலேகா ஸ்பீசஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட போர்டுலேசியே குடும்பத்தைச் சார்ந்த பசலைக்கொடிகள் நட்டு வைத்தால் கூட முளைத்து, கொடியாக படரும் தன்மையை உடையவை. உணவுடன் கடையலாகவும், கூட்டாகவும், குழம்பாகவும் பல விதங்களில் பசலைக்கீரை பாகப்படுத்தப்பட்டு உட்கொள்ளப்படுகிறது.

இதோ பசலைக்கீரை கூட்டு செய்யும் முறை:

*பசலைக் கீரையை நன்கு அலசி காம்பு, நடுநரம்பு நீக்கி, சிறுசிறு துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.

* 100கிராம் பாசிப்பருப்பை மைய வேகவைத்து அதில் வதக்கிய வெங்காயம் 100கிராம், கடுகு‡அரைத்தேக்கரண்டி, உழுந்தம்பருப்பு - அரைதேக்கரண்டியை நல்லெண்ணெயில் தாளித்து, வெந்த பாசிப்பருப்பில் போட்டு வைத்துக் கொள்ளவேண்டும்.

* அதன்பின் அரைமூடி தேங்காயை அரைத்தேக்கரண்டி சீரகம் சேர்த்து நன்கு அரைத்து அத்துடன் மஞ்சள்தூள்‡1தேக்கரண்டி, மிளகாய்த்தூள்‡அரை தேக்கரண்டி மற்றும் உப்பு சிறிதளவு சேர்த்து பாசிப்பருப்புடன் கலந்து 10 நிமிடங்கள் நன்கு வேகவைத்து கிளறி எடுத்துக்கொள்ள வேண்டும்.

சுவையான நீர்ச்சத்து மிகுந்த பசலைக்கீரை கூட்டை மதிய உணவுடன் அடிக்கடி உட்கொள்ள உஷ்ணத்தினால் ஏற்படும் சிறுநீர் எரிச்சல் மற்றும் அக்கி, அம்மை போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com