Thursday, September 13, 2012

அமெரிக்காவிற்கு எதிரான ஆர்ப்பாட்டம் உக்கிரம்!

கொலைகாரர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - பராக் ஒபாமா ஆவேசம்.

இஸ்லாம் மதத்தினை இழிவுபடுத்தும் வகையில் அமெரிக்காவினால் தயாரிக் கப்பட்ட திரைப்படத்திற்கு, உலகில் உள்ள இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு நாடுகளில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன.

லிபியா மற்றும் எகிப்திலுள்ள அமெரிக்க தூதரகங்களின் எதிரில் கூடிய மக்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் லிபியாவின் பெங்காசி நகரிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் அருகில் கூடிய மக்கள் குறித்த திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ்வார்ப்பாட்டத்தின் போது அமெரிக்க தூதரகத்தில் அத்துமீறி புகுந்து தூதரையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கொலை செய்தனர். இதனையடுத்து ஆர்ப்பாட்டம் மேலும் பரவியது. இத்தாக்குதலையடுத்து லிபியாவிற்கு விசேட படையணியொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

2 யுத்த கப்பல்கள் லிபியாவை அண்மித்துள்ளதாக வெளிநாட்டு வட்டாரங்கள் தெரிவித்தன. கொலைகாரர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க போவதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்தார். லிபியிhவின் தலைநகரான திரிப்போலியிலுள்ள அமெரிக்க தூதரகத்திற்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதே வேளை எகிப்தின் தலைநகரான கெய்ரோவில் அமெரிக்காவிற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. கெய்ரோ நகரிலுள்ள அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட வருகை தந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளையும் தண்ணீரையும் பிரயோகித்துள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் அமெரிக்க தேசிய கொடியை தீ வைத்து கொளுத்தினர். அங்கு தொடர்ந்தும் பதற்றம் நிலவுவதாக வெளிநாட்டு வட்டாரங்கள் தெரிவித்தன. இஸ்ரேலின் மேற்கு கரையான காஸா பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்திலும் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர் என வெளிநாட்டுத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com