ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான அமெரிக்கா வழக்கு மீது மீண்டும் விசாரணை
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கு மீதான விசாரணை, நியூயோர்க் நீதிமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை (23-08-2012) இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி விரைவில் அமெரிக்கா செல்லவுள்ள நிலையில் இராஜதந்திர சிறப்புரிமை குறித்தான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
படுகொலை செய்யப்பட்டதாகக் கருதப்படும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகளில் ஒருவரான கேணல் ரமேஸுன் (துரைசிங்கம்) மனைவி வக்சலாதேவியினால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கொன்று, அமெரிக்க நீதிமன்றத்தில் உள்ளது. இதனையே வக்சலாதேவி எதிர் மஹிந்த ராஜபக்ஷ (Docket# 11-CIV-6634) இலக்க வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைய, இராஜதந்திர சிறப்புரிமையின் பிரகாரம், வழக்கை அமெரிக்க நீதி மன்றங்களில் விசாரிப்பதற்கெதிராக இராஜதந்தர விலக்கினை சுட்டிக்காட்டி பரிந்துரையினை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தாக்கல் செய்திருந்தது.
செப்டெம்பர் மாதம் , நியூயோர்கில் உள்ள ஐ.நாவின் பொதுச்சபையில் உரையாற்றுவதற்காக, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமெரிக்காவிற்கு செல்லவுள்ள நிலையில், கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றுள்ள வழக்கு விசாரணையானது, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பரிந்துரையின் பிரகாரம், ஒரு நாட்டின் அரச தலைவருக்குரிய இராஜதந்திர சிறப்புரிமையினை பாதுகாப்பு கவசமாக கொண்டு குறித்த வழக்கினை தள்ளுபடி செய்வதா என்பதேயாகும்.
இந்த வழக்கு விசாரணையில் நீதியினைக் கோரிநிற்கும் மனுதாரர் வக்சலாதேவியின் சார்பில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமரும், வழக்கறிஞருமகிய விசுவநாதன் உருத்திரகுமாரன் பங்கெடுத்திருந்தார். மனுதாரருக்கு ஆதரவாக பரிந்துரை மனுதாக்கல் செய்திருந்த ´ஸ்பீக்கியூமன்ரைட்ஸ்´ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்காக வழக்கறிஞர் அலிஅபெட் பெய்டொன் ஆஜராகியிருந்தார்.
இந்த வழக்கினை நீதிபதி நயோமி ரீஸ்புக்வால்ட் தலைமையேற்று நடத்தியிருந்தார். அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினை உப வழக்கறிஞர் அமி. ஏ.பாசிலோ பிரதிநிதித்துவம் செய்திருந்தார். அமெரிக்க கொங்கிரஸ், இராஜாங்க திணைக்களத்தின் பரிந்துரைக்கும் தகுதியை இல்லாமல் செய்யும் சட்டங்கள் ஒன்றையும் இயற்றவில்லை என நீதிபதி தனது அபிப்பிராயத்தில் சுட்டியிருந்தார். இந்த வழக்கு விசாரணையின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.
0 comments :
Post a Comment