பௌத்த நாட்டில் மிருகப்பலி கொடுக்கமுடியாது என்கிறார் மேர்வின் உடன்படுகிறார் மனோ கணேசன்.
மிருகங்களை பலியிடுவதை எந்தவொரு சமயமும் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் பௌத்த நாடாகிய இங்கு இப்பாதகச்செயல் இடம்பெறுவதை அனுமதிக்க முடியாது எனவும் தெரிவிதுள்ள மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மர்வின் சில்வா இச்செயல் இங்கு தொடர்ந்தும் இடம்பெறுமாயின் நான் சத்தியாக்கிரகம் செய்யவிருப்பதாகவும் முன்னறிவித்தல் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் கருத்துரைத்துள்ள மனோ கணேசன் மனிதர்கள், மிருகங்கள் உட்பட எந்த ஒரு ஜீவராசியும் கொல்லப்படுவதையும், வதை செய்யப்படுவதையும் இந்து மதம் ஏற்றுக்கொள்ளவில்லை. மிருகங்கள் பலியிடுவதை இந்துதர்மம் அங்கீகரிக்கவில்லை. பௌத்த மதம் உருவாவதற்கு முன்னர் இருந்தே இந்து மதம் இந்த உயரிய கருத்துகளை மனிதகுலத்திற்கு போதித்து வருகிறது.
எனவே முன்னேஸ்வரம் கோவிலில் மிருகங்கள் பலியிடப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்பது எமது கருத்தும் ஆகும். இது சட்ட நடவடிக்கை மூலமாகவும், இந்து அமைப்புகளின் ஒத்துழைப்புகள் மூலமாகவும், மிருகவதையை எதிர்த்து சாத்வீக நடவடிக்கைகள் மூலமாகவும் இந்த மிருக வதை மற்றும் பலியிடல்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும்.
எனவே அமைச்சர் மேர்வின் சில்வா முன்னேஸ்வரம் கோவிலில் மிருக வதை மற்றும் பலியிடல்களை எதிர்த்து செய்யும் சத்தியாகிரகம் சாத்வீக போராட்டமாக அமைய வேண்டும். அந்த பகுதியில் தேவையற்ற பதட்ட நிலைமைகளை ஏற்படுத்தாதவிதத்திலும், இந்த மத உணர்வுகளை புண் படுத்தாத முறையிலும் அது அமைய வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,
கடந்த வருடம் இந்த பலியிடல்களை எதிர்த்து முன்னேஸ்வரத்தில் அமைச்சர் மேர்வின் சில்வா கோவில் வளாகத்தில் நுழைந்து நடந்துகொண்ட முறைமை இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாகவும், பூசகர்களையும், பக்தர்களையும் அச்சுறுத்தும் விதமாகவும் அமைந்திருந்தது. இது மீண்டும் நடக்க கூடாது. மேலும் இந்த ஆலயத்துக்கு தமிழ் இந்துக்களுடன், சிங்கள பௌத்தர்களும் பெருவாரியாக வருகை தருகிறார்கள். பலியிடல் செய்பவர்களில் இந்துக்கள் அல்லாதவர்களும் இடம் பெறுகிறார்கள்.
கடந்த ஒரு வருட அவகாசத்தில் அமைச்சர் இது சம்பந்தமாக மத விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சருடன் இணைந்து இந்த விவாகரத்துக்கு முடிவு கண்டிருக்க வேண்டும். முன்னேஸ்வரத்தில் மிருக பலியிடல்களை நிறுத்த வேண்டும் என்ற தேவை இருப்பின் இதை அவர் செய்திருக்க வேண்டும். ஆனால் அதை செய்யாமல் இருந்துவிட்டு, உற்சவ காலத்தில் திடீரென அடாவடி அறிவித்தல்களை கொடுத்து, ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்துவது ஏற்புடையது அல்ல.
பௌத்த மத விகாரைகள் தொடர்பில் இத்தகைய அறிவித்தல்களை நாம் விடுத்து இருந்தால் அது தேவையற்ற மத சச்சரவுகளை இந்நேரம் ஏற்படுத்தியிருக்கும். பௌத்தரான மேர்வின் சில்வா கடந்த 40 வருடங்களாக முன்னேஸ்வரம் ஆலயத்திற்கு சென்று வருபவராக இருந்தாலும் அது ஒரு இந்து ஆலயம் என்பதை அவர் மறந்து விடக்கூடாது.
எனவே மத நல்லுறவுகளுக்கு கேடு வராத விதத்திலும், தேவையற்ற பதட்டங்களை அந்த பகுதியில் ஏற்படுத்தாத விதத்திலும், இந்து மக்களின் மத உணர்வுகளை புண் படுத்தாத விதத்திலும் அமைச்சர் மேர்வின் சில்வா தனது சத்தியாகிரகத்தை நாகரீகமாக நடத்த வேண்டும். அது வெற்றி பெற்று மிருக வதை மற்றும் பலியிடல்கள் மாத்திரம் அல்ல, இந்நாட்டில் நடைபெறும் மனிதவதைகளும் முடிவுக்கு கொண்டுவரப்படவேண்டும் என நான் வாழ்த்துகிறேன்.
0 comments :
Post a Comment