விமான விபத்தில் காணாமல் போன இந்திய தூதரக பை 46 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிப்பு
கடந்த 1966ம் ஆண்டு ஜனவரி 24ம் தேதி மும்பையில் இருந்து நியூயார்க் சென்ற ஏர் இந்தியாவின் போயிங்-707 என்ற பயணிகள் விமானம், பிரான்சில் விபத்துக் குள்ளானது. மேற்கு ஐரோப்பாவின் மிகப்பெரிய மலைத்தொடரான ஆல்ப்ஸ் மலைத்தொடரில் விமானம் விழுந்து நொறுங்கியதால், அதில் பயணம் செய்த 117 பேரும் இறந்தனர்.
இந்த விமானத்தில் இருந்த இந்திய தூதரகம் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் கடிதங்கள் அடங்கிய பை இருந்தது. அந்த பை என்ன ஆனது என்று இதுவரை தெரியாமல் இருந்தது.
இந்நிலையில் அந்த பை, ஆல்ப்ஸ் மலைத்தொடரின், மவுன்ட் பிளாங்க் என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணியாளர் அர்னார்டு கிறிஸ்ட்மேன் மற்றும் அவரது பக்கத்து வீட்டுக்காரர் ஜூல்ஸ் பெர்ஜர் ஆகியோர் கடந்த 21ம்தேதி அந்த பையை கண்டெடுத்துள்ளனர்.
இதுபற்றி கிறிஸ்ட்மேன் கூறுகையில், ‘அப்பகுதிக்கு சென்ற சுற்றுலா பயணிகள் சிலர் அங்கு பனிப்பாறையில் பளபளப்பான ஒரு பொருள் இருப்பதாக கூறினர். இதையடுத்து அங்கு சென்று பார்த்தபோது விமானத்தின் பாகங்கள் கிடந்தன. சற்று தூரத்தில் ஈரமான நிலையில் பை இருந்தது. அந்த பையை யாரோ ஒருவர் வைத்துவிட்டு சென்றதுபோல் அப்படியே இருந்தது. அந்தப் பையில் விலை உயர்ந்த வைரமோ, தங்கமோ இருக்கலாம் என்ற நம்பிக்கையில் திறந்து பார்த்தோம். ஆனால் அதில் ஈரமான நிலையில் அரசு கடிதமும், இந்திய செய்தித் தாள்களும் இருந்தன’ என்றார்.
இந்த தூதரக பை, மலையடிவாரத்தில் உள்ள சாமோனிக்ஸ் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி தகவல் தெரியவில்லை என்றும், அந்த பை கிடைக்கப் பெற்றதும் ஆய்வு செய்யப்படும் என்றும் பாரிஸ் நகரில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
கடந்த 2008ல் ஆல்ப்ஸ் மலைத்தொடரின் இதே பகுதியில் பிரபல மலையேற்ற வீரர் டேனியல் ரோச் என்பவர் ஆய்வு செய்தார். அப்போது 1996 ஜனவரி 23ம் தேதியிட்ட சில இந்திய செய்தித் தாள்களை கண்டுபிடித்தார். மேலும் 1950ல் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமான என்ஜின் பாகத்தையும் கண்டுபிடித்தது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment