Tuesday, May 1, 2012

பின்லேடன் இல்லாத உலகம்... நாளை முதலாமாண்டு நினைவு நாள்!

பாகிஸ்தானின் அபோத்தாபாத்தில் உள்ள ஒரு வீட்டில் வைத்து அமெரிக்கப் படையினர், அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனைக் கொன்று நாளையுடன் ஒரு ஆண்டு நிறைவடைகிறது. இதையடுத்து அமெரிக்கா முழுவதிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

ஒசாமா பின் முகம்மது பின் அவாத் பின்லேடன் என்ற இயற்பெயரைக் கொண்ட பின்லேடன் உலகையே உலுக்கிய மிகப் பெரிய தீவிரவாதி. அமெரிக்காவின் கண்களில் விரலை விட்டு ஆட்டிய பின்லேடன், நியூயார்க் நகரிலும், வாஷிங்டனிலும் தீவிரவாத தாக்குதல்களை நடத்தி அமெரிக்காவை மட்டுமல்லாமல் உலகையே அதிர வைத்த நபர்.

அல் கொய்தா அமைப்பை உருவாக்கி அமெரிக்காவுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த பின்லேடன், அமெரிக்கா மற்றும் அமெரிக்க ஆதரவு ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டு வந்தார்.

சவூதி அரேபியாவைச் சேர்ந்த பெரும் செல்வந்த குடும்பத்தில் பிறந்தவரான பின்லேடன், அமெரிக்காவின் எப்பிஐயின் முக்கிய 10 தீவிரவாதிகளின் பட்டியலில் இடம் பெற்றிருந்த நபர்.

நியூயார்க் இரட்டை கோபுரத் தாக்குதலுக்கு முன்பு வரை பின்லேடன் குறித்து அதிகம் கவலைப்படாமல்தான் இருந்து வந்தது அமெரிக்கா. ஆனால் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின்னர் பின்லேடனை பிடிப்பதற்காக பெரும் பொருட் செலவில் தீவிரமாக தேடி வந்தது.

இந்த நிலையில்தான் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு அருகே அபோத்தாபாத் என்ற இடத்தில் ஒரு வீட்டில் தனது மனைவிகள், பிள்ளைகளுடன் பின்லேடன் பதுங்கியிருப்பது அமெரிக்காவுக்குத் தெரிய வந்தது. இதையடுத்து 2011ம் ஆண்டு மே 2ம் தேதி அதிகாலையில் அங்கு புகுந்த அமெரிக்க கடற்படை சீல் பிரிவு கமாண்டோக்கள் மின்னல் வேகத்தில் செயல்பட்டு பின்லேடனை சரமாரியாக சுட்டு வீழ்த்தினர்.

இந்த அதிரடித் தாக்குதல் சம்பவத்தை அமெரிக்காவில் இருந்தபடி அதிபர் ஒபாமா உள்ளிட்டோர் நேரில் பார்த்தனர் என்றும் அப்போது தகவல்கள் வெளியாகின. பின்லேடன் கொலை சம்பவத்தை வீடியோ திரையில் பார்த்தபடி ஒபாமா, ஹில்லாரி கிளிண்டன் உள்ளிட்டோர் பரபரப்பான முகங்களுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாளையுடன் பின்லேடன் கொல்லப்பட்டு ஒரு ஆண்டு நிறைவடைகிறது. லேடனைக் கொன்றதும் உடலைக் கைப்பற்றி எடுத்துச் சென்ற அமெரிக்க வீரர்கள் பின்னர் அதை கடலில் வீசி விட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதேசமயம், பின்லேடன் கொல்லப்பட்டது தொடர்பான புகைப்படத்தையோ, வீடியோவையோ அமெரிக்கா இதுவரை வெளியிடவில்லை. அதை வெளியிடவும் மாட்டோம் என்றும் அமெரிக்கா அறிவித்துள்ளது.

பின்லேடன் கொல்லப்பட்டதன் முதலாமாண்டு நினைவு நாளைத் தொடர்ந்து அசம்பாவிதங்களைத் தடுப்பதற்காக அமெரிக்கா முழுவதும் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு நிபுணர்கள், அதிரடி கமாண்டோக்கள் நாடு முழுவதும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஒபாமாவை படுகொலை செய்ய உத்தரவிட்டார் பின்லேடன்'

பாகிஸ்தானில் பதுங்கியிருந்தபோது அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவைப் படுகொலை செய்ய உத்தரவிட்டிருந்தார் பின்லேடன் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் என்பிசி நிறுவனம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அந்த செய்தியில் கூறுகையில், அபோத்தாபாத் வீட்டில் பின்லேடன் பதுங்கியிருந்தபோதும் தனது தீவிரவாத செயலில் தீவிரமாகவே இருந்துள்ளார். தொடர்ந்து தனது கூட்டாளிகளுக்கு அவர் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்து வந்துள்ளார். குறிப்பாக அதிபர் ஒபாமா, ராணுவத் தளபதி டேவிட் பெட்ரிஷியஸ் ஆகியோரைப் படுகொலை செய்யவும் அவர் உத்தரவிட்டிருந்தார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

மூத்த அமெரிக்க ராணுவ அதிகாரி ஒருவர் இத்தகவலைத் தெரிவித்ததாக அந்த செய்தியின் ஆசிரியர் தெரிவித்துள்ளார். பின்லேடன் கொல்லப்பட்ட பின்னர் அவரது வீட்டில் நடத்தப்பட் ரெய்டின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களிலிருந்து இது தெரிய வந்ததாக அந்த ராணுவ அதிகாரி கூறினாராம்.

பின்லேடனைக் கொன்ற பின்னர் அவர் பதுங்கியிருந்த வீட்டிலிருந்து கம்ப்யூட்டர்கள், ஹார்ட் டிஸ்க்குகள் ஆகியவற்றை அமெரிக்க சீல் படையினர் கைப்பற்றிச் சென்றனர் என்பது நினைவிருக்கலாம்.

இருப்பினும் அதிபர் ஒபாமாவைப் படுகொலை செய்வது தொடர்பான திட்டம் எதுவும் அந்த வீட்டில் இல்லை என்றும், எதிர்காலத் தாக்குதல்கள் குறித்த திட்டங்கள் ஏதும் கிடைக்கவில்லை என்றும் அந்த செய்தி கூறுகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com