Saturday, May 19, 2012

பொன்சேகா போன்று தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவிக்க வேண்டும்- சித்தார்த்தன்

சிங்கள மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதற்காக சரத் பொன்சேகாவை விடுதலை செய்யும் அரசாங்கம் ஏன் தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்து தமிழ் மக்களுடனான நல்லிணக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள முயலவில்லை என புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் கேள்வியெழுப்பியுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஏற்கனவே பல்வேறு சந்தர்ப்பங்களிலும் சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் பேச்சுக்களை நடத்தி வந்தோம். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசாங்கத்துடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளோம். தேசிய நல்லிணக்கம் நாட்டில் உருவாக வேண்டுமென ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும், அரசாங்கத் தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால், அதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எம்மால் காண முடியவில்லை. சிங்கள மக்களின் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதற்காக சரத் பொன்சேகாவை அரசாங்கம் நிபந்தனையின்றி விடுதலை செய்யப் போகின்றது. தமிழ் மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதற்காக ஏன் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கூடாது. அதை விடுத்து தேசிய நல்லிணக்கம் தொடர்பில் பேசுவதால் எதுவும் நடைபெறப்போவதில்லை. எனவே, அரசாங்கம் இது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும்.

பொது மன்னிப்பு வழங்கப்பட்டு அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை தங்களது விடுதலையை வலியுறுத்தி கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை, வவுனியா மற்றும் களுத்துறை சிறைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

1 comments :

Arya ,  May 20, 2012 at 12:51 AM  

hi mad siththa , if they released , they will kill u first , because they are ltte and was ur enamy until u join to TNA, did u forget passt ? do you want open sivaram file again and your jeep matter ?

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com