கிளிநொச்சியில் வெசாக் கூட்டை முட்டிய மாட்டுக்கு வெடி இளைஞன் காயம்.
இதுவா நல்லிணக்கம் கேட்கின்றார் ஜேவிபி எம்பி!
கிளிநொச்சி குமாரசுவாமி கிராமத்தில் அமைக்கப்பட்ட வெசாக் கூட்டை முட்டிச் சேதமாக்கிய கால்நடைகளை இராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் கால் நடைகளை மேய்த்துச் சென்ற சிறுவனொருவன் படுகாயமடைந்துள்ளான். கடந்த திங்களன்று இச்சம்பவம் நடைபெற்றாலும் இப்போதுதான் தகவல்கள் வெளிவந்துள்ளன.
காயமடைந்த 15 வயதான் எஸ். கிருஷ்ணகுமார், பட்டிக்கு மாடுகளை சாய்த்துக்கொண்டு சென்றபோது இராணுவக் காவலரண் ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த வெசாக் கூட்டை மாடொன்று முட்டிச் சேதப்படுத்தியுள்ளது. இதனையடுத்து படைச் சிப்பாய் ஒருவர் கண்மூடித்தனமாக துப்பாக்கி வேட்டுகளைத் தீர்த்ததாகவும் இதனால் சிறுவனின் வயிற்றுப் பகுதியில் பலத்த காய்மேற்பட்டதாகவும் தெரிகிறது.
அப்பகுதிக்கு வந்த படையினர் உடனடியாகச் சிறுவனை கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். பின்னர் ஹெலிகொப்டர் மூலம் எடுத்துச்சென்று அனுராதபுரம் வைத்திய சாலையில் அனுமதித்ததாகவும் தெரியவருகிறது.
துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட இராணுவச் சிப்பாய்க்கு என்ன நடந்த்தென இதுவரை எவ்வித தகவல்களும் வெளிவரவில்லை.
இதேவேளை நேற்று, பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனநாயக தேசியக் கூட்டணியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இச்சம்பவத்தைக் குறிப்பிட்டு ' இதுதான் தமிழருக்குக் காட்டும் நல்லிணக்கமா?' எனக் கேள்வியெழுப்பியுள்ளார். மீள் குடியேற்றம் தொடர்பான சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைச் சுட்டிக்காட்டினார்.
0 comments :
Post a Comment