Monday, May 7, 2012

கொடியும் பிடியும்!

சம்பந்தன் தேசியக் கொடி தூக்கியற்கு மாவை மன்னிப்பு கோரினால் மாவை வைத்திருக்கும் ராஜதந்திரக் கடவுச்சீட்டுக்கு யார் மன்னிப்பு கோருவது?

ஐக்கிய தேசியக் கட்சி தனது மே தினக் கொண்டாட்டத்தை இவ்வாண்டு யாழ்ப்பாணத்தில் கொண்டாடவேண்டுமெனத் தீர்மானித்தபோது, ஏன் இந்த முடிவு என்று புருவம் உயர்த்தினர் பலர். அதுவும் இந்த மேதினக் கொண்டாட்டத்தைத் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து கொண்டாடவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்தபோது அது சாத்தியமா எனவும் கேட்டனர். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதனை உறுதிசெய்தபோது அதற்குச் சாதகமாகவும் பாதகமாகவும் கருத்துகள் எழுந்தன.

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் எதிரானவர்களும், ஏனைய கட்சிகளும் இந்தப் புதுக்கூட்டணி தொடர்பாக தங்களால் முடிந்தளவு விமர்சனங்களை முன்வைத்தாலும் திட்டமிட்டபடி ஐ.தே.க வும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் கூட்டாக யாழ்ப்பாணத்தில் தமது இணைந்த மே தினத்தைக் கொண்டாடின. மே தினக்கூட்ட மேடையில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் ஐ தே க தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து இலங்கையின் தேசியக் கொடியை உயர்த்திப் பிடித்து தமது ஒற்றுமையை உலகுக்கு எடுத்துக்காட்டியமை கூட்டத்தின் உச்சக்கட்டம்.

மறுநாள் இலங்கையில் வெளியான தமிழ் ஆங்கில சிங்கள நாளேடுகள் தமது முதற் பக்கங்களில் இது தொடர்பான வர்ணப் புகைப்படங்களைப் பெரிய அளவில் பிரசுரித்திருந்தன. சம்பந்தனின் இந்த மாற்றத்தைப் பல மாற்று அரசியல் கட்சிகள் வரவேற்றிருந்தபோதும், தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் போன்ற சிங்கள இனவாதக் குழுமங்கள் இதனை வன்மையாக விமர்சித்திருந்தன. குறிப்பாக சம்பந்தன் கையில் இலங்கைக் கொடியை ஏந்தியமையால் இலங்கைக்கு ஆபத்து நேரப்போவதாக இந்த இயக்கம் விமர்சித்திருந்தது. அதேபோன்று தமிழ்த் தேசியவாதம் பேசும் சில தமிழர் தரப்புகள்கூட சம்பந்தனின் இந்தத் தேசியக் கொடி விவகாரத்தை தமிழ் இனத்திற்கே நேர்ந்த அவமானம்போன்று கருதின.

இது இவ்வாறிருக்க, யாழ்நகரில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மேதினத்தில் சிங்கக்கொடி ஏந்தியமைக்காக பகிரங்கமாக மன்னிப்புக் கோருகின்றேன் என்று தெரிவித்தார். சர்வதேச ஊடகச் சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் ஓர் அமைப்பு முன்னெடுத்த மூத்த ஊடகவியலாளர் கௌரவிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது, ' மேதினத்தில், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வேண்டுமென்று சிங்கக் கொடியினை கையில் ஏந்தவில்லை, அவரது கையில் சிங்கக்கொடி திட்டமிட்டுத் திணிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்திற்காக நான் பகிரங்கமாக மன்னிப்புக்கோருகிறேன்' என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஐ தே கவுடன் கூட்டாக மே தினக் கொண்டாட்டங்களை நடத்தியமைக்கோ அல்லது தேசியக் கொடியைக் கையில் ஏந்தியதற்கோ எவ்வித எதிரான கருத்துகளையும் தெரிவிக்காத தமிழர்கள் பலர், மாவையின் இந்த அறிவிப்புத் தொடர்பாக வியப்படைந்ததுடன் இப்போது இந்த நிகழ்வினை மையமாகக் கொண்டு தங்களது விமரிசனங்களை முன்வைத்துள்ளனர்.

இன்றைக்கு வடக்குக் கிழக்கு உட்பட இலங்கையின் எல்லாப்பகுதிகளிலும் கடமைபுரியும் அனைத்து அரசாங்க ஊழியர்களும் – அவர்கள் தமிழர்களாக இருப்பினும், இலங்கை அரசுக்கு விசுவாசமாகப் பணியாற்றுவதாகச் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டவர்களே. அவர்களது அலுவலகங்களில் விழாக்களிலேற்றப்படும் தேசியக் கொடி சிங்கக் கொடியே. அத்துடன், அரச தமிழ் மொழி மூல பாடசாலைகளில் சிங்கக்கொடி ஏற்றப்படுவதுடன் தேசிய கீதமும் இசைக்கப்படுகிறது.

இரா சம்பந்தன், ஓர் இலங்கைப் பிரஜை. அவர் தேசிய கீதம் பாடவேண்டுமென்றால் இலங்கையின் தேசிய கீதத்தைத்தான் பாடவேண்டும். அவர் இலங்கையில் கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் ஏற்றப்படும் தேசியக் கொடியென்றால் இலங்கையின் சிங்கக் கொடிமட்டுந்தான். அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் என்பதைத் தவிர இலங்கைப் பாராளுமன்றத்தின் உறுப்பினராகவும் உள்ளார். பாராளுமன்றத்தில் பதவியேற்புச் சத்தியப் பிரமாணம் செய்யும்போது இலங்கையின் இறைமையைப் பாதுகாப்பதாகத்தான் உறுதிமொழி எடுத்துள்ளார். இலங்கையின் இறைமை என்பது இலங்கையின் அரசியலமைப்பு, தேசியக் கொடி, தேசிய கீதம் எல்லாவற்றையும் உள்ளடக்கியதே. எனவே அவர் தேசியக் கொடியை கையில் ஏந்தியதில் எந்தவித தவறும் இருப்பதாக எவருமே கருத இடமில்லை.

அதுமட்டுமன்றி திரு.சம்பந்தன் தமது வெளிநாட்டுப் பயணங்களுக்காகப் பயன்படுத்துகின்ற கடவுச்சீட்டு இறைமையுள்ள இலங்கையின் அரசால் வழங்கப்பட்ட இராஜதந்திரிகளுக்காக வழங்கப்படும் கடவுச்சீட்டே. மாவை சேனாதிராஜா சொல்வதைப்போன்று தேசியக் கொடி ஏந்தியமைக்காக தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோருதுவதென்றால் பாராளுமன்றத்தில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டமைக்கும் இராஜதந்திர கடவுச் சீட்டைப் பயன்படுத்துவதற்கும் அவர் மன்னிப்புக் கோரவேண்டுமல்லவா?

இதில் கவலைக்குரியது என்னவென்றால் சிங்கக் கொடி திட்டமிட்டே சம்பந்தன் கையில் திணிக்கப்பட்டதாகக் கூறுவதே. அப்படியென்றால் சம்பந்தன் ஐயா ஒரு பால் குடிப் பாலகனா?. அவர் தனது கையில் யாரால் என்ன திணிக்கப்படுகிறது என்று அறியாது புரியாது ஏமலாந்திக்கொண்டிருக்கிறாரா?. தனது கையில் என்ன திணிக்கப்படுகிறது எனத் தெரியாமல் அண்ணாந்து பார்த்துக்கொண்டு நிற்கும் ஒருவரிடமா, தமிழ்ப் பேசும் மக்கள் நம்பி, தம்மை வழிநடத்திச் செல்லும் பொறுப்பை ஒப்படைத்திருக்கின்றனர்? அதுமட்டுமல்ல. தேசியக் கொடியை கையில் ஏந்திய சம்பந்தன் அவர்கள் அதை தனது கடமையும் கௌரவமுமாக கருதுகின்றபோது மன்னிப்புக் கோருவதன் மர்ம்ம் என்ன?


இளைஞர்களுக்கு ஈழக்கனவை ஊட்டி, அவர்களைப் போராட்டத்தின்பால் தள்ளிவிட்டு அந்த உணர்வலைகளில் அள்ளுப்பட்டு மொத்தமாகப் பாராளுமன்றம் சென்றுவிட்டு பின் இலங்கையின் இறைமையைப் பாதுகாப்பதாகச் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டபோது இவர்களுக்கு அவமானமாக இருக்கவில்லையா?

பாராளுமன்ற நாற்காலிகளுக்காக இளைஞர்களைப் பலிக்கடாவாக்கிய இவர்கள் இன்று இணைந்த இலங்கைக்குள் சுயாட்சி என்று தாளத்தை மாற்றிப்போடத் தொடங்கிவிட்டனர். இதையே 'மத்தியில் கூட்டாட்சி. மாநிலத்தில் சுயாட்சி' என்று வேறு ஒரு கட்சி சொன்னபோது அந்தக்கட்சி துரோகிக் கட்சியாக முத்திரை குத்தப்பட்டது. அப்படியென்றால் கூட்டமைப்பை என்னவென்று நாம் அழைப்பது?

அன்றைக்கு எங்களிடம் சுயாட்சியைத் தவிர எல்லாமும் இருந்தது. ஆனால் இன்றைக்கு 3 தசாப்த கால யுத்தம், சுயாட்சியை மட்டுமல்ல எங்கள் பிள்ளைகளையும், எங்களிடமிருந்த எல்லா வளங்களையும் அல்லவா அள்ளிக்கொண்டு போய்விட்டது. தமிழர்கள் இனியும் இவர்களின் உணர்ச்சியூட்டும் பேச்சுக்களை நம்பி நாதியற்று நடுத்தெருவில் நிற்கின்ற நிலை தொடர வேண்டுமா?

வேந்தன்

1 comments :

Nalliah May 13, 2012 at 4:00 PM  

ஐக்கிய தேசியக் கட்சி ஏற்கனவே பல தடவைகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், மனோ கணேசனுக்கும் முதுகிலும், நெஞ்சிலும் மாறி மாறிக் குத்தியதை மறந்து இவர்கள் செயற் பட்டமை இவர்களது தவறு. ஐ.தே.க.வுடன் ஒன்று சேர்ந்து என்னத்தை இவர்கள் சாதிக்கப் போகிறார்கள்?

யாழ்ப்பாண மே தின விழா மேடையில் வைத்து மனோ கணேசனை ரணில் அவமதித்துள்ளார். அவருக்கு பேச்சுக்கு இறுதியாக அதுவும் கூடியிருந்த சிறு சனக் கூட்டமும் கலைந்து சென்ற பின்னரேயே சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. அதனால் மனோ கணேசன் உரையாற்றாம லேயே மேடையிலிருந்து இறங்கிச் சென்றுவிட்டார்.

நல்லையா தயாபரன்

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com