தேசிய மெய்வல்லுனர் போட்டியில் அளவெட்டி அருணோதயக்கல்லூரிக்கு 4 தங்க பதக்கங்கள்.
யாழ்ப்பாணம் அளவெட்டி அருணோதயாக் கல்லூரிக்குத் தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர்ப் போட்டிகளில் 4 தங்கப் பதக்கங்களையும் 2 வெண்கலப் பதக்கங்களையும் வென்று சாதனை படைத்துள்ளனர். 55 ஆவது தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர்ப் போட்டிகள் நேற்று ஹோமாகம தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் ஆரம்பமாயின.
இப்போட்டிகளில் கலந்துகொள்ளும் அளவெட்டி அருணோதயாக் கல்லூரியின் மாணவ மாணவிகள் கோலூன்றிப் பாய்தல் போட்டிகளில் தங்கங்களை அள்ளிச் சென்றுள்ளனர்.
பெண்களுக்கான போட்டிகளில் 18 வயதுப் பிரிவில் கே. டிலக்ஷனாவும், 20 வயதுப் பிரிவில் ஏ. பவித்ராவும், 23 வயதுப் பிரிவில் எஸ்.தனுஜாவும் தங்கப் பதக்கங்களைப் பெற ஆண்களுக்கான 18 வயதுப் பிரிவில் பீ. லவனன் தங்கப்பதக்கத்தைப் பெற்றுள்ளார்.
அது மட்டுமன்றி 18 வயதுக்கான ஆண்கள் கோலூன்றிப் பாய்தல் போட்டியில் தங்கம் வெள்ளி வெண்கலப் பதங்கங்களை யாழ் மாணவர்களே பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. தெல்லிப்பளை மஹாஜனாக் கல்லூரி மாணவன் அன்ரனி பிரசாத் வெள்ளிப் பதக்கத்தையும், அருணோதயாக் கல்லூரியைச் சேர்ந்த எம் சார்ள்ச் அன்ரனி வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனர்.
அருணோதயாக் கல்லூரியின் ஆர். காவேரி 23 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் கோலூன்றிப் பாய்தல் நிகழ்ச்சியில் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுள்ளார்.
தேசிய மட்டத்தில் அருணோதயா கல்லூரி மாணவர்கள் அண்மைக் காலத்தில் கோலூன்றிப் பாய்தல் போட்டிகளில் தமது திறமைகளை வெளிக்காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment