இலங்கைத் தமிழர்களிடமில்லாத ஈழக்கனவு கருணாநிதியிடம். இந்திய எம்பி ஏளனம்.
அண்மையில் கருணாநிதி தெரிவித்த ஈழக்கனவு தொடர்பாக இலங்கை வந்து சென்ற எம்பி ஒருவர் தான் இலங்கை வந்து இங்குள்ள தமிழ் மக்களிடம் பேசியபோது இலங்கைத் தமிழர்களிடம் காணப்படாத ஈழக்கனவு கருணா நிதியிடம் காணப்படுவதாக தெரிவித்துள்ளார். மேற்படி கருத்து மோதல் தொடர்பாக இந்திய பிரபல இணையத்தளம் ஒன்று :
கருணாநிதியின் ஈழம்: இலங்கை தமிழர்களே கோரவில்லை -ரங்கராஜன் எம்.பி.
எனத் தலையங்கமிட்டு இவ்வாறு கூறுகின்றது.
“இலங்கைத் தமிழ்த் தலைவர்கள் சிங்களர்களுடன் ஒன்றாக வாழவே விரும்புகிறார்கள். அந்த நாட்டுக்குள் ஒரு அரசியல் தீர்வை கேட்கிறார்கள். ஈழம் வேண்டுமென்று எவரும் கேட்கவில்லை” இவ்வாறு தெரிவித்துள்ளார், சமீபத்தில் இலங்கை சென்று திரும்பிய இந்திய எம்.பி.க்கள் குழுவில் ஒருவரான டி.கே.ரங்கராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி)
தி.மு.க. தலைவர் கருணாநிதி, “ஐக்கிய நாடுகளின் தலையிட்டு கிழக்கு திமோர், கோசோவா, மான்டெனெக்ரோ ஆகிய நாடுகள் புதிதாக தோற்றம் பெற்றதைப் போன்று இலங்கையிலும் தமிழீழம் உருவாக வேண்டும்” என்று ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தார். அது பற்றி கருத்து கேட்டபோதே, இலங்கை சென்று திரும்பிய ரங்கராஜன் “ஈழம் வேண்டும் என்று அங்கே யாரும் கேட்கவில்லையே” என்று பதிலுக்கு கேள்வி எழுப்பினார்.
தனது கருத்தை உறுதி செய்வதற்காக அவர், மற்றொரு சம்பவத்தையும் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பிரதான தமிழ்க் கட்சியாக உள்ளது தமிழ் தேசியக் கூட்டமைப்பு. இலங்கை பிரச்னையில் தீர்வு காண இந்தக் கட்சியுடன் பேச வேண்டும் என்றே அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள்இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கின்றன. “தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா சம்பந்தன், ‘நான் ஒரு ஸ்ரீலங்கா பிரஜை. நான் இறக்கும்போதும் ஒரு ஸ்ரீலங்கா பிரஜையாகவே இறக்க விரும்புகிறேன்’ என்று என்னிடம் தெரிவித்தார்” என்கிறார் டி.கே.ரங்கராஜன்.
இலங்கை சென்ற இந்திய எம்.பி.க்கள் குழு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் உள்ளிட்ட கிட்டத்தட்ட அனைத்து இலங்கை தமிழ் தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
“யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பிரஜைகள் கூட்டத்திலும், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நடைபெற்ற கூட்டத்திலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கலந்து கொண்டார். அப்போது அவர், தமிழர்கள், சிங்களர்கள் இணைந்து வசிக்கும் ‘ஒன்றுபட்ட இலங்கை’க்குள் அரசியல் தீர்வு ஒன்றுதான் எமக்கு தேவை என வலியுறுத்தினார். தமிழீழம் குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை” என்றும் ரங்கராஜன் எம்.பி. கூறுகிறார்.
“இந்தக் கருத்துக்களை கேட்ட எமது எம்.பி.க்கள் குழுவின் தலைவி சுஷ்மா ஸ்வராஜ், இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷேவை சந்தித்தபோது, இலங்கை தமிழர்களின் விருப்பம் ஈழம் அல்ல, ‘ஒன்றுபட்ட இலங்கையில்’ வசிப்பதுதான் என்று கூறினார்” என்றும் ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வசிக்கும் தமிழர்களின் ‘மனநிலையை அறிந்து’, இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷேவிடம் சொல்லிவிட்டு வருவதற்கு, புதுடில்லியில் இருந்து ஒரு எம்.பி.க்கள் குழு செல்ல வேண்டியிருந்தது ஆச்சர்யம்தான். இலங்கை ஜனாதிபதிக்கு இது ஆனந்த ஆச்சர்யம்!
இப்போது என்ன நடக்கும்?
0 comments :
Post a Comment