தமிழகத்திலுள்ளவர்களுக்கே தனி ஈழம் தேவை! கூறுகிறார் எழுத்தாளர் தமிழ் செல்வன் !!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக் குழுவின் வழிகாட்டலில் செயற்பட்டு வரும் தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் தலைவராக இருக்கும் ச.தமிழ் செல்வன், ஒரு பிரபல எழுத்தாளருமாவார். அவர் தமிழகத்திலிருந்து வெளிவரும் 'ஆனந்த விகடன்' இதழுக்கு வழங்கிய பேட்டியொன்றின் சில முக்கியமான கேள்விகளும் பதில்களும் எமது வாசகர்கள் அறியும் பொருட்டு கீழே தரப்படுகின்றன. அவரது கருத்துக்களை ஏறத்தாழ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடாகக் கொள்ள முடியும்.
கேள்வி: 'ஈழ ஆதரவுப் போராட்டங்கள், முல்லைப் பெரியாறு பிரச்னை, அண்ணா ஹஜாரேயின் ஊழல் எதிர்ப்பு, கூடங்குளம்
அணு உலை எதிர்ப்பு என இது போராட்டங்களின் காலம். ஆனால் 'மகிழ்ச்சி என்பது போராட்டம்' என்ற மார்க்சியத்தைக் கடைப்பிடிக்கும் இடதுசாரிகள் இந்தப் போராட்டங்களில் பங்கெடுக்கவில்லையே?'
பதில்: 'ஈழப் பிரச்சினையைப் பொறுத்தவரை 30 ஆண்டுகளாக மாறாத உறுதியான நிலைப்பாட்டில் இருக்கிறோம். அரசியல் அற்ற, ராணுவப் பாதையில் ஈழ மக்களுக்குத் தீர்வு கிடைக்காது என்பது எங்கள் நிலைப்பாடு. சர்வதேச அரசியல் சூழலைக் கணக்கில் எடுக்காத விடுதலைப் போராட்டக் குழுக்களால்தான் ஈழத்தில் இவ்வளவு பெரிய அழிவு ஏற்பட்டது. தமிழகத்தில் நடைபெற்ற ஈழ ஆதரவுப் போராட்டங்கள் உணர்ச்சிவயப்பட்ட போராட்டங்கள். ஏன் இப்போது போருக்குப் பின் அத்தகைய எழுச்சி இல்லை? 'தனி ஈழம் சாத்தியமில்லை' என்று நாங்கள் மட்டும் சொல்லவில்லை. புலிகளின் ஆதரவாளர்களால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசிய அமைப்பும். ஒன்றுபட்ட இலங்கையில் வட கிழக்கு மாகாணங்களை இணைத்த சுய நிர்ணய உரிமையைத்தான் கேட்கிறது. தமிழகத்தில் உள்ளவர்கள் மட்டும்தான் தனி ஈழம் கேட்கிறார்கள். இது ஈழ மக்களுக்குத் தீங்கு விளைவிக்கும் செயல். இதை விமர்சித்தால், ராஜபக்சேவின் கைக்கூலி, இனத்துரோகி ஆகிய பட்டங்கள் இடதுசாரிகளுக்குக் கிடைக்கின்றன.
அதனால்தான் பல சமயங்களில் எங்கள் கருத்தைப் பதிவு செய்துவிட்டு மௌனம் ஆகிவிடுகிறோம். ஆனால், அதையும் கள்ள மௌனம் என்று குற்றம் சாட்டுகிறார்கள். கூடங்குளம் பிரச்சினையைப் பொறுத்த அளவில், மக்கள் ஏற்காத வரை அணு உலை செயல்படக்கூடாது என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. முல்லைப் பெரியாறு பிரச்சினை அறிவியல்பூர்வமாக அணுகப்பட வேண்டிய பிரச்சினை. அணையை அரசியல் ஆக்குவது, அச்சுதானந்தன் செய்தாலும் தவறுதான். தமிழர்கள், மலையாளிகள் மீதான தாக்குதல்கள் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியவை. ஸ்பெக்ட்ரம் என்ற முழு நீள சினிமாவில் இடைவேளைக்குப் பிறகான காட்சிதான் அண்ணா ஹஜாரேவின் போராட்டம். இதன் இயக்குநர் கார்ப்பரேட் நிறுவனங்கள்தான்.
கார்ப்பரேட் ஊடகங்கள் யாரைத் தூக்கிப்பிடித்தாலும் அதில் சிக்கல் இருக்கிறது என்று அர்த்தம். ஊழலுக்கு எதிரான பேச்சு உருவாகி இருப்பதைத் தாண்டி இதில் ஆறுதலான அம்சங்கள் எதுவும் இல்லை. ஆனால், மேற்கண்ட பிரச்சனைகளை எல்லாம் பேசுபவர்கள் பெண்களுக்காகவோ தலித்துகளுக்காகவோ பேசுவது இல்லை. பொருளாதாரக் கோரிக்கைகளை முன்வைத்தும், தலித் மக்கள், பெண்கள் உரிமைகளை முன்வைத்தும் இடதுசாரிகள்தான் தொடர்ச்சியாகப் போராடி வருகிறார்கள். இடதுசாரிகளின் போராட்டங்களில் இந்தியா முழுவதும் ஆண்டுக்கு 300 தோழர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். நாங்கள் எப்போதும் போராட்டத்தின் புதல்வர்கள்தான்.'
கேள்வி: 'தமிழகத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது தமிழ் உணர்வைக் கணக்கில் எடுக்காததால்தான் இடதுசாரி
இயக்கம் வளரவில்லை' என்ற விமர்சனம் உண்டு அதேபோல் ஈழ ஆதரவு, மூவர் தூக்கு எதிர்ப்பு, முல்லைப் பெரியாறு பிரச்சினை என தமிழ்த் தேசியத்தின் பொற்காலம் இது. இப்போதும் தமிழின உணர்வைக் கணக்கில் எடுக்காமல் இடதுசாரிகள் தவறு செய்கிறார்களா?
பதில்: 'தமிழ்த் தேசிய அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது என்பதுதான் என் கருத்து 'தமிழ்த் தேசிய இனம் இந்திய அரசால் முற்றிலுமாகப்
புறக்கணிக்கப்படுகிறது' என்ற உணர்வு தமிழகத்தில் உருவானால்தான், தமிழ்த் தேசிய அரசியல் எடுபடும். ஆனால், இந்தியாவில் தமிழ்த் தேசிய இனம் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்படவில்லை.'
கேள்வி: 'ஈழத்தில் லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலையையும் தமிழக மீனவர்கள் படுகொலையையும் இந்திய அரசு கண்டு கொள்ளாதது புறக்கணிப்புகள் இல்லையா?'
பதில்: 'அதை 100 சதவிகிதப் புறக்கணிப்பு என்று சொல்ல முடியாது. இந்திய அரசின் வர்க்க நலன் சார்ந்ததுதான் இலங்கைப் பிரச்சினையில் அதன் நிலைப்பாடு. பொருளாதாரரீதியாகத் தமிழினம் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்படவில்லையே? அப்படிப் புறக்கணிக்கப்பட்டால்தான், தமிழ்த் தேசிய அரசியலுக்கான வாய்ப்புகள் உருவாகும்.'
0 comments :
Post a Comment