உதுல் பிரேமரத்னவை தேடி பொலிஸார் வலை வீச்சு
வனாத்தமுல்ல - ரி-20 தோட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற பதற்ற நிலை தொடர்பில் விசாரணை நடத்தவென உதுல் பிரேமரத்னவை தேடி பொலிஸார் வலை வீசியுள்ளனர். உதுல் பிரேமரத்னவை தேடி இன்று 25ம் திகதி அதிகாலை இரு வீடுகள் பொலிஸாரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கான இயக்கம் தெரிவித்துள்ளது.
உதுல் பிரேமரத்னவின் கொட்டாவை வீடு மற்றும் அவர் அடிக்கடி சென்றுவரும் இரத்தினபுரி வீடு என்பவற்றிற்கு இன்று அதிகாலை 2.30 அளவில் பொலிஸார் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வனாத்தமுல்ல - ரி-20 தோட்டத்தில் அண்மையில் பொலிஸார் சோதனை நடத்தி சிலரை கைது செய்ததை அடுத்து பிரதேச மக்கள் சிலர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது.
இந்த ஆர்பாட்டத்தில் பதற்றம் ஏற்படுத்தியமை மக்களை ஒன்றுதிரட்டியமை போன்ற குற்றச்சாட்டுக்கள் உதுல் பிரேமரத்ன மீது சுமத்தப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் அவரது உறவினர்களிடம் விசாரணை நடத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் தான் சட்டவிரோத செயல்களில் ஈடுபடவில்லை எனவும் ஆனால் பொலிஸாரின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க இன்று காலை அளுத்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகவுள்ளதாகவும் உதுல் பிரேமரத்ன கூறியுள்ளதாக மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கான இயக்கம் குறிப்பிட்டுள்ளது.
0 comments :
Post a Comment