Monday, April 23, 2012

பள்ளிவாசல் தொடர்பில் பிரதமரின் அறிக்கைக்கு முஸ்லிம் அரசியல் தலைமைகள் மறுப்பு

தம்புள்ள ஹைரியா பள்ளிவாசலை அகற்றி வேறு இடத்தில் அதை அமைக்குமாறு உத்தரவிட்டுள்ள பிரதமர் டி.எம். ஜயரட்ண, அதற்கு முஸ்லிம் அரசியல் தலைமைகள் இணக்கம் தெரிவித்ததாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளமை பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது.

கம்பளையில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் இஸ்லாமிய சமய தலைவர்கள், சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி, மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா, பிரதியமைச்சர்கள் அப்துல் காதர், ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா ஆகியோரும் கலந்துகொண்டனர் என பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் செயலக ஊடகப்பிரிவு நேற்று வெளியிட்ட அரச முத்திரையுடன் கூடிய அந்த அறிக்கையில் , தம்புள்ள பள்ளிவாசலை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு முஸ்லிம் தலைமைகள் இணங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கம்பளையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை நடந்த கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாகவும், அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

ஆனால் பிரதமரின் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது போன்று எந்த இணக்கப்பாடும் எட்டப்படவில்லை என்றும், தாம் அந்தக் கூட்டத்தில் பங்கேற்கவேயில்லை என்றும் முஸ்லிம் அரசியல்வாதிகள் தெரிவித்துள்ளனர்.

60 ஆண்டுகளாக இருந்துவரும் பள்ளிவாசலை அகற்ற பௌத்த சிங்களப் பேரினவாத சக்திகளின் எடுத்து வரும் முயற்சி, முஸ்லிம் அரசியல் தலைமைகள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமரும், அரசும், பௌத்த பேரினவாத சக்திகளுடன் இணைந்து முஸ்லிம்களின் உரிமைகளைப் பறிப்பதாக அவர்கள் பலரும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

நேற்று முழுநாளும் தான் மட்டக்களப்பில் இருந்ததாகவும், அந்தக் கூட்டத்தில் பங்கேற்கவேயில்லை என்றும் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு கூட்டம் எதுவும் நடக்கவில்லை என்றும் அப்படியான கூட்டத்தில் தானோ மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானாவோ கலந்து கொள்ளவில்லை என்றும் சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசியும் தெரிவித்துள்ளார்.

தம்புள்ளை – ரங்கிரி பள்ளிவாசலை வேறு இடத்திற்கு மாற்றும் திட்டத்திற்கு மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானா எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

தம்புள்ளை பிரச்சினை தொடர்பில் பிரதமர் டி.எம்.ஜயரத்ன தலைமையில் நேற்று (22) கம்பளையில் இடம்பெற்ற கூட்டத்தில் தான் கலந்து கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதனால் முஸ்லிம் பள்ளிவாசலை அகற்றவோ அல்லது வேறு இடத்திற்கு மாற்றவோ தான் ஆதரவு தெரிவிக்கவில்லை என அலவி மௌலானா கூறியுள்ளார்.

இந்த செய்தியானது உலக முஸ்லிம் நாடுகளை ஏமாற்றும் சூழ்ச்சிகர நடவடிக்கை என மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானா இன்று (23) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவாக நின்ற முஸ்லிம் நாடுகள் மத்தியிலும் இந்த விவகாரம் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com