வரவு, செலவு திட்டத்திற்கமைய சமுர்த்தி கொடுப்பனவு 33 சதவீதத்தால் அதிகரிப்பு - பசில்
ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சமுர்த்தி நிவாரண கொடுப்பனவு 33 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டிருப்பதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித் துள்ளார்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.
அத்துடன் இதுவரை காலமும் கூட்டுறவு கடைகள் ஊடாக சமுர்த்தி நிவாரணம் பெறுவோருக்கான பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வந்ததாகவும் ஆனால் இப்புதிய திட்டத்தின் கீழ் ஏப்ரல் முதலாம் திகதி முதல் சமுர்த்தி உதிவி பெறும் குடும்பங்களின் வங்கிக் கணக்கில் இக் கொடுப்பனவு வைப்பிலிடப்படும் என தெரிவித்ததுடன் புதிய சமுர்த்தி நிவாரணக் கொடுப்பனவு திட்டத்தின் கீழ் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 42 ஆயிரத்து 638 குடும்பங்கள் புதிதாக சேர்க்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் 2012 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவு திட்டத்தின் ஊடாக சமுர்த்தி உதவி பெறுபவர்களுக்கான நிவாரண கொடுப்பனவு தொகையை 33 சதவீதத்தால் அதிகரித்துள்ளார்.இதற்கிணங்க நாடு முழுவதும் 15 லட்சத்து 83 ஆயிரத்து 961 குடும்பங்கள் சமுர்த்தி நிவாரணக் கொடுப்பனவை பெறும் எனவும் இப்புதிய திட்டத்தின் கீழ் மாதந்தம் 1233 மில்லியன் ரூபாவை அரசாங்கம் செலவிடவிருக்கின்றது எனவும் தெரிவித்தார்.
இதற்கிணங்க இப்புதிய திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 9936 குடும்பங்களும், கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 11733 குடும்பங்களும், மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 13149 குடும்பங்களும், யாழ். மாவட்டத்திலுள்ள மருதங்கேணி பிரதேச செயலகப் பிரிவில் வாழும் 3808 குடும்பங்களும், திருமலை மாவட்டத்திலுள்ள வெருகல் பிரதேச செயலகப் பிரிவில் வசிக்கும் 2834 குடும்பங்களும், வன்னி மாவட்டத்திலுள்ள வவுனியா வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் வாழும் 1178 குடும்பங்களும் புதிதாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.
இச் செய்தியாளர் மாநாட்டில் தகவல், ஊடகத்துறை பதிலமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, அமைச்சின் செயலாளர் டபிள்யூ. பி. கணேகல, சமுர்த்தி ஆணையாளர் நாயகம் சந்திராவிக்கிரமசிங்க, பேராசிரியர் சுனந்த மத்தும பண்டார உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.
0 comments :
Post a Comment