Tuesday, March 6, 2012

நீர்கொழும்பு நகரில் நகை பறிப்பு சம்பவங்கள் அதிகரிப்பு

மோட்டார் சைக்கிளில் வரும் இனந்தெரியாத நபர்களினால் பெண்களின் நகைகளை பறித்துக் கொண்டு (கொள்ளையிட்டு) செல்லும் சம்பவங்கள் நீர்கொழும்பு நகரில் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகிறது. இரவு வேளைகளில் கோயில் மற்றும் தேவாலயங்களுக்கு செல்லும் பெண்கள் , தொழிலுக்கு சென்று இரவு வேளையில் வீடு திரும்பும் பெண்களின் நகைகளே அடிக்கடி அபகரித்து செல்லப்படுவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர் .

நீர்கொழும்பு கடற்கரைத் தெரு, பழைய சிலாபம் வீதி, நகரின் வர்த்தக பிரிவு மற்றும் ஆள் நடமாட்டம் குறைந்த வீதிகள் மற்றும் ஒழுங்கைகளில் நகைகள் பறித்து செல்லப்படும் சம்பவங்கள் அடிக்கடி இடம்பெறுகின்றன.

கடந்த சனிக்கிழமை (3) இரவு நீர்கொழும்பு நகர மத்தியில் அமைந்துள்ள பாதணி கடைக்கு வந்த பெண்ணொருவரின் நகை மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களினால் கடைக்குள் புகுந்து பறித்து செல்லப்பட்டுள்ளது. கடையின் பாதுகாப்பு ஊழியர் கொள்ளையரை பிடிக்க முயன்ற போது , ஆயுதம் ஒன்றை காட்டி அச்சுறுத்திவிட்டு மோட்டார் சைக்கிளில் அந்த இரு நபர்களும் தப்பிச்சென்றுள்ளனர் .

(நேற்று) திங்கட்கிழமை இரவு 8 மணியளவில் பழைய சிலாபம் வீதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவரினால் பெண்ணொருவரின் நகை பறித்து கொண்டு செல்லப்படுகையில் , அந்த மோட்டார் சைக்கிள் முச்சக்கர வண்டியில் மோதி விபத்துக்குள்ளானதை அடுத்து , அங்கிருந்த பொது மக்கள் சந்தேக நபரை பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர் .

கடந்த வெள்ளிக்கிழமை (27) நீர்கொழும்பு கடற்கரை தெருவில் பகல் வேளையில் தனது மகனை பாலர் பாடசாலையிலிருந்து வீட்டுக்கு அழைத்து சென்று கொண்டிருந்த பெண்ணொருவரின் ஐந்து பவுண் கொண்ட தங்கச்சங்கிலி மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களினால் பறித்து செல்லப்பட்டுள்ளது . இது போன்று பல்வேறு சம்பவங்கள் நகரின் பல இடங்களிலும் அண்மைகாலமாக இடம்பெற்று வருவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com