கல்வி நாட்டில் வாழும் அனைவருக்கும் பொதுவான ஒரு அம்சம் - மத்திய மாகாண முதல் அமைச்சர்
கல்வி என்பது இந்நாட்டில் வாழும் சிங்களம் தமிழ் முஸ்லிம் அனைவருக்கும் பொதுவான ஒரு அம்சம். இதனை எந்தப்பாகுபாடுமின்றி எல்லாயின மக்களும் அடைய வேண்டும். அதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் தங்கு தடையின்றி வழங்கி மத்திய மாகாண கல்வி அமைச்சு சிறந்த சேவையினை ஆற்றி வருகிறது என மத்திய மாகாண முதல் அமைச்சர் சரத் ஏக்கநாயக தெரிவித்தார்.
மத்திய மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி பாரூக்கின் வேண்டுகோளின் பிரகாரம் மத்திய மாகாண கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் அக்குரணை குருகொட மாதரிப் பாடசாலையில் ஒரு கோடி 33 இலட்சம் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள மூன்று மாடி வகுப்பறைக் கட்டடத்திற்கான அடிக்கல் நடும் வைபவம் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.
அந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட மத்திய மாகாண முதல் அமைச்சர் சரத் ஏக்கநாயக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே முதல் அமைச்சர் இவ்வாறு அங்கு குறிப்பிட்டார்.
புதிய கல்வி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஆயிரம் பாடசாலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கண்டி மாவட்டத்தில் 13 முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்திற்காக உள்வாங்கப்பட்டுள்ளன. அந்த வகையில் புதிய மாதரிப் பாடசாலைகள் பல முஸ்லிம் பாடசாலைகள் உருவாக்கப்பட வேண்டியுள்ளன. சமீபத்தில் உருவாக்கப்பட்ட இப் பாடசாலைக்கு இந்த வகுப்பறைக் கட்டிடத்தை வழங்குவதில் பெருமிகிழ்வடைகிறேன் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் மத்திய மாகாண சபை உறுப்பினரும் மத்திய முஸ்லிம் கல்விப் பிரிவின் மேற்பார்வையாளருமான ரிஸ்வி பாரூக் , கட்டுகஸ்தோட்டை கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் ஹியான் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment