Wednesday, March 28, 2012

என்னைப் பற்றிய வதந்திகளை பரப்பி ஊடகங்கள் விற்பனையை அதிகரித்துக் கொள்ளட்டும் - மேர்வின்

என்னைப் பற்றிய வதந்திகளை பரப்புவதன் மூலம் விற்பனையை அதிகரித்துக் கொள்வதற்காக எனது பெயரை ஊடகங்கள் பயன்படுத்த விரும்பினால் அப்படி செய்து கொள்ளட்டும் என அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

பண்டைய மன்னர்கள் காலத்தில் வழங்கப்பட்ட தண்டனைகளுடன் ஒப்பிடும்போது கை, கால்களை உடைப்பது குறைந்த தண்டனையாகும் என்பதை நான் கூற வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமய வழிபாடுகளில் கலந்து கொள்வதற்காக களனி விகாரைக்கு சென்றிருந்த அமைச்சர் மேர்வின் சில்வா அங்கு செய்தியாளர்களை சந்தித்தபோதே இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் அங்கு மேலும் கூறியுள்ளதாவது,

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு எனக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாக கேள்விப்பட்டேன். ஆனால் அது தொடர்பாக எனக்கு முறைப்படி அறிவிக்கப்படவில்லை. ஊடகங்கள் தமது விற்பனையை அதிகரித்துக் கொள்வதற்காக பொய்களை பிரசாரப்படுத்துகின்றன. அவர்கள் மேர்வின் சில்வாவை விற்க முடிந்தால் விற்கட்டும்.

தெற்கை சேர்ந்தவன் என்ற வகையில், நான் இந்த நாட்டிற்கு துரோகம் செய்ய மாட்டேன். கை, கால்களை உடைப்பேன், பண்டைய மன்னர்கள் காலத்தில் வழங்கப்பட்ட தண்டனைகளுடன் ஒப்பிடும்போது கை, கால்களை உடைப்பது குறைந்த தண்டனையாகும். நாட்டை காட்டிக் கொடுக்கும் துரோகிகளுக்கு பண்டைய மன்னர்கள் கருணை காட்டவில்லை.

வெளிநாட்டவர்களின் டொலர்களில் தங்கியுள்ள எந்த நபரும் சிங்கள சமூகத்தை நாசமாக்குவதற்கான ஊத்தை வேலைகளை செய்வதற்கு நான் அனுமதிக்கப் போவதில்லை என்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com