தனி அதிகார அலகுகளை வழங்கவும் மாட்டோம்: காலில் விழவும் மாட்டோம் - கோத்தபாய
யுத்தக் குற்றச்சாட்டுக்களை சுமத்தி இலங்கை அரசாங்கத்தை அடி பணிய வைத்து, வடக்கில் ஈழ அரசாங்கத்தை உருவாக்குவதற்கு வெளி நாட்டு சக்திகள் உடன் இணைந்து செயற்படும் தமிழ் பிரிவினைவாதிகள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஒருபோதும் அடிபணியப் போவதில்லை என்று பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
யுத்தக் குற்றச்சாட்டுக்களை சுமத்தி இலங்கைக்கு வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை அனுப்புவதற்கு பல்வேறு வெளிநாட்டு ஆக்கிரமிப்பு சக்திகள் முயற்சி செய்வதாகவும் பாதுகாப்பு செயலர் குறிப்பிட்டுள்ளதாக லங்கா சி நிவ்ஸ் இணையத்தளம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள சுதந்திரமான நிலைமையை அபகரிக்க எந்தவொரு அதிகார சக்திக்கும் இடமளிக்கப்போவதில்லை எனவும், எவராலும் தோற்கடிக்கப்பட முடியாது என்று கூறப்பட்ட பயங்கரவாத இயக்கமான புலிகள் இயக்கத்தை ஒழித்துக்கட்டி, மிகப்பெரிய எண்ணிக்கையுடைய பணயக் கைதிகளை மீட்டெடுத்து , வடக்கு மக்களை சுதந்திரமாக வாழ்வதற்கு வழியமைத்து கொடுத்த இலங்கை அரசாங்கத்திற்கும் ,இராணுவத்திற்கும் எதிராக செயற்படுவது பயங்கரவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் மீண்டும் உருவாக்க எடுக்கும் முயற்சியாகும் என்று பாதுகாப்பு செயலர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேற்கத்தேய சக்திகளின் பிரிவினைவாத நோக்கத்தை தோற்கடிப்பதாக ஜெனீவா மனித உரிமை பேரவையின் போது ,சீனா , ரஸ்யா இந்தியா உட்பட பல நாடுகள் இலங்கைக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளதாகவும், அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment