Thursday, December 15, 2011

சுட்ட பழம் .. எஸ். நஸீறுதீன்.

ஆனானப்பட்ட தமிழ் கனவான்கள் எல்லோருமே இன்றைக்கும் தொடமுடியா உச்சங்களை அப்போதே தொட்டுவிட்டதாக சொல்லப்படுகிற- கவிச் சக்கரவர்த்திக்கும் மேலாகப் பட்டம் கொள்ளத்தக்க வல்லமையிருந்தும் பஞ்சப்பரதேசியாக, முறுக்கிய மீசையும்,அடங்காத் திமிருமாக வாழ்ந்துவிட்டுப் போன பாரதி, காணி நிலமும், பத்துப் பனிரெண்டு தென்னை மரங்களும் தாவெனப் பராசக்தியிடம் சும்மா வேண்டியிருக்க முடியாது. கிட்டத்தட்டஅவர் கேட்ட அத்தனையும் நிரம்பியதாகத்தான் அந்த மூத்தோர் மடம் இருந்தது. சுற்றிவர மதிலால் இறுக்கமாகக் கட்டப்பட்டு இரும்புக் கம்பியால் ஆன கதவுகள், வாயிலுக்கு முன்னே ஒருகாப்பாளன் என்று இருந்தாலும் பெரும் பரப்புக்காணியது. சுவருக்கு வெளியே நின்று பார்த்தால் மிக அமைதியான இடமாக முகம் காட்டியது. உள்ளே அந்தப் பெரும்பரப்பின் பின்பக்க மதிலைத் தொட்டபடி விடுதிக்கட்டடம் இருந்தது. ஏனையபகுதி எங்கிலும் கடற்கரை மணல்கள், புற்கள் நிரம்பியிருந்தன. கட்டிட வாயிலை விட்டு இறங்கினால், இடுப்பளவில் வளர்ந்து மிகக் கவனமாக வெட்டி நேர்த்தியாக வளர்த்தெடுக்கப்பட்ட இருபுற பூமரங்கள் நடைபாதையைச் சொல்லி நின்றன . அழகினை அள்ளிவீசும் பன்னிறப் பூக்கள், 'கவலைப்படாதே சகோதரா' எனச் சிரித்து நின்றன. மரத்தின் கீழேயே மஞ்சள் படர்ந்த, அவிந்த பூக்கள் ஒருநாள் வாழ்வின் கொடுமையைக் காட்டின.


வளவின் கிழக்கு, மேற்கு இருபுறமும் நிழல் பரப்பத் தெம்பிலி மரங்கள் இருந்தன. அவற்றின் கீழாகச் சாய்வு நாற்காலிகள். மொத்தம் பதினைந்து தென்னை மரங்கள் இருந்தன. கணக்கு மிக முக்கியம். வேறொன்றை அனுபவித்துவிட்டு, வீட்டுக்குப் போய்க் கவி எழுதும் பாரதிக்கு எண்ணிக்கை தெரியாதிருக்கலாம். இங்கு, எத்தனை தென்னைக்கு கிழமைக்கு ஒருமுறையாக மயிரு பிடுங்கினான் எனும் குறிப்பும், சம்பளமும் அவசியப்படுகிறது. முதிர்ந்த இலையோ, காயோ, முதியதின் தலைமேல் வீழ்ந்து விட்டால் அவர்களின் காப்புறுதிப் பணத்தைக் கொடுக்க வழியில்லாமலேயே கடையை மூடவேண்டியதாய்ப் போய்விடும். அத்துடன் எந்தவித வெளி அச்சமுமின்றி சாவதானமாக சாய்மனையில் சரிந்தபடி பெரிசுகளை படிக்க, தூங்க வைக்கும் நேர்த்தியும் முக்கியமானது. அவர்கள் சாய்ந்தபடி கண்கிறங்கிக் காற்று வாங்கலாம். பிடித்து வைத்திருக்கும் ஒரே காற்றையும் வெளிவிடக் காத்தும் இருக்கலாம் . யாரும் தலையிடாத சுதந்திர வாழ்வை வாழ்ந்து பார்க்க மிகச் சிறந்த இடமாகத்தான் அது இருந்தது.

துள்ளும் காலத்தில் ஏக்கமாய் இடைநடுவில் பிரிந்து போன எல்லா விளையாடுக்களையும் அள்ளிக் கொடுத்திருந்தார்கள். கரம், கார்ட்ஸ், மேசைப்பந்து ,பில்லியர்ட்ஸ்,,,நூலகம், கேட்பதைக் காலடிக்குக் கொண்டுவரும் பணியாளர்கள். அது மட்டுமா, ‘இதுவரை ஆசைகொண்டு,அலைந்து ஆடிய ஆட்டம்தான் என்ன? போதும்! போதும்! ஆறு,ஏழாம் அறிவெல்லாம் தருகிறோம்’ என்று யோகாசனம், தியானம், அடடடா,,,ஆசைப்பட்ட அனைத்தையும் தந்துவிடுவார்கள் போல்தானிருந்தது. ஆனால், அதற்குரிய இளமைதான் அங்கு காணாமல் போயிருந்தது. ஹுசைனுக்கு, அவர்கள் வாலிபத்தை மட்டும்தான் விட்டவர்களா எனும் நினைப்பும் மனதில் எழாமலில்லை.

ஹுசைன், பிற்பகல் ஐந்து மணிக்கு முன்னரேயே அவ்விடம் வந்து சேர்ந்திருந்தான். அவனது நெருங்கிய நண்பன் அருணின் தந்தைக்காக காத்துக் கொண்டிருந்தான். ஹுசைனும் அருணும் பால்ய காலத்திலிருந்து நண்பர்கள். அது எப்படிப்பட்ட நட்பென்று இந்தக்காலத்தில் வாழ்கிற உங்களால் கற்பனை கூடப் பண்ண முடியாது. ஹுசைனின் ஊர் சாய்ந்தமருது. அருண் காரைதீவு. ஆமாம், அடுத்தடுத்த ஊர்தான். 'ஏன்ரா இப்படி இருக்கு' எனக்கேட்டால், அருண் முக்குவக் காலத்துக் கதை சொல்லி விளக்கி வைப்பான் . சிலவேளை இருக்கலாம். யார் கண்டது?. நாளைய பிள்ளைகளிடம், 'மொத்த வட கிழக்கையும் , பாதாள இருட்டறையுள் இருந்தபடி, எம்பிக்களைக் காலடியில் விழவைத்து ஒரு ராஜா அரசாண்டான்' எனச் சொன்னால் நம்பவா போகிறார்கள் . அது போல்தானிருந்தது அது .

சாய்ந்தமருது, ரொம்பவும் கட்டுப்பெட்டித்தனமான ஊர். கூட்டுக் குடும்பத்தைத் தெரியும் நமக்கு. கூட்டு ஊரொன்றைக் கற்பனை பண்ண முடிகிறதா உங்களால்? அப்படித்தானிருந்தது மருது. இறுக்கமென்றால், அப்படி ஒரு இறுக்கம். பிரதான வீதியில், ஊருக்கே சேர்த்து நாலேநாலு தேத்தண்ணிக் கடைதான் இருந்தது . பொடியனுகள், கலட்டியனுகள் கூடிப் பேசிப் பொழுது போக்குவதே அரிது. அப்படித் தெரிந்தாலே ' அவனா, ஊர் மேயுற கழுதல்லியா அது .அதுக்கா ஒம் பொண்ணக் குடுக்கப் போறாய்?' எனக் கல்யாணச் சந்தையில் விலையைச் சரித்துப் போடுவார்கள். கடும் கூட்டுத்தான் அது. ஹுசைனுக்குக் காண்கிற பெரிசுகளெல்லாம், கூட்டிக்கொடுக்கிற 'மாமா'க்களாகவும், பாதுகாவலர்களாகவுமே இளம் பராயத்தில் இருந்தார்கள். ஹோட்டல்கார மாமாக்கள் மட்டுமே விதி விலக்கு. நன்றிக்குரியவர்கள் . இல்லாவிட்டால், கடையின் பின்னே மறைப்பாகக் கதிரையிட்டு, எவ்வளவு பேரின் இரகசியங்களைத் தெரிந்தும் அடைகாத்தே இன்னும் உதவுகிறார்கள் தெரியுமா? விடலைகளின் ஆசைக்குத்தான் எல்லை ஏது? புகை கிளம்ப, அதிரடிச் சிரிப்பாய்ப் பொழுது போகும் . காதல்கள் ஒப்பேற்றப்படும். நக்கல், நையாண்டி,உதவி, முறைப்பு,,, ஹுசைனுக்கு அழிக்கவொண்ணாக் காலம் அது . அந்த வயதில்தான் ஹுசைனுக்கு அருண் தோழனாக வந்து வாய்த்தான்.

ஒரு இந்து முஸ்லி'மோடையா'? எழுத்துக்கு, மேடை அலங்க்காரத்துக்குச் சரிவரலாம் என்பீர்கள்?. பாவம் இந்தக் காலத்துப் பசங்க. வாசிப்பு அள்ள அள்ளக் குறையாத சுவையான ஒன்று: அதை -மனது, தலை ஆகிய இரெண்டுக்கும் ( அப்ப கண்ணு) சுவைதருகின்றதனாலாய 'வித்துவச் செருக்கு' தென்பட்டுப் போவதைக்கண்டு, அவர்களின் நகைச்சுவையாய்த் தள்ளிவிடல், ஆம், யாருக்கும்,இன்னும் தெளிந்த, கீறலில்லாத வானம் எட்டும் தூரத்திலில்லை. தூறல் கலைந்து போம்.அதை ஹுசைனுக்கு அருண்தான் சொல்லிக் கொடுத்தான். அது யார் சொன்னது? புத்தகம் மிகச் சிறந்த நண்பனென்று. எப்படி எப்படியெல்லாம் களவாடித் தூக்கத்தையே கெடுத்தார்கள்.கசகரணம் கெட்டதுகள் . இந்த மனுவுக்காகவே படைத்த உலகை- மனித தேட்டம், மனித பாடு, இரெண்டிலுமே அவன் நிறைவின்றி, பாரா முகமாகி அல்லல்பட்டோடுவதை வாழ்வாகப் போற்றிக்கொண்டாடும் அவலத்தைப் படம் காட்டினார்கள். 'ம்!. எப்பிடிடா?' என ஹுசைன் கேட்டபோது அவன் தந்தையைக் கை காட்டினான். உண்மைதான்,அவர் வீட்டில் பெரிய வசதியில்லாதபோதும் நூலகம் வைத்திருந்தார் . தேர்தல் காலங்களில் தோழர்களுடன் சேர்ந்துகொண்டு அணியும் சிவப்புச் சட்டை வைத்திருந்தார்.

மாலை முழுதும் விளையாட்டு. கிராமப் புறங்களில் அப்போதெல்லாம் உதைபந்து வெகுபிரபல்யம். கிரிக்கெட்டு? அதுவும் இருந்தது ஆனால்.,மென்பந்து. ஏழெட்டுப் பணக்காரப் பசங்க உச்சி வெயில்லவந்து தூயவெள்ளையில ( விளையாடவாம்) உடுப்பும் தொப்பியும் போட்டு, மொத்த மைதானத்திலையும் துளியூண்டு இடத்தை ஒம்பது பேர் சூழ்ந்திருந்து, திடமாம் ( கொன்பிடன்சு( , ஒருத்தன் பந்தோட ஒருபக்கம்ஓடிவருவான் . அவனுக்கு நேரெதிரே நீல்ஆம்ஸ்ட்ராங் தட்டியோட. எல்லாருடைய பார்வையும் பந்துல. ஒழிஞ்சதுவா, இடுப்புல கைகட்டி நகம் கடிக்கலாம். குடிக்கையும் தருவாங்க. புகைப்படமும், கொள்வனவும் கொள்வாங்க. அடப் போங்கடா? உதைபந்து ஆடியிருக்கிறீர்களா? அருணைப் பார்க்கவேண்டும் நீங்கள். ‘ அருண் அருண்’ என மொத்த மைதானமும் இச்சுக் கொட்டி நிற்கும். அந்த விளையாட்டின் அனைத்து பொழுதிலும் அவர்களிடையேயுள்ள கூட்டையும், எல்லோருடைய, ஆம், பந்துக் காப்பாளன் உட்பட, காலின் கீழ் சக்கரம் கட்டிவிட்டதுபோல குந்தவே நேரமில்லை என்பதை வாழ்ந்து காட்டுவோர். சாய்ந்துகொண்டு ரசிக்கவும் முடியாத கிளரிகள் அவர்கள்.

ஹுசையினும் அருணும் கட்டாக்காலிகள் மாதிரித்தான் தெரிந்தார்கள். கடலும், காலையும் ( வயல் நடுவேயுள்ள தென்னஞ்சோலை(, ஊர் சுற்றலுமாக ஊர் மேய்ந்து திரிந்தார்கள். இதுக்கெல்லாம் காசு? ' எவன்டா அது, எம்மகனக் கேட்டது?’ எனக் கேட்டபடி வாப்பாமார் ஹிட்லர் மீசையை முறுக்கிக்கொண்டு வந்துவிடுவார்கள். ‘கவுரவம் என்னா ஆவுறது? தம்பி மனசொடிஞ்சி போயிடும்ல'. ஆனாலும் அந்த வயதில் ஒரு பிரேக்கைப் போடவைப்பதுவும் வீடுதான் . எவ்வளவு தூரம்தான் அவர்களாலும் கூடவரமுடியும்? அப்போதும் ஹுசைனுக்கு அருண்தான் நிமிர்ந்துநிற்கக் கோல் நீட்டினான்.


' ஹுசைன், போதும்ண்டா, ஏற்பது இகழ்ச்சியும்தான். இதப் படிச்சிப் பாஸ் பண்ணிட்டா,உட்ருவாங்க்கடா. இதைவிடக் கொஞ்சம் பெரிசாவும் வாழ்ந்து பார்க்கலாம்.'

' ம்,,ம்,, பார்க்கலாம். பார்க்கலாம்.' கடைசியில், முக்கி, இன்னொருமுறை முக்கிப் பார்த்தபின்தான் ஹுசைனால் வளாகம் போக முடிந்தது. 'நிம்மதியாக் குந்துறண்டா, ஆம்புளக்கழகு கோழிமேய்க்கிறன்டாலும் கொரானமெண்டுல மேய்க்கனும்’ண்டு மூத்தோர் சொல்லல்லியா? கடைசியா அதுவும் ஆச்சா? படிப்பு போய் தொழிலும் விளையாட்டுமா மாறிப் போச்சுக் காலம். அப்பத்தான், இரும்பு யாவாரிங்க வட கிழக்கில முளைவிடுகிற காலம் வந்து சேர்ந்தது . அங்கு இருந்த மக்களுக்கு சாவு பரிச்சயமானது போலவே பலருக்கு , அதுவும் காசு இருந்தால் லொத்தர் நிச்சயமாக விழுகிற வாய்ப்புள்ள நேரமது . அருண்தான் முதலில் அறா விலைக்குக் காணி ஒன்றை விற்றுவிட்டு ரிக்கட் எடுத்து புலம் பெயர்ந்தான். தொழில்? பத்துவருட பென்ஷன் திட்டத்தில், இன்னமும் பென்சன் வந்துகொண்டிருக்கிறது. அட்ரா, சக்கண்டானாம். யாருக்கு வாய்க்கும்? வாழ்க்கை சீமையில. வாய்க்கரிசி ஊரினிலே. அது எதுக்கு?, மெத்தப்படிப்புக்குப் பிறகு எல்லாரும் பண்றது தானே.

அருணுக்கு வந்த புதிதில் நேரம் போவதே தெரியவில்லை. சட்டென்று பொழுதுகள் குறைந்துபோன மாதிரி இருந்தது . உடலையும், மனதையும் தளர்த்தி வைத்துக் கண் தூங்கிய நினைவே இல்லை. இரண்டு வேலைசெய்தான். ஒரு நாளின் மூன்றில் இரண்டு பங்கு நேரம்.உடல் கெஞ்சும். மீதியுள்தான் தன்னைப் பார்த்துக் கொள்வதுவும், ஹுசைனுடன் பேச்சும், ஊர் விசாரிப்பும். அருண் இடைக்கிடையே அவனின் தாய் தந்தையரைப் போய்ப் பார்க்கும்படி சொல்வான். ஹுசைனுக்கு அதைச் செய்வதில் சந்தோசமே இருந்தது. ஹுசைன்,அருணின் அப்பாவை, 'ஐயா' என்றுதான் அழைப்பான். அவருக்கு எல்லாவற்றிலும் அரைகுறை விளக்கம் தெரியவில்லை . ஆனால், தனக்குத் தெரிந்ததில் ஆழமான அறிவுடையவராயிருந்தார். தேர்தல் காலங்களில் அணிவதற்கென்றே சிவப்புச் சட்டையும் வைத்திரிக்கிறார். அதனால்தான் தன்னுடைய ஏக தவபுதல்வனை இத்தனை மைல்களுக்கப்பால் அனுப்பி விட்ட பின்னரும் நிறைவாக, திடமாக இருக்கிறார் போலிருக்கிறது. ஹுசைனைக் கண்டவுடனேயே,

' என்ன? போய்ப் பார்க்கச் சொன்னாரோ? ஒருகுறையுமில்ல, அவரையும்,
மனசுல அதஇதப் போட்டுக் குழப்பாம சந்தோசமா இருக்கச் சொல்லுங்க' .

அருண், என்ன தவம் செய்தனை? அருணிடம் இதைச்சொல்லும்போது,
' பளையாக்கள் இல்லியா, ரோசக்காறாக்கள்' என்றான். மேற்கின் ஆசையை ஹுசைனுக்கு ஊட்டினான்

' வந்துவிடு நண்பா ஊருக்குபதேசம் உனக்கில்லடி மகளே எனும் உண்மை வாழ்வின் நிஜத்தைத் தரிசிக்கலாம் வந்துவிடு..'

'இங்கு வந்துபார் மகனே, இன்னொரு ரம்மியமான உலகம் இது'
ஹுசைனுக்கு, சும்மா கிடந்த சங்கை, ஊதிக்கெடுத்த மாதிரித்தான் ஆகிப்போயிற்று. அருண் முன்னரேயே சொல்லவில்லை. மேற்கின்புறம் பாம்பு புற்றுள் நுழைவதுபோல்தான் அனைவரும் ஆகப் போகிறோம் என்று . ஆமாம், தனித் தனிப் புற்றுகள். கடைசிப் பாலையும் கொள்ளாது விடேன் என்பதுபோல, பணத்துக்காகவே எந்த எட்டு வைப்புமாச்சு.

அருண் திடீரென்று இலங்கைக்கு வந்திருந்தான். அவனது தாயார் மரணப் படுக்கையிலிருந்தார். அவனின் தந்தை திண்ணைக்கும் முற்றத்துக்குமாக ஆறு மாதங்கள் வீட்டிலும், வைத்தியசாலையிலும் சிகரெட்டும் கையுமாக அலைந்துவிட்டு இப்போது வீட்டில் மட்டும் அலைந்து கொண்டிருந்தார். அவரின் மனைவியினுடைய ஆவியைத்தான் அடக்கிவைக்க முடியவில்லை. அருண் அனைத்துக் காரியங்களையும் முடித்து விட்டு, வந்ததுபோலவே இந்தியா வந்து, பின்னர் ஐரோப்பா வந்திறங்கினான்.

காலம் நகர்ந்தது. அருணின்அப்பா வந்திறங்கினார் . அருண் கல்யாணம் செய்து கொண்டான். ஹுசைனும்தான். இன்பமில்லாப் பொழுதெல்லாம் வஞ்சம் தீர்ப்பதற்காய் கொண்டாடாத நாளெல்லாம் விழாவாக்கினார்கள். ஓடும்நதி, கடலலை எதுவுமே தீராதது போல தீராக் காதலும், காமமும்,ஆசையும் அடங்காது நாட்களை உண்டு கொண்டேயிருந்தது.

அருணின் அப்பாவுக்கு முதலில் கண்ணைக்கட்டிக் காட்டில் விட்டதுபோல்தானிருந்தது. அலாரம் வைத்து அதிகாலையே வீடு பத்திக்கெழும்பும். ஒன்பதுக்கு வீட்டில் தனித்துப் போவார். பாடின வாயும், ஆடின காலும் மட்டுமல்ல: பெண்ணுக்கு மட்டுமேயானதல்ல அந்த சொல்வடை., பேசித்திரிந்த வாயும், ஓடித் திரிந்த காலும் கொண்ட ஆணுக்கும் அடங்கித் தவித்தல் மெல்லக்கொல்லும் தற்கொலை மாதிரியானது. அருணின் அப்பாவுக்கு தொலைக்காட்சி அலுத்துப் போனது. ஒரு மைல் தூரத்துக்குள் வீட்டைச் சுத்தியிருந்த தெருக்களும் சந்திகளும் வாசிகசாலையும் போதவில்லை. குட்டிபோட்ட பூனை மாதிரி அலைந்து திரிந்தார். அவரவர் தேவைக்கேற்பத்தான் அவரவர் அசைவுகள் தீர்மானிக்கப்படுகின்றன. இன்னொருத்தர் தனக்கு எது முதன்மையான தேவைக்குரியது என்பதைத் திணிக்கவொண்ணா சுதந்திரக் காலம். அருணின் அப்பா, தான் ஊர்போய் வாழப் போவதாக அடம்பிடிக்கத் துவங்கினார். அவர் தன மருமகளை ஒருபோதும் குற்றம் கண்டதில்லை. என்னதான் ரி.வி பார்த்தாலும், புத்தகங்கள் படித்து, வேலை, சமையல்,புருஷன், பிள்ளை,அதன் படிப்புகள்,,,,,அதற்குள்ளாய்க் குடும்பவிழாக்கள், சில கூட்டங்கள் என்று மிசினாய்த் திரிந்தாலும்,காலை கணவனுக்கு முன்னர் எழுந்து மகனின் காலைத் தொட்டுக் கும்பிட்டு விட்டுத்தான் தனது நாளை ஆரம்பிக்கிறாள். வீட்டுக்கே ஒருமங்களகரத்தையும், இயங்குதலையும் சந்தோசங்களையும், சிறு பிரச்சினைகளையும் தந்து உயிர்ப்பிப்பவள். துயரம் மனிதன் சுமக்கலாம். ஒரு வீடே சுமப்பதை முதலில் சகிக்கவொண்ணாத் தாய்மை நிரம்பியவள்தான். அவளின் உதடுகள் யாரையும் கடிந்து பேசிக்கண்டதில்லை. அவருக்கு நேர்த்தியாக எந்தவிதத் தடங்கலும் வராதபடி எல்லாமே பார்த்துக் கொண்டாள்அவருக்குத் தான் பார்த்துக். கட்டிவைத்த மருமகளில் மன நிறைவுதான் . எதிலும் முதலில் நீளுகிற கை அவளுடயதாகத்தான் இருந்தது அவள் இதில்கூட, 'இது தந்தை மகனுக்குரியதாகிறது' எனச் சொல்லிவிட்டு ஓரமாகி விட்டாள். நல்ல எறிகை அது. இப்போது பந்து அருணின் பக்கம். அவன் தந்தையினசுதந்திரத்தை, அதன் விலையை அறிந்தவன். காரைதீவிலுள்ள வீட்டில் அவரைத் தனியே விடத் தயங்கினான். அருணுக்கு, அவரின் ஒரேபிள்ளை இப்படியாயிற்றே என ஊர்பேசுமே எனப் பயந்தான். அருண் மீளவும் இலங்கைக்குத் தனியேபோய் இந்த முதியோர் காப்பகத்தைத் தெரிவுசெய்து பதிந்துவிட்டு வந்திருந்தான். இப்போது ஹுசைன் அவரைக் கூட்டிக்கொண்டு கொழும்பு வந்து சேர்ந்திருந்தான்.. இரவு வெள்ளவத்தையிலுள்ள அருணின் சகோதரியினுடைய வீட்டில் அவர் தங்கப் போயிருந்தார் . மாலை மங்கத் துவங்கிற்று. இருள் அனைத்துப் புறமும் கவியத் துவங்கியிருந்தது . தூரத்தே அவரின் மகள் காரோட்டிவர, அருகே அவரிருக்கக் கண்டான். ஒரு கறுப்புநிறப் பெட்டி ஒருகையில்,மறுகையில் அதேநிறக்குடையுமாகக் காரைவிட்டு அவர் இறங்கினார். மகள் அவரிடமும், ஹுசைனிடமும் விடை பெற்றுச் செல்ல இருவரும் உள்ளானார்கள்.

விருந்தினர் அறைக்கு வந்ததுமே ஹுசைனுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. அருணுக்கும் அவனுக்கும் தோஸ்துவாகிய ஹோட்டல் நானாவை அங்கு கண்டதுதான். நானாவும் அவனை அடையாளம் கண்டு கொண்டார். வெள்ளை நிற பனியனும் சாரனும் கட்டியிருந்தவருக்கு, இப்போது பச்சை நிற யூனிபோர்ம் மாட்டியிருக்கிறார்கள். ஹுசைனுக்கு, நானாவும் ஐயாமேல், மேல் கரிசனை கொள்வார் என்பதை அருணுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என நினைத்துக் கொண்டான் . சிலரைச் சந்திப்பதனால்,, அவர் தவிர்ந்த காலங்களே தவிர வேறேதும் மனதில் இல்லாது போய்விடுவது எத்தனை உண்மையானது என்பதை ஹுசைன் அனுபவித்தான். அருணின் அப்பாவுக்கு அவரை அறிமுகம் செய்ய வேண்டிய தேவை இருக்கவில்லை. ஏற்கெனவே அறிந்திருந்தார்கள். ஒருத்தருடன் நெருங்கிப் பேசிப்பழக ஒத்தவயது உறுதுணையாகவே இருக்கிறது. அவர்கள் இருவரும் நெருக்கமாகிவிட்டார்கள் . நானா அருணைப் பற்றிப் புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தார். ஹுசைனும் அருணும் கெட்டிக்காரர்கள் என அப்போதே தெரியுமாம் என்று அப்போதேதான் மதிப்பிட்டது சரியானதாகியதைக் கிலாகித்துக் கொண்டிருந்தார். அன்றைய கால நட்பு இன்றைக்கும் தொடர்வதில் ஆச்சரியமேயில்லை எனச் சொல்லிக் கொண்டிருந்தார். அருண் இங்கு ஏற்கனவே வந்துபோனது தெரியாமல் போய் விட்டதில் கவலைப்பட்டார் . நானாவின் பேச்சில், ‘அருண் எப்படி இவரைத் தனியே விடலாம்’ என்ற ஆதங்கம் தெரிவதைக் கண்டான். ஹுசைன்,அவர் அங்குள்ள வாழ்க்கையின்மீது சலிப்புற்று வந்துள்ளார் என எடுத்துச் சொன்னான்.. இந்தக் காலத்தில் வந்து சேர்ந்திருக்கும் அறிவை வைத்துக் கொண்டு பழைய காலத்தில் வாழ்ந்த வாழ்வின் சரிகுறைகளை அசைபோடுவதைக் கேட்டுக்கொண்டிருக்க அசாத்திய பொறுமை வேண்டும். ஹுசைன் அங்கிருந்த மேசையில் பரவிக்கிடந்த சஞ்சிகையைப் பார்வையிடத் துவங்கினான். எந்த மதமென்றில்லாது அனைத்தும் கலந்த கலவையாயிருந்தது மேசை.

'உன் மதம் உன்னோடு, என்மதம் என்னோடு'. ஐக்கிய இலங்கையை சிறுபராய பாடசாலைகளிலும், வயது முதிர்ந்த மடாலயங்களிளும்தான் பார்க்கலாமோ என நினைத்தான். ஹுசைனுக்கு எதிலும் வெறி ஏற்றிக்கொள்ள உடல் தினாவெட்டும், அறிவு கூடிய நினைப்பும் அவசியம் என்றுபட்டது. வாழ்க்கையே ஒரு சக்கரம். அறிவற்ற குழந்தையாய்ப் பிறப்பித்து, அறிவுள்ள குழந்தையாய் இறப்பு . அதுவும் அறிவுகள் பறந்துவிடும் நாளில்தான் கண்ணும் காதும் திறபடுமென்றால்,,, ஹுசைன் புத்தகத்தை மூடிவைத்து விட்டான். நானா திடீரென்று அவரைப் போலவே, பச்சை நிற உடையணிந்தபடி சென்று கொண்டிருந்த ஒரு மாதுவைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டார்.

' பவுண்! பவுண்!' அவள், இவர்புறம் திரும்பினாள்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com