Monday, December 19, 2011

ஐ.தே.க தலைவர் போட்டியில் ரணில் வெற்றி! சிறிக்கொத்த வட்டாரத்தில் பதட்டம்! (2ம் இணைப்பு)

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பதவி உட்பட பல்வேறு பதவிகளுக்கு இன்று கட்சியின் தலைமைக்காரியாலயமான சிறிக்கொத்தவில் தேர்தல் இடம்பெற்றது. இத்தேர்தலில் தலைமைப் பதவிக்காக ரணில் விக்கிரமசிங்கவும், கரு ஜெயசூரியவும் போட்டியிட்டனர். பல தேர்தல்களில் ரணில் விக்ரமசிங்க தோல்வியடைந்துள்ளபோதும் , கட்சி தலைமைத்துவ தேர்வில் 72 வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியுள்ளார் இவரை எதிர்த்து போட்டியிட்ட கரு ஜெயசூரிய 24 வாக்குகளை பெற்றுள்ளார்.

இதேநேரரம் பிரதித் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சஜித் பிரேமதாஸ 52 வாக்குகளையும் ரவி கருணாநாயக்க 44 வாக்குகளையும் பெற்றுள்ளதுடன் ஐதேக தேசிய அமைப்பாளர் பதவிக்கு போட்டியிட்ட தயா கமகே 56 வாக்குகளையும் தயாசிறி ஜயசேகர 40 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

தேர்தலைத் தொடர்ந்து சிறிக்கொத்த வட்டாரத்தில் பதட்டதம் நிலவுவதாகவும் சிறிக்கொத்தவிற்கான வீதி மூடப்பட்டுள்ளதாகவும் அறியக்கிடைக்கின்றது.

பிற்பகல் 01.30 க்கு வாக்கெடுப்பு ஆரம்பமாகியது. புதிய உத்தியோகத்தர்களை தேர்ந்தெடுப்பதற்காக இடம்பெற்ற வாக்கெடுப்பில், செயற்குழுவில் உள்ள 96 பேர், வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். ஐக்கிய தேசியக் கட்சி வரலாற்றில் இரு தரப்பினர் போட்டியிட்டு, வாக்கெடுப்பின் மூலம் தலைவர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது சந்தர்பம் இதுவென, அக்கட்சியின் வரலாறு சான்று பகர்கின்றது.

தலைமைத்துவத்திற்கு மேலதிகமாக, பிரதி தலைவர், தேசிய அமைப்பாளர் பதவிகளுக்கும் வாக்கெடுப்பு இடம்பெற்றது. அந்த பதவிகளுக்கு ரணில் விக்ரமசிங்க அணி மறறும் கரு அணியின் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

பிரதி தலைவர் பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தேசிய அமைப்பாளர் பதவி கிழக்கு மாகாண எதிர்க்கட்சி தலைவர் தயா கமகேயிற்கு கிடைத்துள்ளது, கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இன்று காலை முதல் முறுகல் நிலை காணப்பட்டது.

ரணில் அணி மற்றும் கரு அணியின் ஆதரவாளர்கள், கட்சி தலைமையகத்திற்கு முன்னால் உள்ள வீதிகளில் ஒன்று திரண்டு, கோசங்களை எழுப்பியதை அவதானிக்க முடிந்தது. சிறிகொத்தவுக்கு முன்னால் பலத்த பொலிஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

1946 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 6 ஆம் திகதி அமரர் டி.எஸ் சேனாநாயக்க தலைமையில் ஆரம்ம்பிக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியில் தலைமைத்துவத்திற்கு போட்டி இடம்பெற்று, வாக்கெடுப்பு நடைபெற்ற முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். வாக்கெடுப்பை தொடர்ந்து, ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் இரு கூறுகளாக பிளவடைவது, திண்ணமென, கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள், எமது நிலையத்திற்கு தெரிவித்தனர்.

1949 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதி கொழும்பில் பிறந்த ரணில் விக்ரமசிங்க, கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வியை தொடர்ந்து, சட்டத்துறையில் இணைந்து, அரசியலில் பிரவேசித்தார். 1970 ஆம் ஆண்டு காலப்பகுதியில் களனி தொகுதி ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளராக அவர் பதவி வகித்து, தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தார். அவர் 1977 ஆம் ஆண்டு பொது தேர்தலில் போட்டியிட்டு, முதல் முறையாக
பியகம தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் வெற்றியீட்டினார்.

1977 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் அரசாங்கத்தின் பிரதி வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க, பின்னர் அதே அரசாங்கத்தின் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டார். அப்போதைய அமைச்சரவையின் இளம் அமைச்சராகவும் அவர் இருந்தார்.

பின்னர் 1993-94 காலப்பகுதியில் பிரதமர் பதவியை வகித்த ரணில் வி;க்ரமசிங்க, இலங்கை அரசியல் வரலாற்றில் கடும் விமர்சனத்திற்கு உட்பட்ட எல்ரிரிஈ உடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார். இதனால், அவர் பல துறைகளிலிருந்தும் விமர்சிக்கப்பட்டார்.

1994 ஆம் ஆண்டு பொது தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சி 17 ஆண்டுகளுக்கு பின்னர் தோல்வியடைந்தது. பின்னர் 2001 ஆம் ஆண்டு பொதுஜன ஐக்கிய முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டதன் பின்னர், இடம்பெற்ற தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சி வெற்றியீட்டியதை தொடர்ந்து, ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக பதவியேற்றார்.

2004 ஆம் ஆண்டு பொது தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தோல்வியை தொடர்ந்து, ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சி தலைவராகவும், கட்சி தலைவராகவும், பணியாற்றி வருகின்றார். இலங்கை அரசியல் வரலாற்றில் கூடுதலான காலம் எதிர்க்கட்சி தலைவர் பதவியை வகித்ததன் மூலம், பல்வேறு தேர்தல்களுக்கு முகங்கொடுத்த கட்சி தலைவராக மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்திற்கு, ரணில் விக்ரமசிங்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com