Friday, December 23, 2011

காணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் அரசும் கூட்டமைப்பும் இரு நிலைப்பாடுகளில்?

பொலிஸ், காணி அதிகாரங்களைக் கோரி காலத்தை விரயமாக்கக்கூடாது எனவும் உத்தேச நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் மூலம் பேச்சுவார்த்தை நடத்துமாறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் அரசாங்கம் கோரியுள்ளது என்று நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இதேவேளை, காணி, பொலிஸ் அதிகாரங்களை பகிர்வதற்கு அரசாங்கம் மறுக்கும் நிலையில் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையைத் தொடர்வதா? இல்லையா? என்பது குறித்து தாங்கள் தீர்மானிக்கவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பாக கூறிய அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல் தெரிவிக்கையில்,

தமிழ் தேசியக் கூட்டமைப்பு மிகவும் எதிர்மறையான நிலைப்பாட்டில் உள்ளததாகவும் அரசாங்கம் கலந்துரையாடத் தயாரில்லாத விடயங்களில் அதிகார பரவலாக்கத்தை வலியுறுத்தி நிற்பதாகவும் தெரிவித்தார்.

திம்புப் பேச்சுவார்த்தை மேசையிலிருந்து எல்.ரி.ரி.ஈ. வெளியேறியபோது அவ்வியக்கம் கையாண்டதைப் போன்ற உபாயத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கையாள்கிறது எனவும் அவர் கூறினார்.

அரசாங்கம் 31 பேர் கொண்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நியமிக்கும். இதற்காக 19 பேரின் பெயர்களையும் அறிவித்துள்ளது. ஆனால் த.தே.கூட்டமைப்பு தனது அங்கத்தவர்களின் பெயர்களை இதுவரை அறிவிக்கவில்லை. அரசாங்கத்துடன் த.தே.கூட்டமைப்பு அவர்களின் அபிலாஷைகள் தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.என்று குறிப்பிட்டார்.

கடந்த புதன்கிழமை நாடாளுமன்றத்தில் வரவுசெலவுத்திட்ட விவாதத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வருமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்தமை தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கருத்து தெரிவிக்கையில்,

அரசாங்கம் விட்டுக்கொடுக்காத நிலைப்பாட்டில் இருப்பதாக தோன்றும்போது, மேற்படி அழைப்பின் நோக்கம் தமது கட்சிக்கு புரியவில்லை. தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக அமைக்கப்படவுள்ள எந்வொரு அலகிற்கும் காணி, பொலிஸ் அதிகாரங்களை பகிர்வதற்கு அரசாங்கம் மறுப்பு தெரிவிப்பது குறித்து த.தே.கூட்டமைப்பு ஏமாற்றமடைந்துள்ளது என்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com