Friday, December 16, 2011

பிரபாகரன்:ஓர் அவலத்தின் அடையாளம். யோகா-ராஜன்

„ஒரு தியாகி துரோகி ஆவதற்கும், ஒரு துரோகி தியாகி ஆவதற்குமான இடைவெளி, சீன மதிற்சுவர் போன்று பாரியதல்ல“

எமது கட்டுரைகள் இன்றைய தமிழ் அரசியல் நீரோட்டத்துடன் (Trend) ) கலப்பதாக இல்லை என்றும், அதே சமயம் மக்களை ஈர்த்துக்கொள்ளும் வகையில் மென்மையாகவும் அமையவில்லை என்றும் பல நண்பர்களும், உறவுகளும் நேரடியாகவும், பின்னோட்டங்கள் வழியாகவும் தமது கருத்துக்களை முன்வைத்துள்ளனர். அவர்களுக்கு எமது நன்றிகள்.

எம்மைப் பொறுத்தவரை, ஈழத் தமிழர்கள் மத்தியில், ஈ வே ரா பெரியாரை மீண்டும் பிறபிக்கவேண்டிய, மீளுயிர்ப்புச் செய்யவேண்டிய காலமிது. தமிழர் சிந்தனை முறைமையில் ஓர் சம்மட்டி அடியைக் கொடுத்தவர் பெரியார். இச் சம்மட்டி அடி முறைமைதான் தமிழ் சமூகத்தை விழிக்கவைத்தது! நிலப்பிரபுக்கள் காலத்துக்கும் அதற்கு முந்தையதுமான தமிழர் அல்லது திராவிடர் கலாச்சாரச் சித்தாந்தங்ளை மிகுந்த துணிச்சலுடன் கேள்விக்கு உட்படுத்தினார், விவாதங்களை முன்னெடுப்பதற்கான நெம்புகோல்களை உருவாக்கினார் ஈவேரா பெரியார். அப்போது, பெரியார் சுயநோக்கங்களைக் கொண்டிருக்கவுமில்லை, சுயலாபத்தை எதிர்பார்த்திருக்கவுமில்லை. 1968ல் யாழ்ப்பாணச் சாதியச் சிந்தனையை சிதறடிப்பதற்குக் கால்கோலாக அமைந்ததும் இதே சம்மட்டி அடிகள்தான். இதை துணிச்சலுடன் கையிலெடுத்தவர்கள் நா. சண்முகதாசனும் அவர் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியுமே!

இன்று, 60 ஆண்டுகால தமிழ்த் தேசிய சிந்தனை முறைமை மீதும், 30 வருடங்கள் கோலோச்சிய புலிகளின் ஆளுமை மீதும் அதிர்ச்சியூட்டும் வகையில் மின்சாரத்தைப் பாய்ச்சவேண்டிய காலமிது. இதே 60 ஆண்டு காலங்கள் இலங்கைத் தீவு முழுமையும் கோலோச்சிய சிங்கள தேசியத்தின் ஆளுமையையும் கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டிய காலமும் இதுதான். ஆனால் உள்ளகரீதியில் அவர்களுக்கான தேவையும் அவசியமும் கனிவதற்கு இன்னும் காலம் இருக்கிறது.; கலாச்சாரரீதியான, கருத்தமைவு முறைமையிலான எமது நடவடிக்கைகளின் வலிமையும் பெறுபேறுகளும்தான் அவர்கள் மீது பாதிப்பை உண்டுபண்ணும். அவர்கள் தங்களைத் தாங்களே கேள்விக்குள்ளாக்கும் காலத்தையும் அதுவே (எமது நடவடிக்கைகளின் வலிமையும் பெறுபேறுகளும்தான்) கனியவைக்கும்.

மேற்படி வகையிலான ஒரு பிறப்புத்தான் „பிரபாகரன்: ஓர் அவலத்தின் அடையாளம்“ எனும் இத் தேடல்! இக் கட்டுரையை வாசிப்பவர்கள், மே 18 இயக்கத்தின் வெளியீடாக கனடாவில் இருந்து வெளிவந்திந்த „வியூகம்“ அறிவுபூர்வ அரசியல் சஞ்சிகையில் பிரபாகரன் பற்றியும், விடுதலைப் புலிகள் பற்றியும் வந்திருக்கும் கட்டுரையையும் சேர்த்து வாசிப்பது சிறப்பு! மேலும் இது போன்ற கட்டுரையை அவருடன் இருந்து கூடப் பழகியவர்கள் யாராவது எழுத்தத் துணிந்தால் அவர்களையும் நாம் மனமார வரவேற்கின்றோம்.

இலங்கையில் யாழ்மாவட்டத்தில் கரையயோரச் சமூகத்தில் பிறந்த ஒருவர் தமிழ் சமூகத்தில் காத்திரமான ஓர் இடத்தைப் பிடித்திருப்பதுதான் பிரபாகரனது முக்கியத்துவம். பதின்ம வயதிலேயே (17) தமிழ் இனவிடுதலை நோக்கிய பயணத்துக்காக, தன்னை அர்ப்பணிக்கத் துணிந்த அவரது உணர்வுகள் மேன்மையானவை! பேர் மதிப்புக்குரியவை! இலங்கை வரலாற்றில், தமிழ்-சிங்கள-முஸ்லிம் சமூகங்களினாலும் மிக அவதானிக்கப்பட வேண்டிய அதிர்ச்சி தரும்வகையிலான ஒரு முக்கிய பாத்திரத்தை வகித்தவர் பிரபாகரன்.

அவரது இருப்பு தமிழ் சமூத்துக்குக் கிடைத்த ஓர் அற்புதப் படைப்பாகக் கருத்தப்பட்டது. நவீன உலகில் தமிழரின் தொன்மையை, புறநானூற்று வீரத்தை பறைசாற்றும் விதத்தில் அமைந்ததுதான் அவரின் பிறப்பு என்றும் சொல்லப்பட்டது! சூரியத் தேவன் என்றும், தமிழ் குமரன் (முருகன்) என்றும் அவரது இருப்பின் விந்தையைப் போற்றிப் புகழ்ந்தது தமிழ் தரப்பு! ஆனால் அவரது இறப்பு எவரும் எதிர்பாராத வகையில் முடிந்திருந்தது. மிகுந்த ஆச்சரியத்தையும் அளித்திருந்தது. எம்மைப் போன்ற பலரின் நித்திரையை பல நாட்கள் குழப்பியது.

2009 மே 17ந் திகதிய அவரது சரணடைவுச் செய்தி அவர்மீது செதுக்கப்பட்டிருந்த பல்வேறு சித்திரங்களையும், கட்டப்பட்டிருந்த உயர் சிகரங்களையும், கோட்டைகளையும் தகர்த்து தவிடுபொடியாக்கியது! ஆனால் ஒப்பற்ற உயரத்தில் வைக்கப்பட்ட ஒருமனிதனின் இறப்பு இன்று மூன்று ஆண்டுகளாகியும் அங்கீகரிக்கப் படாமலும், அவதானிக்கப்படாமலும் பராமுகமாக்கப்பட்டிருக்கிறது!

அவரது இறப்பு பேரவலத்துக்கு உட்பட்டது என்பது வெள்ளிடைமலை. ஆனால் இவரது அரசியல் வாழ்வு அவலத்துடன் ஆரம்பித்து, அவலத்துடன் நகர்ந்ததை பலர் ஊகித்திருக்கவோ, அறிந்திருக்கவோ வாய்ப்பில்லை. அத்தைகைய ஒரு ஆய்வுதான் இக்கட்டுரையின் சாரம்.

போத்துக்கீசர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆகியோர் எமது நாடுகளுக்கு படையெடுத்துபோது, அவர்களது இயங்கு திறன் பற்றிய, முன்னனுமானத்தையோ அன்றி முன்னறிவையோ பெற்றிருக்காததன் தார்ப்பரியம்தான், பண்டார வன்னியன், சங்கிலியன், வீரபாண்டிய கட்டப்பொம்மன் போன்ற தமிழ் மன்னர்களின் வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தது. இவர்கள் அடிப்படையாக் கொண்டிருந்ததெல்லாம் புறநாநூற்று வீரம் பற்றிய, மன்னர்களுக்கிடையிலான போர் பற்றிய கதைகளைத்தான்.

„பிரபாகரன் இவற்றையும் மீறி புறநாநூற்று வீரத்துக்கு சற்று மேலாகச் சென்று, தற்கொலைப் போராளிகளைப் பயன்படுத்துவது பற்றியும், நவீன ஆயுதங்களை கையாளும் முறைமைகளையும் தெரிந்திருந்தார். கெரில்லா யுத்தம் பற்றிய பன்மை அறிவையும் வளர்த்திருந்தார். ஆனால் உலகம் பற்றிய நவீன கோட்பாடுகளை, அரசியல் நடைமுறைகளை, சமூகம் பற்றிய அறிவியலை, இயங்கியல் முறைமைகளை அறிந்திருக்கவில்லை. அறிந்துகொள்வதற்கு ஆர்வம் காட்டவும் இல்லை. நவீன உலகம் பற்றிய புரிதல் இன்மை, இவரை மாபியா (Mafia) வழி அரசியலுக்கு இட்டுச் சென்றதுடன், இவரது அவலங்களுக்கான அடிப்படையாகவும் அமைந்தது. ஆனபோதும், அப்பாத்துரை அமிர்தலிங்கத்தின் சந்திப்பும் அவருடனான தொடர்புகளும்தான் பிரபாகரனின் அவலத்துக்கான ஆரம்பம் என்று கூறுவதில் தப்பேதுமில்லை!

யாழ்ப்பாணச் சமூகத்தைப் பொறுத்தவரை பதின்ம வயது என்பது படிப்புக்குரிய வயது. அந்த வயதில் படிப்பில் கவனம் செலுத்தத் தவறும் பக்கத்து வீட்டுப் பி;ள்ளைகளையும் கூட, -பூவரசம் தடியைப் பிடுங்கி முழங்;காலுக்குக் கீழ் அடிபோட்டு- கண்டிக்கின்ற சமூகம்தான் யாழ்ப்பாணத்துச் சமூகம். பிரபாகரன் பிஸ்ரலுடன் அமிர்தலிங்கத்தைச் சந்திக்கச் சென்றதும் இதே வயதில்தான். அப்போது, இதே வயதை ஒத்த அல்லது சற்றுக் கூட, குறைந்த வயதை உடைய வாலிபப் பையன்களுக்கு தந்தையாக இருந்தவர் அமிர்தலிங்கம் அவர்கள். அதே தந்தைக்குரிய பண்புகளுடன் படிப்பின் முக்கியத்துத்தை எடுத்துரைக்கும் வகையில் பிரபாகரனை அணுகியிருக்கவில்லை அமிர்தலிங்கம் அவர்கள். பதிலாக ~தியாகி’ - ~துரோகி’ எனும் பதப் பிரயோகங்கள் மூலம் உசுப்பேத்தி தனது அரசியல் எதிரிகளைத் தீர்ததுக்கட்டுவதற்கான பகடைக் காய்களாக பயன்படுத்திக்கொண்டார் பிரபாகரனையும் அவரது நண்பர்களையும். இந்த வாலிபர்கள் வெளியில் இருந்தால் தமக்குத் தொல்லை என்பதை உணர்ந்த அமிர்தலிங்கம், துரையப்பா கொலை மூலமாக தலைமறைவு வாழ்வுக்கும் அனுப்பிவைத்தார். தொடர்ந்து பல கொலைகளை மேற்கொள்வதற்கும் இதுவே சாதகமாக அமைந்தது.

1960களின் மத்தியில் இருந்து 1970களின் ஆரம்ப காலம் வரை தமிழ் வாலிபர்கள் மட்டுமன்றி சிங்கள வாலிபர்களும் கூட சண்முகதாசனின் அரசியற் கோட்பாடுகளினால் கவரப்பட்டனர். ஜே வி பி தலைவர் றோகன் விஜயவீரா அவர்கள் இவரது கட்சியில் இருந்து பிரிந்து சென்ற பின்புதான் ஜே வி பி;யை உருவாக்கினார். தமிழ் மாணவர்கள், வாலிபர்கள், இளைஞர்கள் பலரும் மாக்சீய அறிவியல் மூலம் நவீன அரசியலைப் புரிந்துகொள்ள முனைப்பட்டதும் இதே காலகட்டத்தில்தான். பிரபாகரன் இத்தகைய நவீன அறிவியல் சார் அரசியலைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பை பெற்றிருக்கவில்லை. அதில் ஆர்வப்பட்டிருக்கவுமில்லை. அவரது அரசியல் வாழ்வு அவலத்தில் முடிந்ததற்கான முக்கிய காரணமும் இதுவே!

இத்தகைய நிலைமைகளில் பல பலவீனங்களுக்கு மத்தியிலும் பிரபாகரன் தலைவர் ஆனமை மிகுந்த ஆச்சரியத்துக்குரிய விடயமே! „ஆற்றல் மிகு கரத்தில் ஆயுதம் ஏந்துவதே மாற்றத்திகான வழி“ என்று துணிந்த சாதியத்துக்கு எதிரான சண்முகதாசன் அணியினரின் போராட்ட வழியினை அடுத்து, ஜே வி பி கிளர்ச்சின் தாக்கங்களும் சேர்ந்து, தமிழ் இளைஞர்கள் மத்தில் ஆயுதப்போராட்ம் பற்றிய கருத்தியலை வேரூன்றச் செய்த காலமது. பிரபாகரனும் அவரது குழுவினரும் ஆங்காங்கே பல்வித வன்முறை வழிகளில் காவல்துறையினருக்கு அச்சுறுத்தலாக இருந்து வந்தனர். இதுவே, 1983ல் யூலையில் 13 இராணுவத்தினரை பலிகொள்ள வைத்த ராணுவ றக்கின் மீதான தாக்குதலாக மாறியது! இதைத் தொடர்ந்தும், இதன் எதிர் வினையாகவும்; சிங்களத்தேசியம் கட்டவிழ்த்துவிட்ட வன்முறையினால் தமிழ்த் தேசியப் பிச்சனை பூதாகர நிலைமையை அடைந்தது.

தமிழர் விடுதலைப் போராட்டம், குருவியின் தலையில் பனங்காயைக் கட்டிவிட்ட நிலைக்குட்பட்டது! தமிழ் தேசியத்தை கையிலெடுக்கும் நோக்கில் வௌ;வேறு அமைப்புக்கள் உருவாகின. சிறிய சிறிய குழுக்களாக உருவாகிய தமிழ் இளைஞர் அமைப்புகளுக்கு கொள்கை ரீதியான முடிவுகளை விவாதிப்பதற்கும் வலுப்படுத்துவதற்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் என காலஅவகாசம் தேவைப்பட்டது. இதே குழப்பங்களும் குளறுபடிகளும் விடுதலைப் புலிகளையும் ஆட்கொண்டிருந்தது. கொள்கை கோட்பாடுகள் என்பவற்றுக்கு அப்பால், ஆயுதப் போராட்டம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டிருந்த இளைஞர்கள் மத்தியில், புலிகளின் கீழ்நிலை உறுப்பினர் ஒருவர், வயதில் இளையவராக இருந்ததனால் தம்பி என்று அழைக்கப்பட்டவர், வன்முறைகள் மீதான பல்வேறு அனுபவங்களைக் கொண்டிருந்த செயலூக்கம் மிக்க இளைஞன் ஒருவன் தனது தலையை நிமிர்த்திக்கொண்டான். எப்போதும் எதையும் சந்தேகிக்கும் மனநிலையையும், தன் உயிர்மீதான அவதானத்தையும் மட்டும் மூல ஆதாரமாகக் கொண்டு இயங்கத் தலைப்பட்டான்.

நிலப்பிரபுத்துவத்தின் எச்சங்களும் அதன் பண்புகளும் நிறைந்திருக்கும் ஒரு குறைவளர்ச்சி நாடு இலங்கை. ஐரோப்பிய நாடுகளின் முதலாளித்துவத்துக்குரிய மனித உரிமை ஜனநாயகப் பண்புகளை (இங்கும் 1970களின் பிற்பகுதியில்தான் வேரூன்றத் தொடங்கிய) இலங்கையில் எதிர்பார்க்க முடியாது. ஆண்களின் அசைவுகளுக்கு ஏற்ப பெண்கள் இயங்கவேண்டும். அண்ணன் சொல்வதை தம்பி கேட்க வேண்டும். தலைவன் சொல்வதை மக்கள் சிரமேற்கொள்ளவேண்டும். இத்தகைய பிரபுத்துவப் பண்புகளை தனது இருப்புக்கு அனுசரணையாக்கிக்கொண்டார் தம்பி பிரபாகரன். இளைஞர்கள் மத்தியில் செயல்திறன் மிக்க பிம்பத்தையும் உருவகப் படுத்திக்கொண்டார். தாம் சந்தேகிக்கும் அனைவரையும் துரோகி என்ற வட்டத்துக்குள் இழுத்துவந்து போட்டுத்தள்ளினார். ஒருகையில் இனவிடுதலைக்கான ஆயுதத்தையும் மறு கையில் மக்களை தம் வயப்படுத்துவதற்கான உளவறியும் முறைகளயும் வன்முறைகளையும் ஒருங்கே கையில் எடுத்துக்கொண்டு தலைவர் ஆனார். காலம் காலமாக தமிழர் சிந்தனையைக் குடைந்துகொண்டிருந்த, தமிழர் வீரம் பற்றிய புறநானூற்றுக் கதைகள் இளைஞர்களின் துணிச்சலுக்கும், தியாக மனப்பான்மைக்கும் நெய்யூற்றின.

83ன் வன்முறையைத் தொடர்ந்து ஆயுதத்தை கையில் எடுப்பதை ஒரு கவர்சிக் கலாச்சாரமாக மாற்றிக்கொண்டது தமிழ் இளைஞர் சமூகம். அவ்வேளை ஆயுதங்களைக் கையகப்படுத்துவதற்கான ஒரு மையமாகவும் கெரில்லாத் தாக்குதல் வழியில் முன்னிற்பவர்களாகவும் தம்மை முன்னிறுத்திக்கொண்டது விடுதலைப் புலிகள் அமைப்பு பிரபாகரனின் தலைமையில். ஏனைய பல நாடுகளில் கெரில்லாத் தாக்குதல்கள் போராளிகளின் திறனை அடிப்படையாகக் கொண்டிருந்தபோது, தற்கொலைத் தாக்குதல்கள்தான் புலிகளின் போர்த் தந்திரமாக அமைந்தது. தற்கொலைப் போராளிகள், கரும்புலிப் போராளிகள் எனத் தொடர்ந்து கடற்படை, தரைப்படை என்று உயர் நிலையையும் எட்டியது. பிரேமதாசாவுடன் கூட்டுச் சேர்ந்து இந்தியப் படையை திருப்பி அனுப்புவதிலும் வெற்றி பெற்றது. ஆனையிறவுத் தாக்குதல்களிலும் வெற்றிவாகை சூடியது. இந்தச் சந்தர்ப்பத்தில்தான் உலக நாடுகள் விழித்துக்கொண்டன. ஆனால் வரப்போகும் ஆபத்தை உணர்ந்திராத தமிழ் தேசியத்தின் அறிவு மட்டம் பிரபாகரனை தேசியத் தலைவர் நிலைக்கு உயர்த்தியது! சில சமயங்களில் இவர் போராளிகளின் முகாமுக்கு வந்து சமையல் செய்து தாமே பகிர்ந்தளிப்பது, ஓடும் அணிலை குறிதவறாமல் சுடுவது போன்ற போராளிகளைக் கவர்ச்சிப்படுத்தும் சிறுபிள்ளைத்தனமான செயற்பாடுகளையெல்லாம், பிரபாகரனின் பெருமிதத்துக்குரிய ஆற்றல்களாக மாற்றிக்கொண்டது தமிழ்ச் சமூகம். அவரை குழு நிலையில் வைத்திருக்கச் செய்யும் வகையில் அவரது அகவை 50ஐயும் கொண்டாடிக் குதூகலித்தது!

ஆனால் பிரபாகரனின் அவலம், சர்வதேசம் விழித்துக் கொண்ட அபாயகரமான இந் நிலைமகளில் கூட, சர்வதேசம் பற்றிய அரசியற் கோட்பாடுகளைப் புரிந்துகொள்வதற்கு முனைந்திருக்கவில்லை. பணம் சேர்ப்பதில் இருந்து, சிறுவர்களை படையில் சேர்ப்பது மற்றும் புத்திஜீவிகளை உள்வாங்குவது அல்லது போட்டுத்தள்ளுவது, மக்களை ஓர் அச்ச நிலைமையில் வைத்திருப்பது வரையிலான தொடர்ச்சியான தமது மாபியா வழியிலான அரசிலை கைவிட்டிருக்கவில்லை.


இவ்விதமாக அவரது அறிவுமட்டம் வளர்ச்சிடையாததன் வெளிப்பாடு…

„தன்னளவில் ஒடுக்குமுறையைக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்தின் விடுதலை என்பது மிகக் கடுமையானது“ அதாவது தன்னுள் வைத்திருக்கும் முழு வளங்களையும் சரிவரப் பயன்படுத்தும் பட்சத்தில்தான், ஒடுக்குமுறைக்குட்பட்டிருக்கும் ஒரு சிறுபான்பைச் சமூகத்தின் விடுதலை சாத்தியமாகும். ஆனால் பிரபாகரன் இச் சூத்திரத்தின் உள் அர்த்தத்தைப் புரிந்திருக்கவில்லை. புரிந்துகொள்ளத் தலைப்படவும் இல்லை. தன்னார்வத்துடன் இயங்கி வந்த பல சமூக அமைப்புக்களுக்கு தடைவிதித்தார். சன சமூக நிலையங்களைக் கூட தமது கட்டுப்பாட்டுக்குள் மட்டுமே இயங்க வைத்தார். முஸ்லிம்களை ஒடுக்கினார். சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிரான சாதிய அமைப்புகக்களை இயங்க விடாமல் தடுத்தார். மற்றும் தமிழ்த் தேசியம் எனும் ஒரே நேர்கோட்டில் பயணித்த அனைத்து விடுதலை அமைப்புக்களுக்கும் சாவுமணியடித்தார்.

யாழ்ப்பாணச் சமூகத்தின் வெள்ளாளரிய சாதிய சிந்தனையின் பொறிமுறையையும் இவர் விளங்கியிருக்கவில்லை. மதிவதனியை மணம் முடித்ததன் மூலம் சமூகத்தில் சமத்துவம் அடைந்ததாக எண்ணிக்கொண்டார். 2009 போர் முடிந்த சில நாட்களில் ஓர் பேராசிரியர் தனது மனக்கவலையை தனது பழைய மாணவி ஒருவரிடம் இப்படி வெளிப்படுத்தினார்… „எடியே… பிள்ளை ~எங்களுக்கு’ ஒண்டும் தெரியாது எண்டு சொல்லுற உவங்கள் இனி ~எங்களுக்கு’ ஒண்டுமே தெரியாது எண்டு சொல்லப்போறாங்கள்“ என்று. அவரது இறுதிக்கால அவலத்திற்கு வெள்ளாளரியத்தின் பொறிமுறையும் காரணமாக அமைந்ததை இறுதிநேரத்திலாவது உணர்ந்துகொண்டாரோ என்னவோ?

தனது அமைப்புக்குள் ஏற்பட்ட உட்கட்டுமான பிரச்சனைகளை புத்திபூர்வமான முறையில் கையாள்வதற்கு, எதையும் சந்தேகிக்கும் அவரது இயல்பான குணம் தடையாக இருந்தது. பாரிய தவறுகளைப் புரிவதற்கும் வழிகோலியது. மாத்தையவைப் போட்டுத்தள்ளியதை தவிர்த்துப் பார்த்தாலும், பொட்டம்மானுக்கும் கருணாம்மானுக்கும் இடையிலான பிரச்சனையில் இவரது அணுகுமுறையை நோக்கலாம். இலங்கை ராணுவத்தின் பல்வகைப் படையணிகளை தோற்கடிப்பதில் முன்னணித் தளபதியாக இருந்த ஒருவரை மட்டுமன்றி இதன் மூலம் ஒரு பிரதேசத்தையே இழந்துவிடுகிறோமே எனும் பிரக்ஞை அற்றவராக இருந்தார் பிரபாகரன். பிரிந்து சென்ற கிழக்கிலங்கைப் பெண் போராளிகள் சரணடைந்து மீளவும் இயக்கத்தில் இணைய முற்பட்டபோது அவர்களைக் கொலைசெய்து (புலிப் போராளிகளால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டார் எனும் தகவலும் உண்டு) பழிவாங்கியதன் மூலம், கிழக்கு மக்களின் ஆண்டாண்டு காலப்பழிக்கு உள்ளானதும் பிரபாகரன் தனது இறுதிக் காலத்துக்கு முன்பு சுமந்துகொண்ட பேரவலம்!

ஒட்டுமொத்த தேசத்தின் உள்ளார்ந்த பிரச்சனைகளை அவரால் புரிந்துகொள்ள முடியாமல் போனதுடன் தேசத்துக்கும் சர்வதேசத்துக்கும் இடையிலான உறவுக்கும், முரணுக்கும் இடையிலான நுண்ணிய வேறுபாடுகளை இவரால் விளங்கிக்கொள்ள முடிந்திருக்கவில்லை. சிங்களச் சமூகத்தில் தனியாளுமை பெற்றிருந்த பிரேமதாசவுடன் தொடர் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்குப் பதிலாக இந்திய ராணுவ வெளியேற்றத்துடன் அவரின் உயிரைப் பலியெடுப்பதை போர்வெற்றியாக நினைத்தார். சந்திரிகாவின் பேச்சுவார்த்தையில் பொறுமையிழந்தார். அமெரிக்காமுறை ஜனநாயகத்தில் நம்பிக்கைகொண்டிருந்த ரணில் விக்கிரமசங்காவைத் தோற்கடித்து, மகிந்த ராஜபக்சாவை ஆணையில் இருத்தியதன் மூலம் தனக்கான சவக்குழியை தாமாகவே அமைத்துக்கொண்டார்.

மேலும் சர்வ தேசமும் எதிர்பார்த்திருந்த இவரது மாவீரர் உரையின் உள்ளடக்கம் (இவர் எழுதியதாக நம்பினாலும்) வெறுமனே நடைமுறை அரசியல் பற்றி விளம்பியதே அன்றி, நவீன அரசியற் கோட்பாடுகள் பற்றி எடுத்தியம்பியதில்லை. இதன் மூலம் சர்வதேச அரங்கில் இவரது அரசியல் ~ஞானம்’ வெள்ளிடைமலையாகியது. அறிவை அறியமுடியாத ஒருவர் நவீன சிந்தனையை அறிந்துகொள்ள ஆர்வப்பட்டிருப்பார் என்று எண்ணிவிட முடியாது. ஆதனால்தான் எறிக் சொல்கைம் „சர்வதேச அரசியலில் இவர் ஒரு கற்றுக்குட்டி“ என்று பிரபாகரன் பற்றிய தனது புரிதலை வெளிப்படுத்தினார். அனைத்துக்கும் மேலாக இறுதிக் கட்டத்தில் இவர் குமரன் பத்மநாதன் (கே பி) எனும் தனிமனிதனை முழுமையாக நம்பியதும், அமெரிக்காவின் கப்பலைக் காத்திருந்து, தப்பி ஓடுவற்கானான வாய்ப்புக்களை தவறவிட்டதும் இவரது சர்வதேச அரசியல் அறிவைப் புலப்படுத்தும் மேலதிக புள்ளிகளாகும்’’.

புலிகளின் அரசியல் சித்தாந்தவாதியாக திகழ்ந்தவர் பாலா அண்ணன் அன்ரன் பாலசிங்கம் அவர்கள். அரசியலில் இவர் ஓர் அறிவுபூர்வமான புத்திஜீவியாகத் தோன்றியவர்! ஆனால் மாற்றத்திற்கு உட்பட்டிருக்கும் நடைமுறை உலகின் நவீன கோட்பாடுகளையோ தத்துவங்களையோ இவர் புரிந்திருக்கவில்லை. அதற்கான கடும் உழைப்பைச் செலுத்துவதற்கு அடிமையாகிப் போன இவரது மதுப்பழக்கம் தடையாக அமைந்தது. அதனால் இவர் அரசியல் ஆலோசகர் என்பதற்குப் பதிலாக, பிரபாகரனின் நடவடிக்கைகளுக்கு அரசியல் விளக்கமளிக்கும் ஒரு பொழிப்புரையாளராக (ஐவெநசிசநவழச) மாறினார்.

அடுத்து பிபாகரைனைச் சூழ்ந்திருந்த மிக முக்கிமாவர்களாக, பிரபாகரன் புகழ்பாடியாக விளங்கிய இரத்தினைதுரையையும், கட்டுண்டிருந்த பாலகுமாரனையும் குறிப்பிடலாம். இவர்களது அரசியல் ஞானம் பற்றி ஆய்வதை விட, பிரபாகரனுக்கு சேவை செய்யும் வாய்ப்பை மட்டுமே பிரபாகரன் இவர்களுக்கு வழங்கியிருந்தார். ஏனைய தளபதிகளும் போராளிகளும் அரசியல் ஞானம் குன்றியவர்களாக இருந்தார்களோ இல்லையோ, பிரபாகரனுக்கு ஆலோசனை வழங்குவதற்கான துணிச்சலை அவர்கள் பெற்றிருக்கவல்லை. அந்தளவுக்குத்தான் உள்ளக ஜனநாயகத்தை வழங்கியிருந்தார் என்பதும் அவலத்தின் அடையாளமே!

அடுத்து பொட்டம்மான்! நாம் அறிந்த தகவல்கள் சிலவற்றின் பிரகாரம், பிரபாகரன் ஓர் சந்தேகியாக இருந்தபோதும், அவர் ஒருவரை நம்பிவிட்டால், நம்பிக்கைக்குரிய அந்நபரின் கூற்றுக்களை, தர்க்கரீதியான அல்லது கோட்பாட்டு ரீதியான எந்த அணுகுமுறையும் இன்றியே ஏற்றுக்கொண்டுவிடுவார் என்பதும் அவரது அவலத்துக்கான காரணங்களில் ஒன்றாகும். அவ்வகையில் பொட்டம்மான் உளவுப் பிரிவின் உயர் பொறுப்பாளியாக இருந்தவர் என்பதனால் அவரது முடிவுகளை ஆய்வுக்குட்படுத்தியிருக்கவும் வாய்ப்பில்லை! அதே சமயம் முடிவுகளை முன்வைக்கும் முறைமையில் பொட்டம்மான் எந்தளவுக்கு காத்திரமான பங்கை ஆற்றியிருப்பார் என்பதும் விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டிய விசயமே!

பொட்டம்மானின் உளவுத்துறை அறிவுதான் மக்கள் நாட்டை இழந்து, நகரை இழந்து, ஊரை இழந்து உற்றாரை இழந்து, காட்டை இழந்து கடைசியில் வீட்டையும் (பங்கர்) இழக்கும் அவலத்துக்கு உள்ளாக்கியது!

இவ்விதம், தனது சொந்த அறிவை மேம்படுத்தாமலும், சூழ இருந்தவர்களின் ஆலோசகைள உள்வாங்கிகொள்வதற்கு முனையாமலும், நம்பிக்கைக்குரியவர்களின் ஆலோசனைகளை ஆய்வுக்குட்படுத்தாமலும் தனது சொந்த அனுபவத்தின் மூலம் தனது தலைமையை வலுப்படுத்தியவர்தான் பிரபாகரன். விரிந்து பரந்த இவ் உலகில், மிகச் சுருங்கிய தனது சொந்த அனுபவத்தை மட்டும் படிப்பினையாகக் கொண்டு, ஓர் இனத்தையே கையாளத் துணிந்தமைதான் அவரது தனிப்பட்ட அவலங்களுக்கு மட்டுமன்றி, முழு இனத்தினது அவலங்களுக்கும் கால்கோளாகியது!

பொட்டம்மானின் உளவுத்துறை அறிவினால் எதிரியின் பலத்தை அறிவதற்கு முடியாமல் போனது. புலிகளின் பலவீனத்தை உணர்வதற்கும் வழி செய்யவில்லை! தமது தளப்பிரதேச வாழ்க்கையை நிரந்தர வாழ்விடமாக நினைக்க வைத்தது. எதிரி இவ்வளவு பலத்துடன் உயிர்ப்பான் என்பதை உய்த்துணர முடியாமல் போனது. சமாதான காலத்து வாழ்க்கை முறை இவர்களது உடற்பருமனை அதிகரிக்கச் செய்தது. இயங்கு திறன் குன்றிப்போவதற்கும் வழி வகுத்தது. கருணாவின் பிரிவு எதிரியை வலுப்படுத்தியது. தற்கொலைத் தாக்குதல் முறையை நிறுத்தும்படி சர்வதேசம் அழுத்தியது.

இவ்விதம் பல்வேறு காரணங்களினால் குன்றிப்போயிருந்த தமது பலவீனத்தை மறைப்பதற்கான கடைசி ஆயுதம்தான் புலிகளின் வான்வெளித் தாக்குதல்! இந்தியாவைக் கோபப்படுத்தியதும் இதுவே! இச் சிறு விமானம்தான் புலிகளுக்கு எதிராக சர்வதேசத்தையும் ஒருங்கிணைத்த போர்க் கருவி! ஆயுதத்தால் மட்டும் எதிரியை வீழ்த்திவிடலாம் என எண்ணிய பிரபாகரனின், புலம்பெயர் தமிழ் சமூகத்தின் சிந்தனை மீது வீழ்ந்த பேரிடியும் இதுவே!

ஆனால் பிரபாகரனின் இறுதி முடிவில் பல்வேறு அவலங்கள் தேங்கி வழிகின்றன. 25 ஆண்டுகள் கோலோச்சிய ஒரு தலைவன்! இறுதி யுத்தத்தில் முடிவுகளை எடுப்பதற்கு திணறியமை! ஆயிரக்கணக்கில் இளந் தலைமுறை உறவுகளின் கழுத்தில் சையனைட்டைக் கட்டுவித்து, ~~செய் அல்லது செத்து மடி’’ என்று உணர்ச்சியூட்டி போர்க்களத்துக்கு அனுப்பிவைத்த நம்பிக்கைக்குரிய தலைவன், ஆயிரம் ஆயிரம் விடுதலை வித்துக்களின் ஆத்ம அமைதியைக் குலைக்கும் விதத்தில் தனது உயிரை முதன்மைப் படுத்தி எதிரியின் காலடியில் பணிந்தமை! 17 வயதில் தான் நம்பிய சித்தாந்தத்துக்காக, போராட முனைப்பட்டு, பல்வேறு பரிமாணங்களின் ஊடாக உயர் நிலையடைந்து இறுதியாக தனது மூன்று பிள்ளைகளையும் மனைவியையும் ஓருசேர பலி கொடுத்தமை! இத்தனை அவலங்களைச் சுமந்த மனிதன் தானும் போராடி மரணித்திருந்தால், தானே வகுத்த வழியில் சயனைட்டை உட்கொண்டிருந்தால் மிகவும் இலகுவான முடிவை தழுவியிருக்க முடியும் என்பதைக்கூட புரிந்திருக்கவில்லை என்பதே அவலத்தில்; அவலம்!

அதனிலும் மேலான அவலம், அவர் சரணடைந்ததும், மனித உரிமை மீறல்களுக்கு உட்பட்ட வகையில் பிரபாகரன் கொல்லப்பட்டதும் பேரின தேசியவாதிகளுக்கும், தமிழ் தேசியத்திற்கும் தெரிந்த ஓர் உண்மை! ஆனால் இரு பகுதியினரும் உண்மைகளை மறைக்கின்றன! ஒரு பகுதி தமது மனித உரிமையை மீறிய குற்றச் செயல்களை மறைப்பதற்காக! தமிழ் தரப்பு ஒரு மனிதனின் இருப்புக்கான தன்னுணர்வையும் மீறி புறநாநூற்று வீரத்தை தக்கவைப்பதற்காக! அல்லது அதன் மீதான பொய்ம்மையை மேலும் நிலை நிறுத்துவதற்காக! அல்லது தலைவனின் தோல்வியில் துவண்டுபோன வெட்கத்தை மறைப்பதற்காக!

எம்மைப் பொறுத்தவரை பிரபாகரனின் சரணடைவு முடிவு சாதாரண மனிதனின் இருப்புக்கான ஒரு முயற்சி! அவ்வளவுதான்!

நாங்கள் அவரை தமிழ் குமரன் என்றோ, சூரியத் தேவன் என்றோ, சாகத் துணிந்தவன் என்றோ கற்பனையில்கூட நினைத்ததில்லை! தமிழ் தேசியத்தின் யதார்த்தத்தையும் அவ்விதமே புரிந்துகொள்வோம்!

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com