Thursday, November 10, 2011

PLOTE யிடம் சித்திரவதை முகாமா? நிரூபித்தால் அரசியலிலிருந்து விலகுவோம் என்கிறார் சித்தர்

சித்திரவதைகளுக்கெதிரான ஐ.நா மன்றக்குழுவின் ஜெனீவா அமர்வில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து நேற்று ஆராயப்பட்டபோது, இந்தக்குழுவின் துணைத் தலைவரான பெலிஸ் கியர் இலங்கையில் பாரிய மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக தமக்கு பல புகார்கள் வந்ததாக கூறியதுடன் இலங்கையில் ஏழு இரகசிய முகாம்கள் இருப்பதாகவும் அங்கு முன்னாள் புலி உறுப்பினர்கள் 700பேர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

வவுனியா பூந்தோட்டம் கல்லூரி, வவுனியா 211வது பிரிகேட்டின் தலைமையகம், வெளிக்குளம் பாடசாலை, புளொட் அமைப்பின் வவுனியா தடுப்புமையம், தர்மபுரத்திற்கு பகுதியில் கைவிடப்பட்ட ஐந்து வீடுகள் மற்றும் கட்டிடங்கள், முல்லைத்தீவில் இரு முகாம்கள் என்பன இரகசிய தடுப்பு முகாம்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த விடயத்தில் புளொட் அமைப்பின்மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுப் பற்றி அந்த அமைப்பின் தலைவர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களை பி.பி.சியின் ஊடகவியலாளர் சுவாமிநாதன் அவர்கள் தொடர்புகொண்டு கேட்டிருந்தார்.

சுவாமிநாதனின் கேள்விகளுக்கு பதிலளித்த திரு. சுpத்தார்த்தன் தமது அமைப்பு எங்காவது இவ்வாறான முகாம்களை நடாத்தியாதாக எவரும் நிரூபிப்பார்களாயின் தாம் அரசியலிலிருந்து ஒதுங்கிச் செல்வதாக தெரிவித்துள்ளார்.

பேட்டி வருமாறு:

ஊடகவியலாளர்: இந்த விடயத்தில் புளொட் அமைப்பின்மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுப்பற்றி என்ன கூறுகின்றீர்கள்?

சித்தார்த்தன்: அப்படியான ஒரு முகாம் எமது அமைப்பிடம் இல்லை. முன்பும் இருந்ததில்லை. அவர்கள் கூறுகின்ற வவுனியா ஹொரவப்பத்தானை வீதியில் இருக்கின்ற எங்கள் அலுவலகம் மக்கள் வந்து எங்களைச் சந்திக்கின்ற ஒரு அலுவலகமாக முன்னர் இருந்திருக்கின்றது. அங்கு நானும் அடிக்கடி சென்று பணிபுரிந்திருக்கின்றேன். நான் இங்கிருந்து செல்லுகின்றபோது அங்குதான் மக்கள் சந்திப்புக்களை ஏற்படுத்துவது வழக்கம். யுத்தகாலத்தில் புலிகள் எங்களைத் தாக்கியபோது தற்பாதுகாப்புக்கருதி எங்களுக்கு இராணுவத்துடன் ஒரு உறவு இருந்தது. யுத்தம் முடிந்தபின்பு இடம்பெயர்ந்த மக்கள் இருந்த இடைத்தங்கல் முகாம்களுக்குள்கூட இராணுவம் எங்களை அனுமதித்திருக்கவில்லை. ஆகவே இப்படியான குற்றச்சாட்டுக்களை முற்றுமுழுதாக நான் நிராகரிக்கிறேன். இதை யாராவது நிரூபிக்க முடியுமென்றால் நாங்கள் அரசியலில் இருந்துகூட ஒதுங்குவதற்குத் தயாராக இருக்கின்றோம்.

ஊடகவியலாளர்: இது குறித்து மனித உரிமை இயக்கங்களோ அல்லது தன்னார்வ இயக்கங்களோ இந்த மாதிரியான ஒரு அறிக்கை தயாரிக்கப்படுவதற்கு முன்பு உங்களிடம் கருத்துக் கேட்டார்களா?

சித்தார்த்தன்: இல்லை, கேட்கவுமில்லை. அவர்கள் அந்தப் பகுதிக்கு சென்றதாகவும் நான் நம்பவில்லை. யாரும் சொன்னதைக் கேட்டு வைத்துக்கொண்டு அது இந்த அறிக்கையில் உள்வாங்கப்பட்டிருக்கிறது என்றுதான் நான் நினைக்கின்றேன். வவுனியா ஹொரோவப்பத்தானை வீதியில் ஒரு அலுவலகம் இருந்தது. யுத்தம் முடிந்து சொற்ப காலங்களுக்குள் அதை நாங்கள் மூடி உரிமையாளரிடம் கையளித்துவிட்டோம். அவர்கள் அதை வேறு யாருக்கோ வாடகைக்கு கொடுத்திருக்கின்றார்கள்.

ஊடகவியலாளர்: எந்த ஒரு காலகட்டத்திலும் போருக்கு பிறகு அல்லது போர்க்காலத்தில் கூட புலிகள் இயக்க உறுப்பினர்களை நீங்கள் உங்களது முகாம்களிலே வைத்து விசாரித்து இராணுவத்திடம் கையளித்தது உண்டா?

சித்தார்த்தன்: இல்லை, அப்படியான அனுமதிகள் என்றுமே அவர்கள் எங்களுக்கு தந்தது கிடையாது. அதை நாங்கள் விரும்பியதும் கிடையாது. நிச்சயமாக எங்களைத் தாக்கவந்த இடங்களில் சிலவேளைகளில் எங்களைப் பாதுகாப்பதற்காக நாங்கள் வைத்திருந்த ஆயுதங்களைப் பாவித்து தாக்குதல் நடத்தியிருக்கலாம் அதாவது எங்களைத் தாக்குகின்றபோது தற்காப்புத் தாக்குதல்கள் நடத்தியிருக்கின்றோமே தவிர இதற்கென்று தேடிப்பிடித்து அவர்களை விசாரிக்கின்ற வேலைகள் எதையும் நாங்கள் செய்யவில்லை.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com